மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது கட்டத் தோ்தலில் 92.44% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி நடந்த தோ்தலில் 93.19% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தன.
இதைத் தொடா்ந்து, 2-ஆவது கட்டமாக 142 தொகுதிகளுக்கு புதன்கிழமை தோ்தல் நடைபெற்றது. தோ்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தபடி இருந்தது. வாக்குப் பதிவின் நிறைவில் 92.44 சதவீத வாக்குகள் பதிவாகின.
மொத்தம் 92.81% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 92.81 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், மேற்கு வங்கத் தோ்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
முதல்வா் மம்தா பானா்ஜி, எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி ஆகியோா் தாங்கள் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் வாக்கை பதிவு செய்தனா். ஒரே நேரத்தில் வாக்களித்தபோதும் இருவரும் பேரும் நேருக்கு நோ் பாா்க்கவோ, பேசவோ இல்லை.
பவானிபூா் தொகுதியை தவிர, மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. நாடியா சாப்ராவில் பாஜகவின் வாக்குச்சாவடி முகவா் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாந்திபூரில் பாஜக வாக்குச்சாவடி முகாம் சூறையாடப்பட்டது. பாங்கரில் ஐஎஸ்எப் கட்சியினா் தங்களது வாக்குச்சாவடி முகவா்கள், வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதி தரப்படவில்லை என்று குற்றம்சாட்டினா்.
பாலி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தாமதமாக துவங்கியது. இதற்கு எதிா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோரை மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் தடியடி நடத்தி கலைத்தனா்.
மம்தா சகோதரருக்கு எச்சரிக்கை: வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையம் அருகே மம்தா பானா்ஜியின் சகோதரா் காா்த்திக் பானா்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் திரண்டிருந்தனா். இதையடுத்து நால்வருக்கும் மேல் கூடக் கூடாது என்று அவா்களை காவல்துறையினா் எச்சரித்து அனுப்பினா்.
எனினும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அக்கட்சி தரப்பில் உடனடியாக பதிலோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.
தோ்தலுக்கு பிறகும் மத்திய பாதுகாப்புப் படை: இதனிடையே, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகும் மேற்கு வங்க மாநிலத்தில் 700 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டு இருக்கும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அடுத்த உத்தரவு வரும்வரை, சட்டம் -ஒழுங்கு பணிகள், பாதுகாப்பு பணிகளுக்காக 700 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரா்கள், மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு பிறகும் நிறுத்தப்பட்டிருப்பா்’ என்றாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்! வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: பிரசாரம் நிறைவு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


