Enable Javscript for better performance
புதையல் 29- Dinamani

சுடச்சுட

  
  306e3c79-9669-40dc-891d-3c99ee968801

  வாழ்க்கையில் ஜெயிக்க...!

  (வாழ்க்கையில் ஜெயிக்க பிறருடன் கலந்து பழகுவது எவ்வளவு முக்கியம் என்பது பற்றி விளக்கி கொண்டிருந்தார் அறிவொளி.) 

  விஷ்ணு : சார் மத்தவங்களோட எளிதா பழகுறதோ, மேடையில் பேசுறதோ எல்லோருக்கும் வர்றதில்லையே இதுக்கு என்ன செய்யணும் ?

  சந்தோஷ் : நீ சொன்னது ரொம்ப சரி தான் விஷ்ணு, புதுசா பார்ப்பவர்களையும் நண்பர்களா ஆக்கிக்கவோ, மத்தவங்க கிட்ட நமக்கு ஆக வேண்டிய காரியத்தை சாதிக்கவோ இந்தத் திறன் ரொம்ப அவசியம். ஆனா, தான் சொல்ல வந்ததை மத்தவங்களுக்குப் புரியும்படி பளிச்சுன்னு சொல்றவங்க எத்தனை பேர்? உச்சரிப்பில் பிழை, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுவதில் பயிற்சி இல்லாதது, சொல்ல வந்த விஷயத்தில் தெளிவும், தீர்க்கமும் இல்லாததும், பதற்றம், தன் மீதும் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் மீதும் நம்பிக்கை இல்லாததும் தான் மேடைப்பேச்சில் ஜெயிக்க முடியாதவர்கள் சொல்லும் காரணங்கள்.

  எந்த ஒரு காரியத்துக்கும் முன் தயாரிப்பு ரொம்ப முக்கியம். மேடையில பேசுறதுக்கு முன்னாடி  வீட்டில்  கண்ணாடிக்கு முன்னாடி நின்னு பலமுறை சரியான உடலசைவுகளோடப் பேசிப் பார்க்கணும். ராமனுக்காக சீதைகிட்ட தூது போறதுக்கு முன் அனுமன் கூட மனசுக்குள்ளேயே பேசி ஒத்திகை பார்த்துக்கிட்டு அப்புறமா தான் நேர்ல போய்  பேசியதா வால்மீகி ராமாயணத்துல இருக்கு. பேச்சுத்திறனை வளர்த்துக்க நிறைய புத்தகங்கள் படிக்கிறதும், மேடைப் பேச்சாளர்களோட பேச்சுகளைக் கேக்குறதும் ரொம்ப முக்கியம். இப்பதான் இன்டர்நெட் வசதி இருக்கே . உங்களுக்குப் பிடிச்ச பேச்சாளர்களோட பேச்சை 'யூ ட்யூப்' வழியா வீடியோவில் பார்த்து அவரோட நிறை, குறைகளை உங்களோட ஒப்பிட்டுப் பார்த்து உங்களை வளர்த்துக்க முடியும். யார் பேசினாலும் அவர் என்ன பேசுகிறார்னு உன்னிப்பா கவனிக்கணும்.

  கார்த்திக் :  அது தான் சார் பிரச்சனையே சில நேரம் யாராவது பேசத் தொடங்கியதுமே மனசு வேற எதைப் பத்தியாவது யோசிக்கத் தொடங்கிடும். அவர் பேசி முடிச்சு எல்லோரும் கைதட்டும் போதுதான் திரும்ப கவனம் வரும்.

  அறிவொளி : கவனத்தை சிதற விடாம மனதை ஒருமைப்படுத்துறது ரொம்ப முக்கியமான விஷயம் கார்த்திக். ஒரு வேளை பேச்சாளர் சரியா பேசலைனா கூட இவரை மாதிரி நாம பேசக் கூடாது என்பதையாவது கத்துக்க முடியும்.

  விஷ்ணு : சரி சார் மத்தவங்க மனதில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியுமா? அதுக்கு ஏதோ பயிற்சி இருக்குன்னு சொன்னீங்களே, அதைப் பத்தி சொல்லுங்க சார்.

  அறிவொளி : மத்தவங்க மனதில் இருப்பதைப் படிப்பது மந்திரவாதிகளுக்கோ, சினிமாவிலோ மட்டுமில்ல, பயிற்சியின் மூலம் நமக்கும் சாத்தியம்தான்.  நான் ஒரு பயிற்சிப் பட்டறைக்குப் போன போது கொடுக்கப்பட்டதை உங்களுக்கு காட்டுறேன்.

  (கார்த்திக்,விஷ்ணுவிடம் ஆளுக்கொரு வெற்றுத்தாளையும் ஒரு பேனாவையும் கொடுத்த அறிவொளி அத்தாளை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ளச் சொன்னார். பின் ஒரு அச்சடிக்கப்பட்ட தாளை சந்தோஷிடம் கொடுக்க அவர் அதிலிருந்து உரக்க வாசித்தார்)

  நான் பாலைவனத்தில் நடந்து கொண்டே, ‘கடவுளே என்னை இதிலிருந்து எடுத்து விடு’ எனக் கதறினேன். அப்போது கடவுளின் குரல் ,

  ‘இது பாலைவனம் அல்ல‘ என்றது. நான் கேட்டேன், ‘அப்படியானால் இந்த பரந்த மணற்பரப்பும், தகிக்கும் வெப்பமும், ஆள் அரவமற்ற இடமும்....’

  மீண்டும் கடவுளின் குரல் சொன்னது, ‘இது பாலைவனமல்ல’ .

  2) இப்போது உங்கள் தாளின் முதல் பாகத்தில் பின் வரும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.

  • கொடுக்கப்பட்ட உரையாடலில் எந்த வார்த்தை அல்லது வாக்கியம் உங்களுக்கு முக்கியமானதாகப் பட்டது ?
  • இதைப் படிக்கும் போது என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டன?
  • உங்கள் வாழ்வை பாலைவனமாகும் எவற்றையெல்லாம் நீக்கி விட விரும்புகிறீர்கள் ?
  • எந்த நிகழ்வுகளால் அல்லது யாரால், உண்மையிலேயே நீங்கள் இருப்பது பாலைவனம் அல்ல என உணருகிறீர்கள் ?

  3) இப்போது கண்களை மூடி உங்களை ஒரு பத்து வயது குழந்தையாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில் அதே உரையாடலை மீண்டும் படித்து, தாளின் இரண்டாம் பாகத்தில் விடை எழுதுங்கள்.

  4) மீண்டும் கண்களை மூடி உங்களை எழுபது வயது முதியவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். முதியவரின் கண்ணோட்டத்தில் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.

  5) ஒரே உரையாடலின் பொருள் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் எவ்வாறு மாறுபடுகிறது எனப் பாருங்கள். மூன்று பதில்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பாருங்கள்.

  6) இதே உரையாடலை ஒரு குழந்தையிடமும், முதியவரிடமும் உங்கள் வயதொத்த மற்றொருவரிடமும் கொடுத்து பதிலளிக்க செய்து உங்களது கண்ணோட்டத்திற்கும் அவர்களது பதில்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பாருங்கள்.

  அறிவொளி : இந்தப் பயிற்சியை கவிதைகள், உரையாடல்களைக் கொண்டு மற்றவர்களோட  கண்ணோட்டங்களில் யோசித்துப் பழகினால் மற்றவங்க  என்ன நினைக்கிறாங்கன்னு  நம்மால் சரியாக யூகிக்க முடியும். பிறர் மனதைப் படித்தல் என்பது முக்கியமான தலைமைப் பண்புகளில் ஒன்று.

  சந்தோஷ் : உண்மை தான் சார். மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு சரியாப் புரிஞ்சுக்கிட்டு சூழ்நிலைக்கு ஏத்தபடி நடந்தா பல நேரங்களில் பிரச்னைகளையும், உறவுச் சிக்கல்களையும் தவிர்க்க முடியும். அதே மாதிரி மத்தவங்க மனசு புண்படாம பேசுறதும் ரொம்ப முக்கியமான ஒரு பண்பு. அவசரப்பட்டு கோபத்துல வார்த்தைகளை விட்டுட்டு அப்புறமா வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. அதனால மத்தவங்களோட வெறுப்புக்கு ஆளாவது தான் மிச்சம். 

  கார்த்திக்: சார் எப்பவும் நல்லொழுக்கக்  கருத்துக்களை கதை சொல்லி விளக்குவீங்களே, ஒரு கதை சொல்லுங்களேன்.

  சந்தோஷ் : கதையா, சரி சொல்றேன். கழுதை ஒன்னு வேகமா ஓடிக்கிட்டிருப்பதை பார்த்த ஒரு குயில், 'என்னாச்சு கழுதை அண்ணா ? எங்கே இவ்ளோ வேகமா போறீங்க'ன்னு கேட்டுச்சாம். அதுக்கு கழுதை சொல்லுச்சாம், 'என்னைக் கண்டாலே இந்த ஊர்ல யாருக்கும் பிடிக்கலை. நான் வாயைத் திறந்து பேசினாலோ, பாடினாலோ எல்லோரும் காதைப் பொத்திக்கிறாங்க. என் குரல் வளத்தைக் கண்டு எல்லோருக்கும் பொறாமை. அதனாலதான் நான் இங்கிருந்து பக்கத்து ஊருக்கு போயிடலாமுன்னு பார்க்கிறே'ன்னு சொல்லுச்சாம்.

  அதுக்கு குயில் கழுதையண்ணா நீங்க சத்தமா கத்தி மத்தவங்களைக் கஷ்டப்படுத்தினா இங்க மட்டுமில்ல எங்கப் போனாலும் உங்களை அடிச்சி விரட்டத்தான் செய்வாங்க. பேசும் போது கேக்குறவங்க சந்தோஷப்படுற மாதிரி நல்ல வார்த்தைகளை பேசினா தான் எல்லோருக்கும் நம்மைப் பிடிக்கும். இடம் மட்டும் மாறுவதால ஒரு பிரயோசனமும் இல்லை. நம் பழக்க வழக்கமும் பேசும் வார்த்தைகளும் நல்லதா மாறினா உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் தானே கிடைச்சுடும், அப்படின்னு சொல்லுச்சாம்.

  கார்த்திக் : சூப்பர் கதை சார். எங்க அத்தை ஒருத்தர் இப்படித்தான் எப்ப வந்தாலும் ரெண்டு மணிநேரம் அவங்களைப் பத்தியே பெருமையாவும் மத்தவங்களைப் பத்தி மட்டமாவும் பேசுவாங்க. அவங்க வர்றதைப் பார்த்தாலே எங்கம்மா கடைக்குப் போறேன்னு கிளம்பிடுவாங்க இல்ல தலைவலிக்குதுன்னு படுத்துக்குவாங்க.

  (எல்லோரும் சிரித்தனர்  )

  அறிவொளி : உலகத்துல நிறைய பேர் இப்படித்தான் திரியிறாங்க. மேடைப் பேச்சாளர்களே சில பேர் பேச வந்த தலைப்பை விட்டுட்டு தன்னைப் பத்தி புகழ் பாடவும், தனக்குப் பிடிக்காதவங்களைத் திட்டவும் செய்து மத்தவங்களைக் கழுத்தறுப்பாங்க.  தான்  பேசுவது தனக்குப் பிடிச்சதா மட்டுமில்லாம கேக்குறவங்களுக்கு பிடிச்சதா, பயனுள்ளதா இருக்கான்னு பார்க்குறது ரொம்ப முக்கியம். இல்லைன்னா கழுதையை விரட்டுற மாதிரி நம்மையும் விரட்டியடிக்கத் தான் செய்வாங்க. பயனுள்ள விஷயங்களை சுவாரஸ்யமான விதத்தில் பேசக் கத்துக்கிட்டா குயிலோசையை ரசிப்பது போல நம் பேச்சையும் எல்லாருமே ரசிப்பாங்க. இதெல்லாம் வாழ்க்கையில் ஜெயிக்க ரொம்ப முக்கியம். ஆனா,வாழ்க்கையில் ஜெயிக்கிறதுக்கும் வாழ்க்கையையே ஜெயிக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. வாழ்க்கையை ஜெயிக்க பிறரோடு கலந்து பழகும் திறனில் வல்லவர்களாக இன்னும் சில பயிற்சிகள் அவசியம்.

  (வாழ்க்கையையே ஜெயிக்க உதவும் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரைக் காத்திருப்போமா ! )

  பிரியசகி 

  priyasahi20673@gmail.com 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai