5 மணி நேரத்துக்கு குறைவாகத் தூங்கினால் ஆயுள் குறையுமா? எச்சரிக்கை ரிப்போர்ட்!

மைக்கேல் மோஸ்லே என்பவர் மருத்துவக் கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர், எழுத்தாளர்
5 மணி நேரத்துக்கு குறைவாகத் தூங்கினால் ஆயுள் குறையுமா? எச்சரிக்கை ரிப்போர்ட்!
Published on
Updated on
2 min read

மைக்கேல் மோஸ்லே என்பவர் மருத்துவக் கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சியில் மருத்துவ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர். இவர் அண்மையில் இந்தியாவுக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார்.

அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஒவ்வொரு மனிதருக்கும் தூக்கம் மிகவும் அவசியம் குறிப்பாக இந்தியர்கள் கடந்த சில ஆண்டுகளாக உறக்கப் பிரச்னையில் தவிக்கிறார்கள். இரவென்பது தூக்கத்திற்காகவும் ஓய்வுக்காகவும் எனும்போது, நன்றாகத் தான் தூங்குங்களேன் என்று அறிவுரை கூறினார்.

மேலும் அவர் கூறியது, ‘இந்தியர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இரவில் அதிக நேரம் விழித்திருக்காதீர்கள். அமைதியாகவும் ஆழ்ந்தும் நன்றாக தூங்குங்கள். பலர் தினமும் 5 அல்லது 6 மணி நேர உறக்கம் போதும் என்று நினைக்கிறார்கள். அதையும் மீறி தூக்கம் வரும்போது காபி அல்லது எனர்ஜி பானங்களைக் குடித்து சிரமப்பட்டு விழித்திருக்கிறார்கள். ஆனால் இது சரியில்லை என்றார் மோஸ்லே.

'உங்களுடைய வேலைகள் மற்றும் நீண்ட பயணங்களுக்கு இடையே தூக்கத்தையும் முக்கியமான ஒன்றாக நினைத்துக் கொள்ளுங்கள். 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் நாளாவட்டத்தில் அது சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடும். மேலும் டிமென்ஷியா எனும் மறதி நோய்க்கு முக்கிய காரணம் உடலுக்கு போதுமான அளவு தூக்கம் இல்லாததுதான். உறக்கமின்மை சிறிது சிறிதாக உங்களை ஆக்கிரமித்து உங்கள் நினைவாற்றல் திறனை அழிக்கத் தொடங்கிவிடும்.

முந்தைய காலங்களில் இது ஒரு பெரிய பிரச்னையாக கருதப்படவில்லை. வயதானால் மறப்பது இயல்புதானே என்று சொல்வார்கள். ஆனால் எந்த வயதிலும் ஞாபக சக்தியுடன் வாழ்வதுதான் வரம். அதை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது. சரிவர தூங்காமல் இருந்தால் எந்த வயதிலும் ஞாபக மறதி ஏற்படலாம்’ என்றார் மோஸ்லே.

உலக நாடுகளுள் அதிக தூக்கமின்மை பிரச்னையில் இந்தியர்கள்தான் முன்னணியில் உள்ளனர் என்கிறது ஒரு ஆராய்ச்சி. இது தொடர்ந்தால் அவர்களுக்கு கடுமையான மன அழுத்தப் பிரச்னைகள் ஏற்படுவதுடன், வேலை மற்றும் வாழ்க்கையிலும் அதன் பாதிப்புக்கள் தொடரும் என்கிறது அந்த ஆய்வு. எனவே பிரச்னை பெரிதாகும் முன்னால் விழித்துக் கொள்ளுங்கள்! அதாவது நன்றாகத் தூங்குங்கள்!

மோஸ்லே சர்வதேச அளவில் புகழ் பெற்ற மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். அவை தி ஃபாஸ்ட் டயட், ஃபாஸ்ட் எக்ஸர்சைஸ், மற்றும் தி ப்ளட் சுகர் டயட் ஆகியவை. இவை 42 நாடுகளுக்கும் அதிகமாக, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

உணவு, உடல் நலன் குறித்து பல விஷயங்களை நம்பிக்கைகளை, தவறான பழக்கங்களைப் பற்றி மோஸ்லே தொடர்ந்து அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com