Enable Javscript for better performance
Kidney failure Homeopathic remedies- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சிறுநீரக செயலிழப்புக்கு ஹோமியோ சிகிச்சை

    By டாக்டர் வெங்கடாசலம்  |   Published On : 10th April 2017 11:27 AM  |   Last Updated : 10th April 2017 11:27 AM  |  அ+அ அ-  |  

    dialysis

    நம்உடலில் சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புகள் சிறுநீரகங்கள். உழைப்பும், உழைப்பாளிகளும் நடைமுறையில் குறைந்தளவே மதிக்கப்படுவதைப் போல சிறுநீரகங்களும் குறைவாகவே மதிக்கப்படுகின்றன. அவற்றின் வேலைத்திறன் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறையும் வரை அவை உடலுக்கு பெரிய சிரமங்களை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை செயலிழப்பை அறியமுடியாமல், மோசமான நிலையை நோக்கி நோய்நிலை முன்னேறி வருகிறது.

    இந்தியாவில் ஆரம்ப கூட்டம் முதல் முற்றிய நிலை வரையிலான சிறுநீரக நோயாளிகள் சுமார் 7 கோடி பேர்கள் உள்ளனர். ஆண்டுக்கு 80லட்சம் புதிய சிறுநீரக நோயாளிகள் உருவாகின்றனர். 1.5 லட்சம் பேர்களுக்கு முற்றிய (நிரந்தர) சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இவர்களில் எவரும் டயாலிசிஸிஸ் அல்லது செயற்கை சிறுநீரகம் இல்லாமல் தப்பிவிட முடியாது என்கின்றனர் ஆங்கில மருத்துவ சிறுநீரக நிபுணர்கள்.

    செயலிழப்பு என்பது என்ன?

    உடலின் சுத்திகரிப்பு ஆலையாகவும், ரத்த செல்கள் உருவாக்கும் முக்கிய காரணியாகவும், உடலின் உள்ளார்ந்த இயல்பு நிலைகளைச் சமச்சீராகப் பராமரிக்கும் கருவியாகவும் சிறுநீரகங்கள் பங்காற்றுகின்றன. இப்பணிகள் பாதிக்கப்பட்டால் குறிப்பாக உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை, சிறுநீர் வெளியேற்றும் தன்மை போன்றவை படிப்படியாக இழந்தால் அதுவே சிறுநீரக செயலிழப்பு ஆகும்.

    காரணங்கள் என்ன?

    சிறுநீரக செயலிழப்புக்கான பிரதானமான காரணங்கள் (1) சிறுநீரகங்களைப் பாதிக்கும் நோய்கள் : சிறுநீரகக்கற்கள், சிறுநீரக அழற்சி (Nephritis), சிறுநீரகப் பாதை அடைப்பு, சிறுநீரகங்களில் கட்டிகள், அடிக்கடி சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்று (2) சிறுநீரங்களின் உள்ளமைப்புக் கூறுகள் வருடக்கணக்கில சேதடைதல் (3) கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயும், உயர்ரத்த அழுத்தமும், (4) முதல் மூன்று காரணங்களுக்கும் அடிப்படையாக உள்ள செயற்கை உரங்களில் விளைந்த உணவுப் பொருட்கள், வெளிநாட்டு துரித உணவுகள், சுகாதாரமற்ற குடிநீர், போதைப் பொருட்கள் போன்றவற்றால் ரத்தத்தில் அசுத்தங்களும், வேதிப்பொருட்களும் பெருகுகின்றன. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சிறுநீரகங்களின் ரத்த சுத்தகரிப்புப் பணி தோற்றுப்போகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்து தவிக்கின்றன.

    வேறு காரணங்கள் உள்ளனவா?

    ஆம். சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு ஏதேனும் ஓர் ஒற்றைக் காரணத்தை மட்டும் கூறிவிட்டு போக முடியாது. பன்முகத்தன்மை கொண்ட நோய் என்பதால் பன்முகத் தன்மை கொண்ட காரணங்கள் உள்ளன.

    உணவில் அதிகம் உப்பு சாப்பிடுவதால் கூட சிறுநீரகங்கள் பாதிக்கப்படக்கூடும். பொதுவாக சோடியம், பொட்டாசியம், மெக்னீஷியம்,கால்சியம் போன்ற 4 வகை உப்புகள் உள்ளன. ஒரு உடம்பிற்கு சோடியம் (உணவு உப்பு) ஒரு நாளைக்கு 1.5 கிராம் அளவு போதுமானது. ஆனால் நாவின் ருசிக்காக எல்லா உணவுப் பொருட்களிலும் உப்பு சேர்க்கிறோம். ஹோட்ட லில் உணவு பரிமாறும் முன் இலையின் மூலையில் 5 கிராம் அளவுக்கு வைக்கப்படும் உப்பு போதாமல் மேலும் கேட்டு வாங்கி உணவில் கலந்து உண்பவர்கள் பலர்.

    மிகை உப்பு வியர்வை வழியே வெளியேறும். மிஞ்சிய உப்பு சிறுநீரில் வெளியேறும். வியர்க்கவே வழியில்லாத வசதிகளும், உழைப்பற்ற, உடற்பயிற்சியற்ற நிலைமைகளும் இருந்தால் மிதமிஞ்சிய உப்பு குருதியில் கலந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். (கல் உப்பை விட Refined உப்பில் சோடியம் அளவு அதிகம்)

    உணவுகள் செயற்கை ரசாயனக் கலவையாகிவிட்டதைப் போல பாலியல் செயற்பாடுகளும் செயற்கைமயமாகிவிட்டது. இயற்கையான பாலியல் உந்துதல், உடலுறவு என்பது அரிதாகி, செயற்கை தூண்டல்களும், அதீத பாலுறவு செயற்பாடுகள், வரைமுறையற்ற சுய இன்பப் பழக்கங்களும் மனித ஆற்றலை பாழ்படுத்துகின்றன. விளைவாக எதிர்ப்பாற்றல் நலிவடைகின்றன. சிறுநீரக மற்றும் இனப்பெறுக்க உறுப்புகளின் செயல்திறன் பெரிதும் வீழ்ச்சி அடைகின்றன.

    ஆங்கில மருத்துவமுறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பலவித வலிநிவாரணிகள், எதிர் உயிரி மருந்து மாத்திரைகளின் வீரியமிக்க நச்சுத்தன்மையால் சிறுநீரகங்கள் தாக்கப்பட்டு நிலைகுலைந்து செயலிழந்து போகின்றன.

    மேலும், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளின் தாக்குதலால் சிறுநீரகங்கள் அடிக்கடிநோய்வாய்பட்டு நாளடைவில் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    சிறுநீரக செயலிழப்பினால் ஏற்படும் பாதிப்புகள் எவை ?

    1. சிறுநீரகங்கள் தான் ரத்தத்திலுள்ள பல்வேறு அமிலங்கள் மற்றும் ரசாயனங்களின் அளவைக் கட்டுப்படுத்தும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

    2. யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவு உப்புக்களின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். இவை ரத்தத்தில் அதிகரிப்பதனால் விஷப்பொருட்களைப் போல செயல்பட்டு உடலெங்கும் பாதிப்புகள் ஏற்படும்.

    3. ரத்த அழுத்தம் அதிகரிக்கும். (சிறுநீரகங்கள் தான் ஆடஐக் கட்டுப்படுத்தும் ‘ரெனின்’ என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன)

    4. சிவப்பணுக்கள் தொடை, இடுப்பு போன்ற பெரிய எலும்புகளின் மஜ்ஜையிலிருந்து தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு இரும்புச் சத்து உட்பட பலவித சத்துக்களும் சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகும் ‘எரித்ரோ பாயிட்டின்’ என்ற ஹார்மோன் சத்தும் தேவை. இதன் உற்பத்தி குறைந்துபோவதால் ரத்தசோகை ஏற்படுவது தவிர்க்கமுடியாமல் நிகழும்.

    5. எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் ‘கால்சிட்ரியால்’ என்ற ஹார்மோனையும் சிறுநீரகங்கள் தான் உற்பத்தி செய்கின்றன. சிறுநீரக செயலிழப்பால் எலும்புகள் வலுவிழக்கும்; எளிதில் எலும்பு முறிவு, எலும்புகளில் வலி, கை கால் குடைச்சல் ஏற்படும்.

    6.     (உடலில் கழிவு உப்புகள் அதிகரித்து) சிறுநீரின் அளவும் குறையும். இதனால் கை, கால், முகம், வயிறு வீக்கம் ஏற்படும்.

    7. இவ்வீக்கம் தொடர்ந்து அதிகரித்து நுரையீரல்களில் நீர்புகுந்து சுவாசத்தடையும் மூச்சுத் திணறலும் ஏற்படுகின்றன.

    8. பசியின்மை, வாய்கசப்பு, விக்கல், வாந்தி ஏற்படுகிறது.

    9. சோர்வு, தூக்கமின்மை, பகலில் மயக்கம், களைப்பு, எப்போதும் குளிராக உணர்தல், நடுக்கம், உதறல், வலிப்பு ஏற்படும். சிலருக்கு (கோமா) ஆழ்நிலை மயக்கம் ஏற்படலாம்.

    10. நிறம் கருத்தல், அல்லது சில சமயம் வெளுத்தல் ஏற்படும்.

    இவற்றில் அதிகபட்ச தொந்தரவுகள் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 70% குறையும் போது உண்டாகும்.

    சிறுநீரக செயலிழப்பு எனும் பாதிப்பின் வெவ்வேறு நிலைகள் என்ன?

    1ஆம் நிலையில் சிறுநீரகங்கள் பாதிப்பு இருந்தாலும் செயலிழப்பு ஏற்படாது. உயர்ரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை கால் உடல் வீக்கம் இருக்கலாம்.

    2. லேசான செயலிழப்பு : - கிரியேட்டினின் அளவு 2mgக்குள் இருக்கும். 1 & 2ஆம் நிலைகளில்   உணவுகளில் மாற்றம் மற்றும் சிகிச்சை மூலம் பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம். (சிறுநீரகங்களைப் பாதிக்கும் ஆங்கில வலி மருந்துகளை தவிர்க்க வேண்டும்).

    3. அதிக செயலிழப்பு : - கிரியேட்டினின் அளவு 2mg முதல் 6mg வரை உயர்ந்துவிடும். சிகிச்சை யுடன் ரத்த விருத்திக்கான மருந்துகளும் தேவை.

    4. முற்றிய செயலிழப்பு : - இந்நிலையில் செயல்திறன் 10%க்கும் கீழே வந்துவிடுகிறது. கிரியேட்டினின் அளவு 6-க்கு மேல் அதிகரித்துவிடுகிறது ரத்தஅளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதனால் பல உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் ஆங்கில மருத்துவமுறையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பிறரிடமிருந்து ஹெபடிடிஸ் கிருமி தொற்றாமலிருக்க ஏங்ல்.ஆ தடுப்பூசி போடப்படுகிறது. டயாலிசிஸ் அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்துதல் போன்றவை மூலமே உயிர்வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    டயாலிசிஸ் - மேலும் சில செய்திகள் :

    கழிவு உப்புகள் கலந்த ரத்தம் வெளியே எடுக்கப்பட்டு செயற்கை சிறுநீரக எந்திரம் வழியே செலுத்தி கழிவு உப்புகள் நீக்கப்பட்டு, சுத்தமான ரத்தம் மீண்டும் நோயாளி உடலில் செலுத்தும் முறையே டயாலிசிஸ் எனப்படுகிறது. இந்த ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis) எனும் ரத்தவழிச் சுத்திகரிப்பு கருவி 1940களில் இரண்டாம் உலகப் போரின் போது படுகாயமடைந்து சிறுநீரகங்கள் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதாகும். அன்று ஓர் அறையை அடைத்திருக்கக் கூடிய பெரிய கருவியாக இருந்தது. இன்று நவீனமடைந் துள்ளது.

    ஹீமோடயாலிசிஸ் மூலம் நோயாளி உடலிலிருந்து ஒரே சமயம் 200 ம்ப் முதல் 400 ம்ப் வரை மட்டுமே ரத்தம் வெளியே எடுக்க இயலும். இந்தச் சுத்திகரிப்பு செயல் பலமுறை சுமார் 4, 5 மணி நேரம் திரும்ப திரும்ப செய்தபின் ரத்த கழிவு உப்புகள் அளவு ஓரளவு குறையும்.

    நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் - டயாலிசிஸ் செய்தபின் குறைந்து விட்ட கழிவு உப்புகள் சிலநாளில் மீண்டும் உயர்ந்துவிடும். எனவே குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மீண்டும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.

    சிறுநீரக செயலிழப்புக்கு ஹோமியோ சிகிச்சை :

    திடீரென ஏற்படும் சிறுநீரக செயலிழப்புக்கு (ARF) ஹோமியோ மருந்துகள் சிகிச்சை பெரிதும் பலனளிக்கின்றது. தகுதியும், நிறைவான அனுபவ மும் உள்ள தேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் களால் மட்டுமே வெற்றிகரமான சிகிச்சை அளிக்கமுடியும். ஆர்சனிகம் ஆல்பம், குப்ரம் ஆர்ஸ், பிளம்பம்மெட், நேட்ரம்மூர், கோல்சிகம், ஓபியம், அபோசினம், ஏகில்போலியா, ஈல்சீரம் போன்ற மருந்துகளை நோயாளியிடம் காணப்படும் குறிகள் மற்றும் தனித்துவ வெளிப்பாடு அடிப்படையில்  தேர்வு செய்து பயன்படுத்தினால் நற்பலன் கிடைக்கிறது. மேலும் ஆரம்மெட், ராவோல்பியா, கிரேடகஸ், யுர்டிகா, ஆல்பால்ப போன்றவையும் பயன் அளிக்கின்றன.

    நாள்பட்ட, நிரந்தர செயலிழப்பு நோயாளியிடம் எதிர்ப்பாற்றல் வீழ்ச்சி அடைந்து, பல பாகங்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். இந்நிலையில் உடல், மன அமைப்புக்கேற்ற மருந்தும் (CONSTITUTIONAL HOMOEOPATHIC MEDICINE) தேவைக்கேற்ற இதர மருந்துகளும் அவசியநிலையில் டயாலிசிஸ் சிகிச்சையும் தேவை.

    -  Dr.S.வெங்கடாசலம்,

    மாற்றுமருத்துவ நிபுணர்,

    சாத்தூர்.

    செல்;94431 45700

    Mail Id : alltmed@gmail.com


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp