

சென்னை, ஜன. 11 - தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப கார்டுதாரருக்கும் கூடுதலாக 25 கிலோ அரிசி சப்ளை செய்யப்படும்.
அரசு அதிகாரி ஒருவர் ‘தினமணி’ நிருபரிடம் இன்று இத்தகவலைத் தெரிவித்தார்.
கார்டுதாரர்களுக்கு வழக்கமாக சப்ளை செய்யப்படும் அரிசிக்கும் கூடுதலாக இது அளிக்கப்படும்.
திருச்சி ஜில்லாவில் 6 நகர சபைப் பகுதிகளிலும், தொழிற்சாலைப் பகுதிகளிலும் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசி கூடுதலாக தரப்படுமென்று ஜில்லா கலெக்டர் திரு. எம். வைத்தியலிங்கம் திருச்சியில் இன்று கூறினார். ரூ. 500க்கு மேல் மாத சம்பளமுள்ளவர்களுக்கு ஆந்திர பச்சரிசி கிலோ ரூ. 2.50 வீதம் சப்ளை செய்யப்படுமென்றார். ரூ. 500க்குக் குறைவாக மாத சம்பளமுள்ளோருக்கு மோட்டா ரகம், நடுத்தர ரகம், சன்ன ரகம், மிகவும் சன்ன ரக அரிசி முறையே கிலோ ரூ. 1.80, ரூ. 1.90, ரூ. 2.10, ரூ. 2.25 என்ற விலையில் சப்ளை செய்யப்படும் என்றார். ...
சென்னை, ஜன. 11 - வாரத்தில் ஒரு நாள் மாமிச கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும், பசுவதை தடை செய்யப்பட வேண்டுமென்பதை கொள்கையளவில் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக முதன் மந்திரி திரு. கருணாநிதி இன்று கூறினார்.
“மஹாவீரர், வள்ளுவர், வள்ளலார் கண்ட அஹிம்சா நெறி” பற்றிய கருத்தரங்கு ஒன்றை சென்னையில் துவங்கி வைத்துப் பேசினார்.
தாம் புலால் உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவர் என்பதைக் குறிப்பிட்டு, இதுபோன்ற கருத்தரக்கை துவக்கி வைக்க தமக்குத் தகுதி இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக கூறினார். ஆனால், ஒருவர் தாம் செய்த செயல்களைக் குறித்து வருத்தமடைய ஆரம்பித்தால் அது அவரை அறவழிக்கு அழைத்துச் செல்லும் என்றும், “நான் இந்த வகையைச் சேர்ந்தவன் போலிருக்கிறது” என்றும் கூறினார்.
மாமிசக் கடைகளை வாரம் ஒரு நாள் மூட வேண்டும், பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கொள்கையளவில் தமது அரசு ஒப்புக் கொள்கிறது என்றும் இதுபற்றி மேலும் பரிசீலனை செய்யும் என்றும் கூறினார்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலத்திலுள்ள புலாலுண்போரை ஒரு நாளில் அப்பழக்கத்தை விட்டு விடச் செய்ய முடியாது என்பது உண்மையேயானாலும், ஏதாவது ஒரு விதத்தில் முயற்சி துவக்கத்தான் வேண்டும் என்றார். அஹிம்சையின் உயர்வைப் பற்றி பெரியோர் கூறியுள்ள நல்லுரைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதன் மூலமாகவும் படிப்படியாகவும் புலாலுணவுப் பழக்கம் மக்களிடையே குறையச் செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.