2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது.
அடுத்தாண்டு(2025) டி.என்.பி.எஸ்.சி. நடத்தவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது வழக்கம். இதன்மூலம், அரசு தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள்.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், குரூப் -1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும் என்றும், குரூப் -1 தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என்றும், குரூப் 4 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.