

புது தில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உயா் தரத்துக்கு முன்னுரிமை, கவனம் செலுத்த வேண்டும் என்று நாட்டு மக்கள், தொழில்துறை மற்றும் புத்தாக்க நிறுவனங்களுடன் தொடர்புடைய இளைஞர்களை வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதாகவும், உலகம் இந்தியாவை உற்றுநோக்குவதாகவும் கூறினார்.
பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். 130-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) ஒலிபரப்பானது.
அதில் பிரதமரின் உரை வருமாறு:
2026-ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் இது. நாளை (ஜன.26) நாட்டின் குடியரசுத் திருநாளைக் கொண்டாடவுள்ளோம். இந்த நாளில்தான் நமது அரசியலமைப்புச் சட்டம் அமலானது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களை நினைவுகூரும் தருணமிது.
ஜனவரி 25 ஆம் தேதி கூட மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இன்று தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்டது. வாக்காளர் தான் ஜனநாயகத்தின் ஆன்மா. ஒரு இளைஞர் 18 வயதானதும், வாக்காளராக பதிவு செய்வது மிகப் பெரிய மைல்கல்லாகும். ஆகையால், நாம் தேசத்தின் வாக்காளராக உருவெடுப்பதை ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும்.
நாம் எப்படி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாடுகிறோமோ, அதே போல எந்வொரு இளைஞரும் முதன்முறையாக வாக்காளராக ஆகிறார் என்றால், அந்தப் பகுதி, கிராமம் அல்லது நகரம் முழுவதும் ஒன்றுசேர்ந்து அவரை வாழ்த்தி இனிப்புகள் வழங்க வேண்டும். இதனால் மக்களிடம் வாக்குரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இதோடு கூடவே, வாக்காளர் ஆவது எத்தனை மகத்துவமானது என்ற உணர்வு மேலும் வலுவடையும்.
நாட்டில் தேர்தல் நடைமுறையோடு இணைந்திருப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் நமது ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க கள அளவில் பணியாற்றி வருபவர்கள். நான் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இளைஞர்களிடம் நான் மீண்டும் வேண்டிக் கொள்வது, உங்களுக்கு 18 வயதான உடனேயே நீங்கள் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டமானது அனைத்து வாக்காளர்களும் கடமையுணர்ச்சியை கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, நீங்கள் பதிவு செய்து கொண்டு வாக்களிப்பதன் வாயிலாக அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுவதோடு, நாட்டின் ஜனநாயகமும் பலமடையும்.
பஜனைகளும் கீர்த்தனைகளும் பல நூற்றாண்டுகளாக இந்தியப் பண்பாட்டின் ஆன்மாவாக இருந்து வருகின்றன. இன்றைய இளைஞர்கள் பக்தி உணர்வை தங்கள் அனுபவங்களிலும் வாழ்க்கை முறையிலும் இணைத்துக்கொண்டுள்ளனர். இந்தச் சிந்தனை ஒரு புதிய கலாசாரப் போக்கிற்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இந்தப் போக்கு 'பஜன் கிளப்பிங்' என்று அழைக்கப்படுவதாகவும், இது குறிப்பாக 'ஜென் இசட்' தலைமுறையினரிடையே பெருகி பிரபலமடைந்து வருவதாகவும் மோடி கூறினார்.
2016 இல் தொடங்கப்பட்ட புத்தாக்க இந்தியா திட்டத்தின் சாகச பயணம் ஈா்ப்புக்குரியதாகும். இந்த அற்புதமான பயணத்தின் நாயகா்கள் உத்வேகமிக்க நமது இளைஞா்கள் தான்.
தங்களுடைய சொகுசான வாழ்க்கையை விடுத்து வெளியேறி, அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் நூதனங்கள் எல்லாம் வரலாற்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் புத்தாக்கத்துக்கு உகந்த சூழல் கொண்ட மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கற்பனைகூட செய்து பார்க்க முடியாத துறைகளில் எல்லாம் பணியாற்றி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு, அணுசக்தி ஆற்றல், செமிகண்டக்டா், பசுமை ஹைட்ரஜன், உயிரி தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இந்திய புத்தாக்க நிறுவனங்கள் செயலாற்றுவதை காண முடிகிறது. ஏதோ ஒரு புத்தாக்க நிறுவனத்தோடு தொடர்புடைய அல்லது புத்தாக்க நிறுவனம் தொடங்க நினைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வணக்கம்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் நாட்டுமக்களுக்கு, குறிப்பாக தொழில்துறை மற்றும் புத்தாக்க நிறுவனங்களுடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தியப் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதால், உலகம் இந்தியாவை உற்றுநோக்குகிறது. இந்த நேரத்தில் நம் அனைவருக்கும் ஒரு பெரும் பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தின் மீது கவனம் செலுத்துவது தான். செங்கோட்டையில் இருந்து தான் விடுத்த 'குறைபாடற்ற உற்பத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற உற்பத்தி' என்ற முழக்கத்தை மீண்டும் வலியுறுத்திய மோடி, எதுவும் தானாக நடக்கும், எப்படியோ கடந்துபோகும் என்ற காலமெல்லாம் முடிந்துவிட்டது. நாம் நமது முழு வல்லமையுடன் தரமிக்க பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. எந்தத் துறையாக இருந்தாலும் தரம் மட்டுமே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தரத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்கக் கூடாது. எந்த குறைபாடுகளும் இல்லாத, உயா் தரத்துக்கு மறுபெயராக விளங்கும் பொருட்களை தயாரிப்பதன் மூலம் நாட்டின் வளா்ச்சிப் பயணத்தை மேலும் விரைவுபடுத்த முடியும் என்று அவர் கூறினார்.
மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள்
இந்திய கலாசாரமும், பண்டிகைகளும் இப்போது உலகம் முழுவதும் தங்கள் அடையாளத்தை பதித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் நமது பண்டிகைகள், பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் தங்கள் கலாசாரத்தின் சாரத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் பாராட்டுக்குரிய பணிகளைச் செய்து வருவதைப் பற்றிப் பேசிய மோடி, மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் செயல்படுவதாகவும், அங்கு தமிழ் மொழி கற்பிப்பதுடன், பிற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகிறது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட பிற இந்திய மொழிகள் மீதும் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.
மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம் கடந்த மாதம் "லால் பாட் சேலை" என்ற அடையாள நடைப்பயணத்தை ஏற்பாடு செய்தது. 'இந்தச் சேலைக்கு வங்காளத்தின் கலாசாரத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பு உள்ளது' என்று பிரதமர் கூறினார்.
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகதீஷ் பிரசாத் அஹிர்வார் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இவர் காடுகளிலே பீட்-கார்டாகப், அதாவது குறிப்பிட்ட பகுதியின் காவலாளியாக தனது சேவைகளைப் புரிந்து வருகிறார். காட்டில் இருக்கும் பல மருத்துவத் தாவரங்கள் குறித்த தகவல்கள் எங்கும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதை உணர்ந்த அவர், இந்தத் தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், மருத்துவத் தாவரங்களை அடையாளம் கண்டு பதிவிட தொடங்கினார். அவர் 125-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களை அடையாளம் கண்டுள்ளார். அவர் ஒவ்வொரு தாவரத்தின் பெயர், புகைப்படம், பயன்கள், அவற்றின் இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். அவர் சேகரித்த தகவல்களை தொகுத்து, புத்தகமாக வனத்துறை வெளியிட்டிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
இந்தப் புத்தகத்திலே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் இப்போது ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற இந்த உணர்வு தான் இன்று பெரிய அளவில் வெளிப்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தோடு நாடு முழுவதும் ஒரு மரம் தாயின் பெயரில் இயக்கமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தோடு நாடு முழுவதிலும் இருந்து கோடானுகோடி பேர் இணைந்திருக்கிறார்கள். இதுவரை நாட்டில் 200 கோடிக்கும் அதிகமானோர் மரங்களை நட்டிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. மேலும் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் விரும்புகிறார்கள்.
தமிழக பெண் விவசாயிகளுக்கு பாராட்டு
மேலும், அனைவரையும் ஒரு விஷயத்திற்காக பாராட்ட விரும்புகிறேன். ஸ்ரீ அன்னம் அதாவது சிறுதானியங்கள் தான் அதற்கான காரணம். ‘ஸ்ரீ அன்னம் எனப்படும் ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் மீதான ஆா்வம் தொடா்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2023 ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக நாம் அறிவித்திருந்தோம். ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்தும், இது தொடர்பாக நாட்டிலும், உலகிலும் இருக்கின்ற பேரார்வமும், அர்ப்பணிப்பும் மிகவும் உற்சாகத்தை அளிக்கின்றது.
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விவசாயிகளின் குழு, உத்வேகத்தின் ஆதாரமாக உருவெடுத்துள்ளது. இங்கு பெரியகல்வராயன் சிறுதானிய வேளாண் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்த சுமாா் 800 பெண் விவசாயிகள், சிறுதானியங்களின் மீது அதிகரித்துவரும் விருப்பத்தை உணர்ந்து சிறுதானியப் பதப்படுத்துதல் அலகை நிறுவியுள்ளனா். இப்போது இவா்கள் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக சந்தை வரை கொண்டு சேர்த்து வருகிறார்கள். என்றாா் பிரதமா்.
மேலும், தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சா்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாநாடு, செயற்கை நுண்ணறிவு உலகில் இந்தியாவின் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் முன்னிறுத்தும். மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பிரதமர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.