
23.8.1976: செவ்வாயில் 2-வது "வைக்கிங்" இறங்குவதற்குரிய இடம் தேர்வு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

23.8.1976 - Dinamani
பஸடேனா (யு.எஸ்.), ஆக. 22 - செவ்வாய்க் கிரகத்தில் இறங்கவிருக்கும் இரண்டாவது வைக்கிங் செயற்கைக்கோள் இறங்க வேண்டிய இடத்தை அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். செவ்வாயில் உடோபியா சமவெளியில் இரண்டாவது வைக்கிங் இறங்கும்.
வைக்கிங் ஆகஸ்டு 7ஆம் தேதி முதல் செவ்வாய் கிரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இறங்குவதற்குத் தகுந்த தலம் பற்றி விஞ்ஞானிகள் நோட்டம் பார்த்து வந்தனர்.
உடோபியா சமவெளியிலுள்ள ஈரப்பசை செயற்கைக்கோள் இறங்குவதற்கு ஏற்றதாக இருக்குமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி இரவு 11 மணிக்கும், ஒரு மணிக்குமிடையில் (இந்தியாவில் காலை 4-30 மணிக்கும் 6-30 மணிக்குமிடையில்) உடோபியா சமவெளியில் வைக்கிங் இறங்குமென்று ஏவுகணைச் சோதனைச் சாலை அலுவலர்கள் தெரிவித்தனர்.
செயற்கைக் கோள் கிரஹத்தை வலம் வருகையில் எடுத்து அனுப்பிய படங்கள், வெப்பதட்பத் தகவல்கள் முதலியவற்றை 4 மணி நேரம் ஆராய்ந்த பின் இறங்கும் இடத்தை நிர்ணயித்தனர். முதல் வைக்கிங் இறங்கிய இடத்தை விட, இப்புது இடம் செவ்வாயின் வட துருவ மண்டலத்துக்கு அருகில் உள்ளது.
செவ்வாய் காற்று மண்டலத்தில் அதிக ஈரம் இருக்க வேண்டுமென்றும், நீர்கனம் தரை மட்டத்திலும் இருக்குமென்றும், விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். "எவ்வளவுக்கெவ்வளவு நீர் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு உயிரினம் உள்ளதற்கான வாய்ப்பு அதிகம்" என்று வைக்கிங் பேச்சாளர் சொன்னார்.
முதல் வைக்கிங் இறங்கிய இடத்திலிருந்து வட கிழக்கில் 1600 கிலோமீட்டர் தூரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இறங்குக் களம் உள்ளது.
கொரியா செல்லும் யு.எஸ். கப்பலை ரஷிய கப்பல் பின்தொடர்கிறது?
டோக்கியோ, ஆக. 22- தென் மேற்கு ஜப்பானில் கையூஷ தீவுக்கு அப்பால் அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பலான "மிட்வே"யைப் பின்தொடர்ந்து ஒரு கப்பல் செல்கிறது என்றும், அது ரஷியக் கப்பல் என்று கருதப்படுவதாகவும் டோக்கியோ டெலிவிஷன் கம்பெனி ஒன்று இன்றிரவு தனது செய்தியில் கூறியது.
மிட்வே கப்பலானது கொரியா கடலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த அமெரிக்கக் கப்பலை கையூஷுவின் தென் கோடியில் மகுராஜகிக்கு அப்பால் ஒரு டெலிவிஷன் விமானம் இன்று பிற்பகல் (இந்திய நேரப்படி) 2-30 மணிக்குக் கண்டது.
"மிட்வே" யானது 40,000 டன் விமானந் தாங்கிக் கப்பல். அதற்குப் பின்னால் செல்லும் கப்பலும் அதன் வேகத்திலேயே அதற்குப் பின்னால் சுமார் 30 கிலோமீட்டர் (19 மைல்) தூரத்தில் சென்றுகொண்டிருக்கிறது.
மிட்வேயைப் பின்தொடர்ந்து செல்வது ஒரு மேற்பார்வை ரஷிய ரோந்துக் கப்பல் என்று நம்பப்படுகிறது. அது 8000 டன் முதல் ரக விமானந் தாங்கிக் கப்பல்.
இந்நகருக்குத் தெற்கே, யோமோ சுகாவிலுள்ள அமெரிக்கக் கடற்படைத் தளத்திலிருந்து "மிட்வே" புறப்பட்டது. அது புறப்பட்டபோது அதில் இருந்த விமானந் தாங்கிக் கப்பல்களைக் காணவில்லை. இன்று மாலை (இந்திய நேரப்படி) 6-30 மணிக்கு அது கொரியாக் கடல் போய்ச் சேர வேண்டும் என்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் கூறின.
வட கொரியா கண்டனம்
அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலான "மிட்வே" கொரியா கடலுக்கு அனுப்பப்படுவதற்காக அமெரிக்காவுக்கு இன்று வட கொரியா கண்டனம் தெரிவித்தது. அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவுகளின் பேரில் கொரியா தீபகற்பத்திலும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலும் மேலும் நெருக்கடி உண்டாக்கப்படுகிறது என்று வடகொரியா புகார் கூறியது.
Summary
23.8.1976: Landing site selected for the second "Viking" on Mars.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



