நீங்க ஃபிட்னெஸ்-க்கு முக்கியத்துவம் கொடுக்குறீங்களா? அப்படின்னா இதை தெரிஞ்சுக்கோங்க!
By Muthumari | Published On : 17th November 2019 10:33 AM | Last Updated : 17th November 2019 10:33 AM | அ+அ அ- |

இருதயம் தொடர்பான உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டிமென்ஷியா என்பது நினைவாற்றல் மங்கும் நோயாகும். நினைவாற்றல் மங்குவது மற்றும் மூளை சிந்திக்கும் திறனை இழப்பது உள்ளிட்ட எல்லாவிதமான மூளை அழுகல் நோய்களும் 'டிமென்ஷியா' என்று அழைக்கப்படுகிறது. மூளை பலவீனம் அடைந்து நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை இழக்கும் இந்த டிமென்ஷியா நோயால் தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இன்னும் 30 ஆண்டுகளில் தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துபவர்கள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்படுவது குறைவாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நார்வேயில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட ஆய்வில், 1984-86 காலகட்டத்தில் 75,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் இருந்து 33,000 பேர் அடுத்த கட்ட ஆய்விற்கு ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களது உடல்திறன் பயிற்சி குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன.
அப்போது, ஃபிட்னெஸ்-க்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டு இறப்பது குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளது.
1995 மற்றும் 2011 க்கு இடையில், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 920 பேரும் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்களது உடல்நலம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர்.
தற்போதையை காலகட்டத்தைவிட, 1980 மற்றும் 1990களில் சிறந்த உடற்தகுதி கொண்ட 80 சதவீதத்தினரிடையே டிமென்ஷியா உருவாகும் ஆபத்து 40 சதவீதம் குறைவாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவருமே கடந்த 2016ம் ஆண்டு வரை கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
நல்ல உடற்தகுதியை பேணுவது மூளைக்கு நல்லது என்றும் இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு இரண்டு முறையாவது இதயத்துடிப்பு அதிகரிக்கும் அளவுக்கு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.