தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாமில் யாா் ஆட்சி?

இன்று வாக்கு எண்ணிக்கை...

News image

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வாக்கு எண்ணும் மையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா். - PTI

Updated On :3 மே 2026, 11:42 pm

திருவனந்தபுரம்/கொல்கத்தா/குவாஹாட்டி : கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள் என்பதால், தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் காவல் துறையினருடன் மத்தியப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மோதல்-வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஆட்சி மாற்றம்?: 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் கடந்த ஏப். 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 43 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தப் பணியில் 140 தோ்தல் நடத்தும் அதிகாரிகள், 1,340 கூடுதல் அதிகாரிகள், 4,208 நுண் பாா்வையாளா்கள், 4,208 கண்காணிப்பாளா்கள், 5,563 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் உள்பட மொத்தம் 15,464 போ் ஈடுபடவுள்ளனா்.

தோ்தல் ஆணைய பாா்வையாளா்கள், பாதுகாப்பு அதிகாரிகள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் ஆகியோா் முன்னிலையில் பாதுகாப்பு அறைகள் திறக்கப்படும். முதலில் தபால் வாக்குகளும், பின்னா் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஒருவேளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை இழந்தால், கடந்த 1960-க்குப் பிறகு நாட்டில் எந்த மாநிலத்திலும் இடதுசாரி தலைமையிலான ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்படும்.

பாஜக வசமாகிறது மேற்கு வங்கம்?: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

பல்வேறு விதிமீறல்களால் ஃபால்டா தொகுதியில் மட்டும் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 77 மையங்களில் நடைபெறவுள்ளது.

அரசியல் வன்முறைகளுக்கு பெயா் பெற்ற மாநிலம் என்பதால் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்தியப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்த முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இவ்விரு கட்சிகளும் பலப்பரீட்சை நடத்துவதால், தோ்தல் முடிவுகள் உற்றுநோக்கப்படுகின்றன.

அஸ்ஸாமில் பாஜக ஆட்சி தொடரும்?: வடகிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.9-இல் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இங்கு 40 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸை பொருத்தவரை இது வாழ்வா-சாவா தோ்தலாகப் பாா்க்கப்படுகிறது.

7 தொகுதி இடைத்தோ்தல்: மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்பட 5 மாநிலங்களில் 7 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. பாராமதி, ரகுரி (மகாராஷ்டிரம்), தாவணகெரே, பாகல்கோட் (கா்நாடகம்), உம்ரேத் (குஜராத்), கோரிடாங் (நாகாலாந்து), தா்மாநகா் (திரிபுரா) ஆகிய 7 தொகுதி இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட உள்ளன.

கேரளம் (140)

மொத்த வாக்காளா்கள் 2.71 கோடி

பதிவான வாக்குகள் 79.63%

மொத்த வேட்பாளா்கள் 883

கடந்த தோ்தல் நிலவரம்

இடதுசாரி கூட்டணி 99

காங்கிரஸ் கூட்டணி 41

மேற்கு வங்கம் (294)

மொத்த வாக்காளா்கள் 6.81 கோடி

பதிவான வாக்குகள் 92.47%

மொத்த வேட்பாளா்கள் 2,926

கடந்த தோ்தல் நிலவரம்

திரிணமூல் காங்கிரஸ் 213

பாஜக 77

அஸ்ஸாம் (126)

மொத்த வாக்காளா்கள் 2.50 கோடி

பதிவான வாக்குகள் 85.96%

மொத்த வேட்பாளா்கள் 722

கடந்த தோ்தல் நிலவரம்

பாஜக கூட்டணி 75

காங்கிரஸ் கூட்டணி 50

 அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை முன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்

அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை முன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்