
அயர்லாந்து, கத்தோலிக்க கிருஸ்துவர்களை அதிகம் கொண்ட நாடு. இங்கு வாழும் மக்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே போன்று கர்ப்பிணி பெண் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் முழு உரிமை உண்டு. அதன் அடிப்படையில், 1816-ஆம் ஆண்டு இந்த நாட்டில் கருக்கலைப்பு செய்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இதன் பயனாக 1983-ஆம் ஆண்டிலிருந்து 1,70,000 பெண்கள், வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டு, ரகசியமாய் திரும்பியுள்ளனர். ஆனால் நாட்டிற்குள்ளேயே, ரகசியமாக கருக்கலைப்பு செய்தால் அந்தப் பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறைவாசம் உண்டு. இதனால் பெண்கள் பல துன்பங்களை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய பல் டாக்டரான சவிதாஹலப் பான்வர் (34), அயர்லாந்தில் கர்ப்பமானார். அவரது, வயிற்றில் வளரும் கருவிற்கு பிரச்னை ஏற்பட, ஒரு கட்டத்தில் உள்ளே வளரும் குழந்தையால் தாயின் உயிருக்கே ஆபத்து வரும் சூழல் எழுந்தது. இதனால் அயர்லாந்து மருத்துவமனையில் கருக்கலைப்புக்கு அவர் அணுகியபோது, நாட்டின் சட்டத்தைச் சொல்லி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், சவிதா இறந்துபோனார்.
இச்சம்பவம் பெண்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வர்டேகர் என்பவர், அயர்லாந்தின் பிரதமரானார். இவர் கிருஸ்துவர் அதே சமயம் இந்திய வழியில் அவசியமானால், பெண்களுக்கு கருச்சிதைவு செய்து கொள்ள முழு உரிமை உண்டு என்ற தெளிவான எண்ணம் கொண்டவர்.
இவர், இந்தப் பிரச்னையை மக்கள் வாக்கெடுப்புக்கு விட முடிவு செய்தார். ஏற்கெனவே, இரண்டு முறை, வாக்கெடுப்பு நடந்துள்ளது. அப்போதெல்லாம் மதம் குறுக்கீடு அதிகமாக இருந்து தோற்கடிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் புது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதில் நீதி வென்றது. ஆமாம்! இனி பெண்கள் நியாயமான கோரிக்கையின் மூலம் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதற்கு தற்போது 66 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வசிக்கும் டாக்டர் சவிதாவின் பெற்றோர், இந்த முடிவு அறிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இனி சவிதாவின் ஆன்மா சாந்தியடையும் என கூறியுள்ளனர். இது பெண்களின் உரிமைக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.