Enable Javscript for better performance
கொழுப்புக் கட்டிகளைக் குணப்படுத்தும் ஹோமியோபதி- Dinamani

சுடச்சுட

  

  கொழுப்புக் கட்டிகளைக் குணப்படுத்தும் ஹோமியோபதி

  By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 24th April 2017 10:43 AM  |   அ+அ அ-   |    |  

  homeopathy

  மருத்துவ உலகில் புரிந்து கொள்ளப்படாத விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ‘LIPOMA’ எனப்படும் கொழுப்புக்கட்டி. இது திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக நீண்ட காலம் எடுத்து மெல்ல உருவாகக்கூடியது. ஒரு கட்டத்தில் தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே நமது கவனத்திற்கு வரும். வெளிப்படையாகப் பார்த்தவுடன் கட்டி தெரிவதற்கு மேலும் பல காலம் ஆகும். பொதுவாக இக்கட்டி குறித்து ஆயுளுக்கும் அச்சப்படத் தேவையில்லை. 30க்கு மேற்பட்ட வயதினரிடம் அதிகமாக இக்கட்டி காணப்படுகிறது. பெண்களிடம் அதிகமாக SINGLE LIPOMAவும் ஆண்களிடம் அதிகமாக MULTIPLE LIPOMA வும் காணப்படுகிறது. குழந்தைகளிடம் அரிதாக காணப்படுகிறது.

  அமைப்பும், அறிகுறிகளும் :

  தோலுக்கும் அதன் அடியிலுள்ள தசையடுக்கிற்கும் இடையில் Adipose Tissue எனப்படும். கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியே Lipoma கட்டியாக உருவெடுக்கிறது. மனித உடல் போர்வை போல Adipose திசுக்களால் மூடப்பட்டுள்ளது. இது உடலுக்கு வெப்பத்தை, மென்மையை, அழகைத் தருகிறது. தோலின் கீழ் நளுக்நளுக்கென்று தோலில் ஒட்டாமல் நழுவிச் செல்வதுபோல் இருப்பது கொழுப்புக் கட்டியின் முக்கிய அடையாளம். இதை தவிர வேறெந்த அறிகுறிகளும் (Asymptomatic) தென்படுவதில்லை. கொழுப்புக் கட்டி மென்மையானது; புற்றல்லாத, தீங்கற்ற கட்டி[BENIGN] குழைத்த மாவு போல (ரப்பர் போல) காணப்படுவது.

  இக்கட்டிகள் உருண்டை வடிவில் அல்லது முட்டை போன்ற நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். சிறிய கட்டிகள் ஒரு செ.மீ. வரை விட்ட அளவு இருக்கும். பெரிய கட்டிகள் சிலரது உடலில் வளரலாம். பொதுவாக தொட்டாலோ, அழுத்திப் பார்த்தாலோ வலி இருக்காது. விதி விலக்காக சில கட்டிகளில் வலி இருக்கலாம். அவை சற்று ரத்த ஓட்டம் அதிகமுள்ள Angio Lipoma எனப்படும் கொழுப்புக் கட்டிகளாகும். எனினும் ஆபத்தானவை அல்ல. LIPOMA எப்போதுமே (பிற கட்டிகள் போல) புற்றாக மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

  காரணம் என்ன?   

  கொழுப்புக் கட்டிகள் தோன்றுவதற்கான பிரதான காரணிகள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. சிறு காயங்கள் கூட இக்கட்சி வளர்ச்சியினைத் தூண்டலாம். அதிக எடை, உடல் பருமன், கொலஸ்டிரால் போன்ற காரணங்களால் தான் LIPOMA ஏற்படுகிறது என்று உறுதியிட மருத்துவ உலகம் கூற முடியவில்லை. பாரம்பரியக் காரணங்களால் வளர்வது உறுதி செய்யப்படுகிறது. அத்தகைய நிலையில் (Familial Multiple Lipomatosis) குடும்ப வழிப் பன்மடங்கு கொழுப்புக் கட்டிகளாக வளர்கிறது. செயல்திறன் குன்றிய - மந்தமான கல்லீரல் இயக்கத்துடன் இக்கட்டிகளுக்கு தொடர்பு உள்ளதாக சில ஆராய்ச்சிக் குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

  ஆபத்து உண்டா?  

  உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக் கூடியது கொழுப்புக்கட்டி. பொதுவாக கொழுப்பு சேகரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் (Fat depositing Areas) குறிப்பாக கழுத்துப்பிடரி, தோள், முதுகு, முன் உடல் (Trunk), கைகள், பிருஷ்டம், இடுப்பு, தொடை, வயிறு போன்ற இடங்களில் தோன்றுகிறது.

  கொழுப்புக் கட்டிகளால் உடனடியாக எந்தவித ஆபத்தும் இல்லை. எனினும் எதிர்காலத்தில் இவை கேன்சராக மாறிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை. ஆனால் அவ்வாறு மாறாது. ஆயினும் LIPOSARCOMA எனும் ஒருவகைக் கொழுப்புப் புற்றுநோய் உள்ளது. இது தோலில் அல்லாமல் சற்று ஆழத்தில் கண்களுக்கு தெரியாமல் பதுங்கியிருக்கும்.

  உள்ளுறுப்புகளின் மீது வளரும் கொழுப்புத் திசுக்கட்டிகள் மிக அபாயகரமாக அமையக்கூடும். சில கட்டிகள் பெரிதாகி பருமனடைந்து (குறிப்பிட்ட நரம்புகளை அழுத்தினால்) வலி ஏற்படும். (இந்நிலையில் திசு பரிசோதனை (BIOPSY) செய்து பார்ப்பதுண்டு). இரைப்பை மற்றும் குடல்பாதை மீது கொழுப்புத்திசு கட்டி அமையுமானால் வலிமிக்க அடைப்பு, புண், ரத்தப்போக்கு, உணவு விழுங்க முடியாத நிலை (dysphagia), உணவு எதிர்க்களிப்பு, வாந்தி போன்ற பிரச்சினைகள் உருவாக்கலாம். நுரையீரல் காற்றுப் பாதைகளில் கொழுப்புத்திசுக் கட்டிகள் அமையுமானால் சுவாசம் தடைப்படக்கூடும். முதுகெலும்பு மீது ஏற்பட்டால் நிரந்தர அழுத்தம் காரணமாக பல வித சிக்கல்கள் பிறக்கும். இதே போல் பெண்களின் மார்பகங்களிலும், பிறப்புறுப்புகளிலும் உண்டாகும் கொழுப்புத்திசுக் கட்டிகளால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். 

  சந்தர்ப்பசமாக கொழுப்புத்திசுக் கட்டிகளால் நரம்பியல் பாதிப்புகள் (Neurological Discomforts) மற்றும் கடும் வலிகள் ஏற்படுமாயின், அருகிலுள்ள தசைகள், உறுப்புகளின் இயக்கத்திற்கு பிரச்சினை எனில் ஆங்கில மருத்துவமுறைச் சிகிச்சையின்படி LIPOSUCTION மூலம் உறிஞ்சப்பட்டு அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு நிவாரணம் பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்படும்.

  கொழுப்புத் திசுக்கட்டிகள் எத்தனை வகை?

  பலவகை கொழுப்புத் திசுக் கட்டிகள் உள்ளன. அவற்றில் பரவலாக பெரும்பாலோரிடம் காணப்படுவது மேலோட்டமான தோலடி கொழுப்புத் திசுக்கட்டி [Superficial Subcutaneous Lipoma]. தோல் புறப்பரப்பின் அடியில் (Just below the surface of the skin) கொழுப்புத் திசுக்களால் ஏற்படும் கட்டி. கொழுப்புத் தேக்கமுள்ள இடங்களில் எல்லாம் இக்கட்டிகள் தோன்ற வாய்ப்புள்ளது. பெரும்பாலும் முன்கையில், தொடையில், முன் உடலில் (Trunk) ஏற்படும்.

  Adiposa dolorosa என்பது ஒன்றுக்கு மேல் ஒன்று தோன்றும் கட்டிகள். Intra Muscular Lipoma என்பது கைகால் பெருந்தசைகளின் ஆழத்தில் காணப்படுவது. Chondroid Lipomas என்பது பெண்களின் கால்களில் ஆழமாக ஏற்படும் உறுதியான மஞ்சள் கட்டிகள். Spindle Lipomas எனப்படும் கதிர்செல் கொழுப்புத்திசுக் கட்டி மெதுவாக வளரும் தோலடிக் கட்டி வகையாகும். (Subcutaneous Lipoma) பெரும்பாலும் முதிய ஆண்களிடம் ஏற்படும் கழுத்து, மூக்கு, தோற்பட்டையில் உருவாகும். Neural Fibrolipoma என்பது நரம்புச் சார்ந்த மிகை கொழுப்புத்திசுக் கட்டி ஆகும். இதனால் நரம்பு அழுத்தம் ஏற்படும். Neural Fibrolipoma என்பது வலிமிக்க தோலடி முடிச்சு. இது கொழுப்புத்திசுக் கட்டியின் அனைத்துக் கூறுகளையும் கொண்டது. இது ரத்த நாளப் பாதைகளில் காணப்படும் Subcutaneous Lipoma ஆகும். வலிமிக்கது. Post traumatic Lipoma என்பது காயத்திற்கு பின் ஏற்படும் கொழுப்புத்திசுக்கட்டி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு சிறுகாயங்களும் காரணங்களாக இருப்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. [ஆயினும் இது குறித்த சர்ச்சைகளும் உண்டு.]

  சிகிச்சை என்ன?

  கொழுப்புத் திசுக்கட்டியைப் பொறுத்தவரை எந்தவிதச் சிகிச்சையும் தேவைப்படாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அதன் வளர்ச்சி தானகவே நின்றுவிடும். இருப்பினும் மறையாது. இக்கட்டிகள் மூலம் உள்ளார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்போது மட்டுமே அறுவைச் சிகிச்சை அவசியப்படுகிறது.
  மாறாக தோற்ற அழகைக் கொடுக்கிறது என்று கருதி (Cosmetic reasons) அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளுபவருக்கு மீண்டும் அதே இடத்தில் அல்லது அருகில் புதியதாக கொழுப்புத் திசுக்கட்டி மீண்டும் தோன்றி வளரும். கொழுப்புத் திசுக்கட்டி அனைத்துமே ஆபரேசனுக்குரிய நோய் (Surgical Disorder) அல்ல.

  ஹோமியோபதியில் கட்டியைக் குணப்படுத்த இயலுமா?

  ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட வெற்றி கிடைக்கிறது. சர்ஜரி மூலம் கட்டியை அகற்றுதல் என்பது நோய்க்காரணத்தை அல்லாமல், நோயின் விளைவுகளை அகற்றியுள்ளதாக ஹோமியோபதி கருதுகிறது.

  ஹோமியோபதி சிகிச்சையில் 1 செ.மீ.க்கும் குறைந்த அளவிலுள்ள சிறிய கட்டிகளை கரைப்பது எளிது. ஆரம்ப நிலையிலுள்ள சிகிச்சை மேற்கொள்வது துரிதமான நல்ல பலனை அளிக்கும். பெரிய கட்டிகளுக்கு ஹோமியோ சிகிச்சை மூலம் பலன் கிடைப்பினும் முழுவெற்றியாக அமைவதில்லை. கட்டியளவு பெரிதும் குறைவது சாத்தியம்.

  ஒரு குறிப்பிட்ட கட்டி படிப்படியாக வளர்வதைத் தடுத்து நிறுத்தவும், புதிய பல கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கவும் ஹோமியோ சிகிச்சை உதவும். சிலரது கட்டிகள் வலி ஏற்படுத்தும் நிலையில் வலி உபாதைகளைக் குறைப்பதற்கும் ஹோமியோ சிகிச்சை பயன்படும்.

  மனிதனிடம் காணப்படும் நோயை மட்டும் தனியே பிரித்துப் பார்க்காமல், நோயுற்ற மனிதனை முழுமையாக ஆய்வு செய்து நோயின் அடிப்படை காரணங்களை, நோய் தோன்றுகிற, மீண்டும் மீண்டும் தோன்றுகிற உள் இயல்புகளை கண்டறிந்து ஹோமியோவில் சிகிச்சை அளிக்கப்படுவதால் சிறந்த நன்மை பெற முடியும்.

  கொழுப்புத்திசுக்கட்டி சிகிச்சையில் பயன்படும் சில முக்கியமான ஹோமியோபதி மருந்துகள் பட்டியல் :

  பரிடா கார்ப், கல். ஆர்ஸ், கல். கார்ப், கல். ஃப்ளோர், செலிடோ, கோனி, கிரா, காலி ஐயோடு, லாபிஸ் ஆஸ், நக்ஸ்வாம், பைட்டோலக்கா, சிலிக்கா, சல், ஸ்பைஜீ, தூஜா.

  Dr.S.வெங்கடாசலம், 
  மாற்றுமருத்துவ நிபுணர்,
  சாத்தூர்.
  செல்;94431 45700 
  Mail Id: alltmed@gmail.com

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp