சென்னை, மே. 29 - தமிழக எல்லைப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களுக்கும் முந்தைய தி.மு.க. அரசு வழங்க உத்தரவிட்ட மாதாந்திர பென்ஷன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மாவட்ட கலெக்டர்கள், கருவூல அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், வடஎல்லை (திருத்தணியைத் தமிழ்நாட்டுடன் சேர்க்கக் கோரி), தெற்கெல்லை (தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரி) நடைபெற்ற போராட்டம், டால்மியாபுரத்தைக் கல்வக்குடி என்ற பெயர் மாற்றம் செய்யக் கோரி நடைபெற்ற போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ. 75 பென்ஷன் வழங்க முந்தைய தி.மு.க அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு ஒன்றில் இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு அரசாங்கப் பென்ஷன் கொடுக்க வகை செய்து முந்தைய தி.மு.க. அரசு பிறப்பித்த உத்தரவு செல்லத்தக்கதல்ல என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பென்ஷன் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதே உத்தரவில் எல்லைப் போராட்ட வீரர்களுக்கு பென்ஷன் வழங்குவதும் உள்ளடங்கியிருந்ததால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் சகல அம்சங்களையும் மாநில சட்டத்துறை ஆராய்ந்து வருகிறது. இந்தப் பரிசீலனை முடிந்து பென்ஷன் குறித்து ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் வரையில் எல்லைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் வழங்குவதை இப்போதைக்கு நிறுத்தி வைக்கும்படி தமிழக மாவட்டக் கலெக்டர்களுக்கும், கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பியுள்ளது. இவர்களுக்குத் தொடர்ந்து பென்ஷன் வழங்கும் விவகாரம் குறித்து அரசின் ஆழந்த பரிசீலனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும். ...
அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றி பிரதமர் உரை - அடிப்படை தத்துவத்தை அது பாதிக்காது எனக் கருத்து
புதுடில்லி, மே. 29 - அரசியலமைப்பில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், அதன் “அடிப்படைத் தத்துவத்தை' எந்த வகையிலும் பாதிக்காது என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி கூறினார்.
அ. இ. கா. க. கூட்டத்தில் அவர் பேசினார். ஜனநாயகத்தைப் பலப்படுத்தி, அதை மேலும் மேலும் சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாகச் செய்வதை நோக்கியே எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
சில உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாக உரத்த குரலில் பேசப்படுவதாகத் குறிப்பிட்டு, "யாருடைய உரிமைகள் பாதிக்கப்பட்டுவிட்டன அல்லது, இத்தனை ஆண்டுகளாக யார் இந்த உரிமைகளை அனுபவித்து வந்தனர் என்பதே கேள்வி என்று பிரதமர் கூறினார். "பொதுவாக மக்கள் இத்தகைய உரிமைகளை அனுபவிக்கக் கூடிய நிலைமையில் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும். இதுதான் எங்கள் முயற்சியாகும்" என்று பிரதமர் கூறினார். ....
Summary
May 30, 1976: Temporary suspension of pensions for the Tiruttani and Kallakudi agitations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








