ஜோகன்னஸ்பர்க், ஜூலை. 16 - மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரர்கள், கொள்ளுப் பேத்திகள் ஐவருக்கு வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் அளிக்க தென்னாப்பிரிக்க அரசு மறுத்துள்ளது.
அவர்கள் மேவா ராம்கோவிந்த் தம்பதிகளின் குழந்தைகளாவர்.
மேவா ராம்கோவிந்த் தம்பதிகள் தமது மூத்த மகனை படிப்புக்காக வெளிநாடு அனுப்ப விரும்பி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தனர். மூத்த மகன் வெளிநாட்டில் இருக்கும் போது அவருடைய மற்ற சகோதரர்களும் சகோதரிகளும் அவரைச் சென்று பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு அவர்களுக்கும் பாஸ்போர்ட்டுகளைக் கோரினர்.
ராம் கோவிந்தின் மனைவியான இலாராம் கோவிந்த் மகாத்மா காந்தியின் பேத்தியாவார். தென்னாப்பிரிக்க அரசு அவருக்கு 5 வருட தடை விதித்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது. இரண்டாவது தடவையாகப் பிறப்பிக்கப்பட்ட 5 ஆண்டுத் தடையும், வீட்டுக் காவல் உத்தரவும் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் உள்ளன.
இலா ராம்கோவிந்தின் கணவரான மேவாராம் கோவிந்த் நேட்டால் இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர்.
21-ம் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்
மாண்ட்ரீல், ஜூலை. 16 - பல்வேறு பரபரப்புகளுக்கும், நெருக்கடிகளுக்கும் இடையே உலகின் தலைசிறந்த விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் பந்தயங்கள், கனடாவில் மாண்ட்ரீல் நகரில் சனிக்கிழமையன்று துவங்குகின்றன. இது நவீன உலகின் 21-வது ஒலிம்பிக் பந்தயமாகும்.
பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிஜபெத் இந்த ஒலிம்பிக் போட்டியைத் துவக்கி வைக்கிறார்.
"உயர்வு, விரைவு, துணிவு" இதுவே ஒலிம்பிக்கின் குறிக்கோளாகும். 5 கண்டங்களின் விளையாட்டு வீரர்களும் இதில் சமமாகப் பங்கு கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்க, 5 வளையங்கள் இணைக்கப்பட்ட ஓர் அடையாளமே, ஒலிம்பிக்கின் சின்னமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சின்னத்திற்கே ஒரு சவாலாக, இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பல சோதனைகள் ஏற்பட்டன. இத்தனைக்கும் இடையிலே இந்தப் பந்தயம் துவங்குகிறது.
அகில இந்திய ரேடியோ ஏற்பாடு
புதுடில்லி, ஜூலை.16 - ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய வருணனைகளை ஒலிபரப்ப அகில இந்திய ரேடியோ ஏற்பாடு செய்துள்ளது. இவை சனியன்று துவங்கும்.
ஒலிம்பிக்கில் இந்தியா பங்கு கொள்ளும் ஹாக்கி போட்டி பற்றிய நேர்முக வருணனைகள் ஒரே நேரத்தில் தனித்தனியே ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒலிபரப்பப்படும்.
வருகிற ஞாயிறன்று இந்தியா - அர்ஜெண்டினா இடையில் ஹாக்கிப் போட்டி நடைபெறும்போது இரவு 7-25 லிருந்து 8-50 வரை நேர்முக வருணனை ஒலிபரப்பப்படும். அப்போது இந்தி செய்தி ஒலிபரப்பு தள்ளிப் போடப்படும். ...
Summary
17.7.1976: Passports denied to Mahatma Gandhi's great-grandsons.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








