

மதுரை, ஜன. 18 - சென்னை அல்லது திருச்சியில் பிப்ரவரி 15 (ஆம் தேதி) காங்கிரஸ் இணைப்பு மகாநாடு நடைபெறுமென்று தமிழ்நாடு பழைய காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி திரு. பி. நெடுமாறன் இன்று இங்கு நிருபர்களிடம் கூறினார்.
பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி, காங்கிரஸ் அக்ராசனர் திரு. டி.கே. பரூவா, மத்திய நிதி மந்திரி திரு. சி. சுப்ரமண்யம், திருமதி மரகதம் சந்திரசேகர் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் அந்த மகாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மகாநாட்டிற்குப் பின், கிராமம் முதல் மாநில மட்டம் வரை காங்கிரஸ் கமிட்டிகள் அமைப்பதற்கான நடைமுறைகள் விவாதிக்கப்படும் என்றார்.
தி.மு.க. அல்லது அண்ணா தி.மு.க.வுடன் உறவுள்ள கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை என்ற கட்சியின் பழைய தீர்மானம் பின்பற்றப்படும் என்றார்.
கோவை, ஜன. 17 - பாண்டியாறு - புன்னம்புழா அணைத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் கோவை மாவட்டத்துக்கு பாசன வசதிகள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று கோரும் மகஜர் ஒன்று கோவையில் இன்று மத்திய வேளாண்மை அமைச்சர் திரு. ஜகஜீவன்ராமிடம் அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. பி.கே. பழனிச்சாமி கவுண்டர், காரியதரிசி திரு. வி.ஆர். ஜகந்நாதன், தாலுகா காங்கிரஸ் காரியதரிசி திரு. டி. ராமச்சந்திரன் ஆகியோர் இந்த மகஜரை மந்திரியிடம் அளித்தனர்.
கோவை, அவினாசி, பல்லடம் தாலுகாக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் போதுமான மழை இல்லாததுடன், வருஷந்தோறும் இப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துகொண்டே போகிறது. பல கிணறுகளில் தண்ணீர் 150 அடி ஆழத்திற்கும் கீழே போய்விட்டது.
ஆகவே, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை அமல்நடத்துவது ஒன்றே இப்பகுதியின் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வழியாகும். இத்திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசின் ஒப்புதல் பெற வேண்டியிருப்பதால், மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரியிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.