முழு ரயில், ரயிலின் ஒரு பெட்டியை முன்பதிவு செய்வது எப்படி?

ஒரு ரயிலை அல்லது ரயிலின் ஒரு பெட்டி முழுவதுக்கும் முன்பதிவு செய்வது பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம் TNIE
Published on
Updated on
2 min read

முழு ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை ஒப்பந்த முறையில் முன்பதிவு செய்வது எப்படி, கட்டணம் எவ்வளவு என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பிற போக்குவரத்தைக் காட்டிலும் ரயில் பயணத்தை பெரும்பாலானோர் விரும்புவதற்கான காரணம், பாதுகாப்பாகவும் வேகமாகவும் குறைந்த செலவிலும் பயணிக்க முடியும் என்பதுதான்.

இந்த நிலையில், திருமணம், சுற்றுலா போன்று முன்பே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுக்கு குழுவாகச் செல்பவர்கள் முழு ரயிலை அல்லது தனிப் பெட்டியை ஒப்பந்த முறையில் ஐஆர்சிடிசியின் எஃப்டிஆர் இணையதளம் (https://ftr.irctc.co.in/) மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் முன்பதிவு செய்ய முடியுமா?

முழு ரயிலை முன்பதிவு செய்தால், நாடு முழுவதும் உள்ள எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் பயணத்தைதத் தொடங்க முடியும்.

ஆனால், ரயில்வே இயக்கக்கூடிய தினசரி முன்பதிவு செய்து இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டியை இணைத்து பயணிக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட ரயில் 10 நிமிடங்கள் நிற்கும் ரயில் நிலையங்களில் மட்டுமே பயணத்தைத் தொடங்க முடியும். மேலும், அது ரயில் சந்திப்பு நிலையமாக இருக்கும் பட்சத்தில்தான் பெட்டியை பிரிக்கவும் இணைக்கவும் முடியும்.

எத்தனை நாள்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும்?

https://ftr.irctc.co.in வலைதளத்தில் குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்னதாகவும் அதிகபட்சம் 6 மாதத்துக்குள் பயணத்திட்டம் தொடர்பாக முன்பதிவு செய்ய வேண்டும். ஐஆர்சிடி பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, இணையத்தில் உள்ள எஃப்டிஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்தவுடன் எஃப்டிஆர் எண் வழங்கப்படும். அதன்பிறகு பயணத்துக்கு சில நாள்களுக்கு முன்னதாக வழித்தடத்தின் சூழ்நிலையைப் பொறுத்து இறுதி செய்யப்படும்.

ஒருவேளை தண்டவாள பராமரிப்பு, இயற்கை பேரிடர் போன்றவற்றால் ரயிலை இயக்க முடியாத சூழலில், ரயில் அல்லது பெட்டிக்கான ஒப்பந்தத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துவிடும்.

எவ்வளவு பெட்டி இணைக்கலாம்?

ரயில்வே இயக்கக்கூடிய தினசரி ரயிலில் கூடுதல் பெட்டியை இணைக்க வேண்டுமென்றால், அதிகபட்சமாக ஒரு ரயிலில் இரண்டு பெட்டிகளை மட்டுமே இணைக்க முடியும். அந்த ரயில் ஏற்கெனவே 24 பெட்டிகளுடன் இயங்கக்கூடியது என்றால், ஒப்பந்த பெட்டியை இணைக்க முடியாது.

முழு ரயிலை ஒப்பந்தம் செய்தால், 2 லக்கேஜ் / எஸ்எல்ஆர் / ஜெனரேட்டர் பெட்டிகளுடன் சேர்த்து அதிகபட்சமாக 24 பெட்டிகள் மட்டுமே இணைக்க முடியும்.

கட்டணம் எவ்வளவு?

தேர்வு செய்யும் பெட்டிகளை பொறுத்து ஒருவழித் தடத்துக்கு குறைந்தபட்சம் 500 கிலோ மீட்டருக்கான அடிப்படை பயணத் தொகை, அதிவிரைவு சேவைக்கான கட்டணம் உள்ளிட்டவை செலுத்த வேண்டும். 500 கி.மீ.க்கு மேல் பயணித்தால், ஒவ்வொரு கி.மீ.க்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், பாதுகாப்பு வைப்புத் தொகையாக ஒரு பெட்டிக்கு ரூ. 50,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். இந்தத் தொகை பயணம் முடிவடைந்ததும், அந்த ரயில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட சில நாள்களுக்குள் திருப்பியளிக்கப்படும்.

முழு ரயிலை முன்பதிவு செய்பவர்கள், குறைந்தது 18 பெட்டிகளுக்கு வைப்புத் தொகை மற்றும் பயண தொலைவுக்கான அடிப்படை தொகை செலுத்த வேண்டியது கட்டாயம். மேலும், ரயில் என்ஜினுக்கான தொகை ஒரு மணிநேரத்துக்கு ரூ. 1,465 வசூலிக்கப்படும்.

அதேபோல், லக்கேஜ் / எஸ்எல்ஆர் / ஜெனரேட்டர் பெட்டிகளுக்கு படுக்கை வசதி பெட்டிக்கான அடிப்படைத் தொகை வசூலிக்கப்படும்.

இதுதவிர, அடிப்படை பயணத் தொகையில் இருந்து 30 சதவிகிதம் சேவைக் கட்டணமாகவும் கூடுதல் நிறுத்தங்களுக்கு கட்டணமும் செலுத்த வேண்டும்.

ஒப்பந்த ரயிலுக்கு 1,000 கி.மீ. தொலைவுக்கு இரண்டு இலவச நிறுத்தங்கள் (மொத்தமாக 20 நிமிடங்கள் வரை) வழங்கப்படும். கூடுதல் நிறுத்தங்களுக்கு 2 நிமிடங்களுக்கு ரூ. 25,000 கட்டணம் ஆகும்.

ரயில் அல்லது பெட்டியை முன்பதிவு செய்யும்போதே, வைப்புத் தொகையை செலுத்த வேண்டும், பயணத்துக்கு குறைந்தது 48 மணிநேரத்துக்கு முன்னதாக பயணிகளின் விவரங்கள் மற்றும் பயணத் தொகை முழுவதையும் செலுத்த வேண்டும்.

பெட்டி வகை மற்றும் இருக்கை எண்ணிக்கை
பெட்டி வகை மற்றும் இருக்கை எண்ணிக்கை

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் அல்லது பெட்டியை ரத்து செய்யும் பட்சத்தில், நாள்களை பொறுத்து தொகை பிடித்தம் செய்யப்படும். ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தால் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

மேலும், பண்டிகைக் காலங்கள், கோடை விடுமுறை போன்ற சிறப்பு ரயில்கள் அதிகளவில் இயக்கக்கூடிய நேரங்களில் ஒப்பந்த ரயில் சேவையை முன்பதிவு செய்யும் வசதி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com