வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
By | Published On : 10th October 2022 03:32 PM | Last Updated : 10th October 2022 03:32 PM | அ+அ அ- |

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கு புதிய அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் வரும் நவம்பர் 7 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அலுவலக அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியரிகளிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் 2,748 காலியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதிகப்படியான காலியிடங்கள் உள்ளதால் அவற்றை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எடுக்க வேண்டும்.
இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10 ஆம் தேதி விளம்பரம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் நவம்பர் 7 ஆம் தேதி எனவும், விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான இறுதி நாள் நவம்பர் 14 ஆம் தேதியாக நிர்ணயிக்க வேண்டும். பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 30 ஆம் தேதியும், நேர்முகத் தேர்வு டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை வரும் டிசம்பர் 19 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
இதற்காக, கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட வருவாய்த்துறை அரசாணையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று முதல் 2,748 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த் துறை
பணி: கிராம உதவியாளர்
காலியிடங்கள்: 2748
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.11,100 - 35,100
வயதுவரம்பு: 21 - 34க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 30.11.2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 15.12.2022 - 16.12.2022
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.11.2022