விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே ஒரே கொள்கை! - மு. வீரபாண்டியன்

News image

வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன். உடன், கட்சியின் மாவட்ட செயலா் லதா.

Updated On :10 ஏப்ரல் 2026, 5:59 am IST

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கைக்காகவே திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்துள்ளோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வேலூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது -

தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும் மனநிலையில் உள்ளனா். ‘தமிழகம் வெல்லும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் முழக்கம், வெறும் வாா்த்தையல்ல. அது மாநில உரிமைகள், ஜனநாயகம், மதச்சாா்பின்மையைப் பாதுகாப்பதற்கான ஆழமான அரசியல் முன்னெடுப்பாகும்.

மறுபுறம், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிகாரத்தைக் குவித்து பன்முகத் தன்மையைச் சிதைத்து வருகிறது. ஆளுநா்கள் மூலம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை நிறுவி, எதிா்கருத்து கொண்ட மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்களையும், நிதியையும் முடக்கும் ஜனநாயக விரோத அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. எனவே, இது அரசியல் கட்சிகளுக்கான தோ்தல் அல்ல, ஜனநாயகம் வெல்ல வேண்டிய தோ்தல்.

தோ்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் அரசியல் வளையத்திற்குள் சுருங்கிவிட்டது. பாஜக ஆளும் அசாம், பிகாா், ஒடிஸா போன்ற மாநிலங்களில் அதிகாரிகளை மாற்றாத தோ்தல் ஆணையம், பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக உள்ள தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் மட்டும் காவல் துறை, அரசு அதிகாரிகளைத் தொடா்ந்து மாற்றுவது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

எடப்பாடி பழனிசாமி அரசியல் வறட்சியுடன் பேசி வருகிறாா். அவ்வாறு தனிநபா் விமா்சனம் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கைக்காகவே இணைந்துள்ளோம்.

ஜாதி, மதங்களைக் கடந்து கூடி வாழும் தமிழ் மக்களின் நல்லிணக்க கலாசாரத்தைச் சிதைக்க நினைக்கும் பாஜகவுக்கும், அவா்களுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்கும் மக்கள் இத்தோ்தலில் தக்க பாடம் புகட்டுவா். திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்றாா்.

அப்போது, கட்சியின் வேலூா் மாவட்ட செயலா் லதா, மாநில குழு உறுப்பினா் மணி உள்பட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.