
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள ஓஆர்எஸ் என்ற பெயரில் பானங்களை தயாரித்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பானத்துக்கும் ஓஆர்எஸ் என்று பெயரிட்டு விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியிருக்கிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், ஓஆர்எஸ் மருந்துகளுக்கு எதிராக நடத்திய சட்டப்போராட்டத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது. இது மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்கிறார் அவர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவரான டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு "ஓஆர்எஸ்" பானங்கள் வழங்கப்பட்டாலும் கடுமையான நீரிழப்பு ஏற்படும் ஒரு ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடி வந்தார்.
பிரபலங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு, மருந்தகங்களில் மிகப் பிரகாசமான பாக்கெடுகளையில் விற்கப்படும் ஓஆர்எஸ் என்ற பெயரில் இருக்கும் பானங்கள், உடலுக்கு நீர்ச்சத்தை ஏற்படுதுதும் என்று கூறப்பட்டாலும் அவை முழுக்க முழுக்க சர்க்கரையால் நிரம்பியிருக்கின்றன. சில ஓஆர்எஸ் பானங்களில், மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட திரவங்களில் இருக்க வேண்டிய அளவி விடவும் பத்து மடங்கு அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் சிவரஞ்சனியின் போராட்டம் வெற்றியை எட்டியிருக்கிறது. அக். 14ஆம் தேதி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது, உணவு மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது. அதில், வாய்வழி நீர்ச்சத்து திரவம் (ஓரல் ரீஹைட்ரேஷன் சொல்யூஷன்) எனப்படும் ஓஆர்எஸ் என்ற பெயரை, எந்த உணவுப் பொருளுக்கும் பெயராகவோ, அச்சிடப்பட்ட பெட்டிகளிலோ, குறியீடாகவோ, முன்போ அல்லது பின்பக்கத்திலோ கூட பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்பதே அந்த அறிவுறுத்தல்.
எனவே, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கடுப்பாட்டுச் சட்டம் 2006ன்படி, எந்தவொரு மாநிலத்திலும் ஓஆர்எஸ் என்ற பெயரில் பானங்களை, பழச்சாறுகளை, கார்போனேட்டன் இல்லாத அல்லது குடிக்கத் தயாராக இருக்கும் பானங்களை தயாரிப்பது சட்டப்படிக் குற்றமாகும். மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி, தவறான தகவல்களை அளித்து நுகர்வோரை ஏமாற்றும் செயலாக இது கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சிவரஞ்சனிக்கு, இது ஒரு சாதாரண வெற்றியல்ல, அவருக்கு உணர்வுப்பூர்வமான ஒன்றாகவும் மாறியிருக்கிறது.
என்னுடைய இந்த போராட்டம் சுமார் எட்டு ஆண்டுகளாக நீடித்தது, தற்போது நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இனிமேல், அதிகப்படியான சர்க்கரைக் கலந்துள்ள ஒரு பானம் ஓஆர்எஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படாது, இனி இங்கு ஒரே ஒரு ஓஆர்எஸ் பானம் விற்கப்படாது. இது பெற்றோருக்கான வெற்றி, குழந்தைகளுக்கான, இந்த நாட்டு மக்களுக்கான வெற்றி என்று உணர்ச்சிப்பொங்க பேசியிருக்கிறார். இது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. பலரும் அவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுக்க, மருந்தகங்களில் வண்ணமயமான பாட்டில்களிலும், டெட்ரா பெட்டிகளிலும் ஓஆர்எஸ்எல் என்ற பெயரில் அல்லது ஓஆர்எஸ் என்று புரிந்துகொள்ளும் வகையிலான பெயர்களுடன் சில பானங்கள், நீர்ச்சத்தை தக்க வைக்கும் மருத்துவ அங்கீகாரம் பெற்ற பானங்களுடன் சேர்த்து பார்வைக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் மருத்துவமனைக்கு வரும் பெற்றோர்களுக்கோ, அவர்களுக்கு இருக்கும் பதற்றத்தில், மருந்தகங்களில் இருக்கும் இவை, உலக சுகாதார நிறுவனத்தால், வாய்வழி நீர்ச்சத்து உப்புக் கலவை என்றும், இதுதான் வயிற்றுப்போக்குக்கான சிறந்த மருந்து என்றும், உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருப்பதாகவும் தோன்றும்.
உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்திருக்கும் ஓஆர்எஸ் பானம் என்பது 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் கலக்கப்பட்ட கலவையே ஓஆர்எஸ்.
ஆனால், சந்தையில் விற்பனையாகும் ஏராளமான பானங்களில் ஒரு லிட்டருக்கு 120 கிராம் சர்க்கரைக் கலக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் அபாய அளவில் எலக்ட்ரோலைட் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது, குறிப்பாக, நீர்ச்சத்துக் குறைந்த குழந்தைகளுக்குக் கொடுப்பது அபாயத்தை ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர் சிவரஞ்சனி.
ஒருவேளை உங்கள் குழந்தைக்கு உடல்நிலை பாதித்து மருந்தகம் சென்று ஓஆர்எஸ் என்று பெயரிட்ட பானத்தை வாங்கி உங்கள் குழந்தைக்கு, உடல் நலம் பாதித்திருக்கும் குழந்தைக்கு வெறும் சர்க்கரை திரவத்தைக் கொடுக்கிறீர்கள் என்றால், ஒரு பெற்றோராக எவ்வாறு நீங்கள் உணர்வீர்கள்? என்று சிவரஞ்சனி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஒரு குழந்தைகள் நல மருதுதவராக, இதுபோன்ற தடை செய்யப்பட வேண்டிய பொருள்களால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன், அது எப்படி, யார் வேண்டுமானாலும், எந்த ஒரு பானத்துக்கும் ஓஆர்எஸ் என்று பெயரிட்டு சந்தைப்படுத்த முடியும்? என்று ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
குழந்தைகளுக்கு இனிப்பு சுவை பிடிக்கிறது. அதை வைத்து நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அதனை நீர்ச்சத்து பானங்கள் என விளம்பரப்படுத்தி பெற்றோரை வாங்க வைக்கிறார்கள். விளம்பரப்படுத்த பிரபலங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதை வைத்து பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் விற்பனை செய்கிறார்கள். இதுதான் என்னை அதிகம் கோபப்படுத்தியது என்கிறார் சிவரஞ்சனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.