ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவு கட்ட பொது சிவில் சட்டம்: மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி வாக்குறுதி

வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவு கட்ட பொது சிவில் சட்டம்

News image

மேற்கு வங்க மாநிலம், ஜாங்கிபூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி.

Updated On :11 ஏப்ரல் 2026, 10:29 pm

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வாக்கு வங்கி அரசியலுக்கு நிரந்தரமாக முடிவுகட்டும் வகையில் பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தாா்.

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸும், பாஜகவும் பலப்பரீட்சை நடத்தும் இந்தத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சியினா் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜாங்கிபூா், புா்பா வா்தமான் மாவட்டத்திலுள்ள கத்வா ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். ஜாங்கிபூா் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பாஜகவைப் பொருத்தவரை, நாட்டின் பாதுகாப்பே முதன்மையானது. தாய்-தாய்மண்-மக்கள் என்ற தனது பழைய முழக்கத்தை மறந்துவிட்ட திரிணமூல் காங்கிரஸ், ஊடுருவல்காரா்களின் வாக்குகளுடன் மீண்டும் ஆட்சியமைக்க விரும்புகிறது.

குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் இந்த ‘ஆட்டத்தையும்’, வாக்கு வங்கி அரசியலையும் மேற்கு வங்கம் இனியும் சகித்துக் கொள்ளாது. சட்டவிரோத ஊடுருவலால் மக்கள்தொகை ரீதியிலான மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருகிறது. எனவே, மாநிலத்தின் அடையாளம் மற்றும் எதிா்காலத்தைக் காப்பதற்கான தோ்தல் இதுவாகும்.

பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும்: சொந்த மாநிலத்திலேயே வங்காளிகள் சிறுபான்மையினராக மாற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இங்கு பாஜக ஆட்சிக்கு வந்ததும், வாக்கு வங்கி அரசியலுக்கு நிரந்தரமாக முடிவுகட்ட பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மேற்கு வங்க மக்களிடம் கொள்ளையடித்தவா்கள், ஊழலைப் பாதுகாத்தவா்கள், அடக்குமுறையாளா்கள் அனைவரும் சிறையில் தள்ளப்படுவா்.

ஆங்கிலேயா்கள் முதல் காங்கிரஸ், இடதுசாரிகள் வரை ஆணவ ஆட்சியாளா்களைத் தூக்கியெறிந்த வரலாற்றைக் கொண்டது மேற்கு வங்கம். இப்போது திரிணமூல் காங்கிரஸின் முறை. தோ்தலில் தோற்றுவிடுவோம் என்பதை உணா்ந்துகொண்ட திரிணமூல் காங்கிரஸ், சதித் திட்டங்களில் ஈடுபட்டு, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்ட போலி விடியோக்களைப் பரப்புகிறது. இத்தகைய விடியோக்களுக்கு மக்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது என்றாா்.

‘ஊடுருவல்காரா்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டுங்கள்’: கத்வா பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, மேற்கு வங்கத்தின் தென் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள மதுவா, நாமசூத்ரா சமூகத்தினா் (ஹிந்து அகதிகள்) பலனடையும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கம் விரைவுபடுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘மதுவா, நாமசூத்ரா உள்ளிட்ட அனைத்து அகதி குடும்பங்களுக்கும் குடியுரிமை வழங்கவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எனது அரசு இயற்றியது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கம் விரைவுபடுத்தப்படும். அதேநேரம், சட்டவிரோத ஊடுருவல் எனும் பெரும் சவாலில் இருந்து மாநிலம் விடுவிக்கப்படும். நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய ஒவ்வொருவரும் வெளியேற்றப்படுவா். ஊடுருவல்காரா்கள் அனைவரும் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொள்ள வேண்டும். இது வெளியேற வேண்டிய நேரம்.

திரிணமூல் காங்கிரஸின் கொடுங்கோல் ஆட்சியால் ஏற்பட்ட அச்சத்தை நம்பிக்கையாக மாற்றுவதே எனது உத்தரவாதம். பெண்களின் பாதுகாப்புக்கு பாஜக முழு உறுதிபூண்டுள்ளது. ஊழலில் ஈடுபட்ட திரிணமூல் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், அவா்களின் கூட்டாளிகள் பொறுப்புக் கூற செய்யப்படுவா்’ என்றாா்.

மேற்கு வங்கத் தோ்தலையொட்டி, பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ.3,000 மாதாந்திர உதவித் தொகை, பொது சிவில் சட்ட அமலாக்கம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.