

புதுடில்லி, ஜன. 31 - தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சி அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. சட்டசபையும் கலைக்கப்பட்டது.
ராஷ்டிரபதி ஆட்சியை அமல் நடத்தும் பிரகடனம் இன்றிரவு வெளியிடப்பட்டது.
மத்திய பெட்ரோலியம் இலாகா செயலாளர் பி.கே. தவேயும், மின்சார இலாகா செயலாளர் ஆர்.வி. சுப்ரமணியமும் கவர்னருக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில அரசின் நிர்வாகத்தை அலுவல்களையும் மேற்கொண்டும், சட்டசபையைக் கலைத்தும் அரசியலமைப்பு 356 வது பிரிவின் கீழ் ராஷ்டிரபதி இன்று ஒரு பிரகடனம் வெளியிட்டிருப்பதாக, உள்நாட்டிலாகா அறிவிப்பு ஒன்று கூறியது.
“இன்றிரவு கையெழுத்திட்ட மற்றொரு உத்தரவில் தாம் மேற்கொண்ட எல்லா அதிகாரங்களையும் தம்முடைய மேற்பார்வை, தாக்கீதுக்குட்பட்டு தமிழ்நாடு கவர்னர் செலுத்தி வருவார் என உத்தரவிட்டிருக்கிறார்” என்று அந்த அறிவிப்பு கூறியது.
தமிழ்நாடு கவர்னரிடமிருந்து மத்திய அரசுக்கு வந்துள்ள அறிக்கையின் பேரில், தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சியை அமல் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த அறிவிப்பு கூறியது.
“அரசியலமைப்பு ஷரத்துக்களுக்கு இணங்க மாநில அரசை இனியும் நடத்த முடியாது என்று நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தாம் திருப்தி அடைந்திருப்பதாக, கவர்னர் தம்முடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்” என்றும் அந்த அறிவிப்பு கூறியது. ...
... ராஷ்டிரபதியின் பிரகடனத்தைத் தொடர்ந்து சட்டசபை 7 வாரங்கள் முன்னதாகவே கலைக்கப்பட்டு விட்டது. மு. கருணாநிதி தலைமையில் உள்ள இப்போதைய மந்திரி சபையின் பதவிக்காலம் மார்ச் 21-ந் தேதி முடிவடைவதாயிருந்தது. இப்போது 7 வாரம் முன்னதாகவே அதன் பதவிக் காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டது.
கவர்னர் அறிக்கை
“முறைகேடான நிர்வாகம், ஊழல், கட்சி நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றால், ஜனநாயக நிர்வாகத்தின் முக்கிய அம்சமான நீதி, சமத்துவ கோட்பாடுகளை தி.மு.க. மந்திரி சபை செயலற்றதாக்கிவிட்டதாக” கவர்னர் தம்முடைய அறிக்கையில் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
அவசர நிலை பிரகடனம் சம்பந்தமாக மத்திய அரசின் கட்டளைகளை தி.மு.க. புறக்கணித்து விட்டதாகவும், அவசரநிலை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கவர்னர் கூறியிருக்கிறார். மாநில சுயாட்சி கோரிக்கை என்ற பெயரில் பிரிவினை நடவடிக்கைகளுக்கு தி.மு.க. ஊக்கம் அளித்துக் கொண்டிருந்ததாகவும் கவர்னர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
திங்களன்று பார்லிமெண்டில் பிரகடனம் தாக்கலாகும்
திங்கட்கிழமையன்று பார்லிமெண்டில் ராஷ்டிரபதியின் பிரகடனம் தாக்கல் செய்யப்படும். பார்லிமெண்ட் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு அதன் அங்கீகாரம் கோரப்படும்.
மாநில சட்டசபை கலைக்கப்பட்டு விட்டதால், மாநிலத்துக்கு பட்ஜெட்டை அங்கீகரிக்கும்படி பார்லிமெண்ட் கோரப்படும்.
மாநிலத்தில் ராஷ்டிரபதி ஆட்சி அமலில் இருக்கும் வரை மாநிலத்துக்கான சட்டமன்ற அதிகாரங்களை பார்லிமெண்ட் இப்போது பிரயோகித்து வரும். எனினும் மாநிலத்துக்கான சட்டங்களைப் பரிசீலிக்க பார்லிமெண்ட் கமிட்டி அமைக்கப்படும்.
கருணாநிதி வேண்டுகோள்
தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சியை அமல் நடத்தும் பிரகடனம் வெளியான பிறகு மு. கருணாநிதி வெளியிட்ட ஓர் அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்கள் காந்திய வழியிலும் அண்ணாதுரை வழியிலும் நிரம்ப நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே அமைதி காப்பதிலும், வன்முறைகள் தவிர்ப்பதிலும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உணர்ச்சியுடன் தொடர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார். கடந்த 9 ஆண்டு காலத்தில் தி.மு.க. அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசு அதிகாரிகள், அலுவலாளர்கள் அனைவருக்கும் தம்முடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் முடிவை முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்ஸலம் வரவேற்றிருக்கிறார். இப்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு சரியான காரியத்தைச் செய்திருப்பதாக அவர் ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறார். மத்திய அரசு சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக, த.நா. புது காங்கிரஸ் துணைத் தலைவர் எம். ஆறுமுகசாமி, எம்.எல்.சி. கூறியிருக்கிறார்.
ராஷ்டிரபதி ஆட்சி அமல் நடத்தப்பட்டிருப்பதை வரவேற்று த.நா. பழைய காங்கிரஸ் இணைப்பு ஆதரவாளர் கோஷ்டி செயலாளர் பி. நெடுமாறன், த.நா. வலது கம்யூனிஸ்டுக் கட்சி செயலாளர் எம். கல்யாணசுந்தரம் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.
இந்நடவடிக்கைக்கு அ.தி.மு. பொதுக் காரியதரிசி எம். ஜி. ராமச்சந்திரன் முழு ஆதரவு தெரிவித்தார். தி.மு.க. அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளைச் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் ஒன்றை நிறுவுமாறு மத்ய சர்க்காரை அவர் வற்புறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.