புதையல் 34

புதையல் 34

இயற்கையே சிறந்த ஆசான் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கிய அறிவொளி

இயற்கையோடு இணைவோம்!

(இயற்கையே சிறந்த ஆசான் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கிய அறிவொளி இயற்கையிலிருந்து பாடம் படிக்கும் பயிற்சியை கார்த்திக், விஷ்ணு, சந்தோஷ் ஆகிய மூவருக்கும் கற்றுக் கொடுக்கலானார்)

அறிவொளி :  கண்களை மூடி அமைதியா ஒரு இடத்துல  உட்கார்ந்து நான் இனி சொல்லப் போவதையெல்லாம் உண்மையிலேயே நடப்பது போல மனக்காட்சியா பாருங்க.

நீங்க இப்ப மனித நடமாட்டமே இல்லாத ஒரு காட்டுப் பகுதியில நடந்து போய்க்கிட்டுருக்கீங்க. இயற்கை  எழில் சூழ்ந்த அப்பகுதியின் அழகை ரசித்தபடி நடந்து போறீங்க.

வழக்கமான பிரச்சனைகள், கவலைகளையெல்லாம் மறந்து விட்டு ஆழ்ந்து மூச்செடுத்தபடி ஐம்புலன்களும் விழிப்பு நிலையில் இருக்கும்படி  நடந்து போறீங்க.  

விழிப்பு நிலை உச்சத்தைப் பெற உங்களை ஒரு மானாக கற்பனை பண்ணிக்கோங்க. மான் எப்படி எச்சரிக்கையோடு சுற்றும் முற்றும்  பார்த்தபடி மெதுவா, அதே சமயம் புதரின் சின்ன அசைவுக்கும் ஓடத் தயாரான கால்களோட இருக்குமோ அதைப் போல் நடந்து போய் அமைதியா ஓரிடத்தில் உட்கார்ந்து ஆழ்ந்து மூச்செடுங்க. (இந்தப் பயிற்சி ஐம்புலன்களையும் விழிப்பு நிலையில் வைத்திருப்பதால் நமக்கு வரக்கூடிய நன்மை தீமைகளை முன்னறிவிக்கும் உள்ளுணர்வை கொடுக்கும்)

இப்போது ஆழ்ந்து மூச்செடுத்து, உடலைத் தளர்த்தி தலைக்கு மேல் பத்து சென்டிமீட்டர் உயரத்தில் உங்க  கவனம் முழுவதையும் கொண்டு வாங்க. உடல் லேசாகி காற்றில் பறப்பது போல ஒரு உணர்வு ஏற்படும். இப்போது உங்களை ஒரு பறவையா கற்பனை செய்துக்கோங்க. உங்களோட கவலைகள், பிரச்சனைகள் எல்லாவற்றையும் கீழேயே விட்டுட்டு மேலே மேலே உயரத்தில் பறக்கிறீங்க. உங்கப் பார்வை கழுகின் பார்வையைப் போல கூர்மையாகுது.

கீழே உள்ள பூமிப்பரப்பு முழுவதையும் இப்ப உங்களாலத் தெளிவா பார்க்க முடியுது. இந்தப் பரந்த தொலைநோக்குப் பார்வையோடு இருக்கும் போது உங்களோட வழக்கமான பிரச்னைகள் எல்லாம் ஒரு சின்ன புள்ளி போல அற்பமானதாகத் தெரியுது. அப்படியே கொஞ்ச நேரம் லேசான உடம்போடையும், மனத்தோடையும் பறந்த பிறகு பழைய நிலைக்குத் திருப்புறீங்க.

(இப்பயிற்சியின் மூலம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை அனுபவங்களாகப் பார்ப்பதோடு அவற்றைத் தீர்ப்பதற்கான தெளிவான கண்ணோட்டத்தையும் பெற முடியும்)

ஒரு சிலர் சுயபரிதாபம் உடையவர்களாக எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்னை வருது என மனம் நொந்து வாழ்க்கையை குழம்பிய குட்டையாக்கி கொள்ளுவாங்க. அவங்க தன்னை ஓடும் நதியா கற்பனை செய்துக்கணும். ஓடும் நதி மேடு பள்ளம் எங்கேயும் நிற்காம ஓடித்  தான் போகுமிடம் எல்லாம் வளமாக்கிக்கிட்டே போவது போல இன்பம் துன்பம் எதிலேயும் நின்றுவிடாமல்  தானும் வாழ்ந்து மத்தவங்களையும் வாழ வைக்க முடியும். 

(சில வினாடிகள் அமைதியாக இருந்த அறிவொளி பின் அவர்களை  ஆழ்ந்து மூச்செடுத்து விடச் செய்து மூன்று முறை கைகளைத் தேய்த்து கண்களின் மீது வைக்கச் செய்து புத்துணர்வு பெற்றுக் கொண்ட பின் இயல்பு நிலைக்குத்  திரும்ப செய்தார்)

என்ன இந்த பயிற்சி  அனுபவம்  எப்படி இருந்தது? 

கார்த்திக் : சான்ஸே இல்ல சார், இது மாதிரி ஒரு சூப்பரான அனுபவம் எனக்குக் கிடைச்சதே இல்லை. எனக்கு மழையில நனையுறதுன்னாலே ரொம்ப பிடிக்கும். நானே மழை நீரா மாறி ஆறா பெருக்கெடுத்து ஓடி பள்ளங்களையெல்லாம் நிரப்பினேன், நான் ஓடிய இடமெல்லாம் பசுமையான வயல்வெளிகளும், மரங்களும் சூழ்ந்ததா இருந்துச்சு. அங்கிருந்த மனுஷங்க எல்லோரும் சந்தோஷமா இருந்ததையும் பார்க்க முடிஞ்சது. எனக்குள்ள நான் சரியா படிக்கலைன்னு எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். இப்ப அப்படி ஒரு எண்ணமே  இல்லை சார். எதிர்காலத்துல ஏதோ ஒரு விஷயத்துல நான் பெரிய ஆளா ஆகப்போகிறேன். மத்தவங்களுக்குப் பயனுள்ளபடி வாழப் போறேன். என்னை சுத்தி இருக்கவங்களை எல்லாம் சந்தோஷமா வெச்சுக்கப் போறேன்னு தோணுது சார். இந்த நம்பிக்கையைக் கொடுத்த உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். (கார்த்திக் உணர்ச்சிவசப்பட்டு பேசியது கேட்டு மற்ற மூவரும் கைகளைத் தட்டி அவனைப் பாராட்டினர்)

விஷ்ணு : எனக்கும் இந்தப் பயிற்சி ரொம்ப பிடிச்சுது சார். எப்பவுமே எங்கப்பா குடிச்சிட்டு வந்து எங்கம்மாவை அடிக்கிறது, என் வீட்டு பணக்கஷ்டம் இது மட்டும் தான் எனக்குப்  பெருசாத்  தெரியும். ஆனா நான் ஒரு பறவையா மாறி உயரத்துல பறந்தப்போ இந்த உலகம் எவ்வளவு பெரிசு, எனக்கான வாய்ப்புகள் எவ்வளவு அதிகமா இருக்குன்னு புரிஞ்சதால என் வீட்டு பிரச்சனை ரொம்ப குட்டியா கடுகளவா மாறிடுச்சு. நான் பெரிசாகி என் குடும்பத்தோட சூழ்நிலையை மாத்திட முடியும் என்ற நம்பிக்கை வந்துடுச்சு சார்.

அறிவொளி : வெரி குட் விஷ்ணு. நீங்க ரெண்டு பேரும் பேசுறதைக் கேட்டு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சந்தோஷ் நீங்க எதுவுமே சொல்லலையே!

சந்தோஷ் : சார் உண்மையிலேயே நாங்க மூணு பேரும் ரொம்ப குடுத்து வச்சவங்க சார். ஏன்னா பெரிய நகரங்களில் பல ஆயிரக்கணக்கில் பணம் குடுத்து தான் இந்த மாதிரியான பயிற்சிகளை எல்லாம் பெற முடியும்னு எனக்குத்  தெரியும். அதை எல்லாம் நீங்க இலவசமா எங்களுக்கு சொல்லித் தர்றது பெரிய விஷயம். பொதுவா நான் ஒரு நல்ல ஆசிரியர்னு எல்லோரும் சொன்னாலும் நிறைய விஷயத்துல எனக்கு ரொம்ப கவனக் குறைவு உண்டுன்னு எனக்கேத்  தெரியும். மான் மாதிரி என்னை நான் கற்பனை பண்ணிக்கிட்டப்போ தூரத்துல இருக்கும் புதரோட சின்ன அசைவுக்கும்  கூட என் உடம்பு சிலிர்த்ததை என்னால உணர முடிஞ்சுது. இனி என்னை சுற்றி நடப்பவற்றைப் பற்றி நல்ல விழிப்புணர்வோட இருப்பேன்னு நம்பிக்கை இருக்கு சார்.

அறிவொளி : வெரி குட், எப்பவுமே நாம் இப்ப இருக்கும் நிலையை விட எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடையுறோம் என்பது தான் முக்கியம் இந்தப் பயிற்சிகள் மூலம் உங்களோட முன்னேற்றத்துக்கு உதவி செய்ததுல எனக்கும் மகிழ்ச்சி. இதே மாதிரி இயற்கையில் உள்ள ஒவ்வொரு பொருளோடும் நம்மை ஒன்றிக்கும் பயிற்சியை செய்தால் இயற்கைக்கும் நமக்கும் உள்ள தொடர்பையும் தெரிஞ்சிக்கவும்  முடியும். இயற்கையின் நற்குணங்களை நாம்  அடையவும் முடியும். இதோடு இன்னொரு பயிற்சியும் சொல்லிக் கொடுத்தா உங்களுக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்.

கண்களை மூடி உடம்பைத் தளர்வாக்கி, வசதியான நிலையில் உட்கார்ந்துகொண்டு ஆழ்ந்து மூச்செடுங்க. வெளிவரும் சூடான மூச்சுக்காற்றோடு உங்கப் பிரச்சனைகள்,  கவலைகளையும் சேர்த்து வெளியேற்றுங்க. ஐம்புலன்களையும் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். என்னென்ன சத்தங்கள் காதில் கேட்குதுன்னு உற்று கவனிங்க. என்னென்ன வாசனைகளை உணர முடியுது? நாவில் என்ன சுவை மிச்சமிருக்கு? உங்களைச் சுற்றிலும் தட்பவெப்பம் எப்படி இருக்கு? இந்தச் சூழ்நிலை என்ன மாதிரியான உணர்வுகளை உங்க மனதில் ஏற்படுத்துதுன்னு யோசிங்க.

இப்ப இயற்கை எழில் சூழ்ந்த, மரங்கள் நிறைந்த ஒரு மலைப் பகுதியில் நீங்க இருப்பதா கற்பனை செய்துக்கோங்க. அந்த இடத்தில் உங்களைச் சுற்றிலும் என்னென்ன இருக்குன்னு உற்றுப் பாருங்க. பருவகால மாற்றங்களுக்கு உட்பட்ட பாறை, மரத்துண்டு என ஏதாவது ஒரு பொருளை கையில் எடுத்துக்கோங்க. காலம் அதன்மேல் ஏற்படுத்தியிருக்கும் கோடுகள், விரிசல்கள், டிசைன்கள், எல்லாவற்றையும் ஒரு குழந்தைக்கு இருக்கக் கூடிய ஆராய்ச்சி  கண்ணோட்டத்தோடு பாருங்க. அந்தப் பொருள் மீது இயற்கை ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை ஒப்பிடும்போது  நம் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ரொம்பவும் சாதாரணமானவைதான்னு உணர்வுபூர்வமா  ஏற்றுக்கொள்ளுங்க. ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வுகள் பற்றிய வருத்தம் கோபம், பழிவாங்கும் உணர்ச்சி, எதிர்காலத்தைப் பற்றிய பயம், எதிர்பார்ப்பு எல்லாத்தையும் மறந்து, 'நான் இப்போது இங்கே இருக்கிறேன்' (I am here and now) எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கோங்க. மனம் லேசாகி நிம்மதி அடையும் வரை இந்தச் சூழலில் இருங்க.

இப்ப ஆழ்ந்து மூச்செடுத்து  மெதுவா கண்களைத் திறங்க.

(மூவரின் கண்களிலும் நிறைவும், புன்னகையும் காணப்பட்டது.)

கார்த்திக் :  சார், நிஜம்மாவே ஊட்டி, கொடைக்கானல் போயிட்டு வந்த மாதிரி இருக்கு.

அறிவொளி : வாய்ப்பு கிடைக்கும்போது நிஜம்மாவே போயிட்டு அங்கிருந்து சின்னப் பாறை, கூழாங்கல்,  மரத்துண்டுன்னு எதையாவது எடுத்துட்டு வந்து அதை வெச்சி தியானிக்கலாம். ஒரு கூழாங்கல் அவ்வளவு வழவழப்பா மாற எவ்வளவு மாற்றங்களை சந்திச்சிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க! மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பதைப் புரிந்துகொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தால், எத்தகைய சூழ்நிலையிலும் தெளிவான சிந்தனையுடன் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

தொடரும்...

பிரியசகி 

priyasahi20673@gmai.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com