சித்ரவதை செய்யும் சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITIS)

சிறுநீரகங்கள் வயிற்றின் பின்புறமாக தண்டுவடத்தின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
சித்ரவதை செய்யும் சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITIS)
Published on
Updated on
4 min read

சிறுநீரகங்கள் வயிற்றின் பின்புறமாக தண்டுவடத்தின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. சிறுநீர்ப்பை இடுப்பெலும்பின் கீழ்பக்கத்தில் அமைந்துள்ளது.உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் இவ்வுறுப்புகள் வழியாகத்தான் வெளியேற்றப்படுகின்றன.

சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்புப் பிரச்னை, ஆண்களிடம் அதிகம் காணப்படும், சிறுநீர்ப்பாதையின் நீளம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். ஆனால் சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITS) என்பது பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது, இதற்குப் பல்வேறு காரணங்கள்  உள்ளன.

இருப்பினும் சிறுநீர்ப்பைக்கு அருகிலேயே சிறுநீரகம், சிறுநீர்ப் பாதை, பெண்ணுறுப்பு எல்லாம் அமைந்திருப்பதும் அவற்றில் ஏற்படும்  தொற்றுகளும் தான் இதற்கு முக்கிய காரணம். சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பதால் அழற்சி ஏற்படலாம். செயற்கை கருத்தடை சாதனங்கள் சிறுநீர்ப்பையை அழுத்தி நீர் முழுமையாக வெளியேற முடியாமல் தங்கி விடுவதுண்டு.கர்ப்பகாலத்தில் சிசு சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் நீர்ப்பை அழற்சி ஏற்படலாம். மாதவிடாய் காலங்களில் தூய்மையற்ற துணிகளை உபயோகிப்பதாலும் பெண்களுக்கு இந்த உபாதை வரக்கூடும்.

பிரசவ காயங்களாலும், இடுப்பு எலும்பின் உள்பகுதியில் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும், சிறுநீர்ப்பை அழற்சியுறலாம். புதுமண தம்பதியருக்கு அடிக்கடி HONEY MOON CYSTITIS ஏற்படக்கூடும். சிறுநீர்ப்பாதையில் புண்கள், நரம்புத்தளர்ச்சி, மூளை வளர்ச்சி குன்றுதல்,கடுமையான மலச்சிக்கல் போன்றவற்றாலும் அழற்சி ஏற்படலாம். வயிற்று வலிக்காக சாப்பிடும் ஆங்கில மாத்திரைகள் (ANTI –SPASMODIC) சிறுநீர்ப்பையில் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தி அழற்சியை ஏற்படுத்துவதுண்டு.

சிறுநீர்ப்பையில் நீர்த்தேக்கம் (Retention of urine), சிறுநீர்க்கசிவு (incontinence of urine) அதிக சிறுநீர் கழித்தல் (Polyuria), இரவில்  அதிக சிறுநீர் கழித்தல் (Nocturnal), சிறுநீர்ப்பாதை தொற்று (Urinary tract infection), இரவில் அனிச்சையாக சிறுநீர் கழித்தல் (Nocturnal enuresis),  சிறுநீரில் ரத்தப்போக்கு (Haematuria), சிறுநீர்ப்பாதையில் அல்லது சிறுநீர்ப்பையில் கற்கள் (Calculi in urinary tract or bladder) போன்றவை சிறுநீர்ப்பை  சார்ந்த இதர பிரச்சனைகள்.

சிறுநீர்ப்பை அழற்சி என்பது பலவிதமான குறிகளை பெண்களிடம் ஏற்படுத்துகிறது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உறுத்தல் ,சிறுநீரின் நிறம் மாற்றமடைதல், சிறுநீரில் துர்நாற்றம், அடிவயிற்றிலும், இடுப்பு எலும்புப் பகுதியிலும் வலி, சில சமயம் முதுகுவலி, காய்ச்சலடித்தல்,சிறுநீரை அடக்க இயலாமை, இருமினால், தும்மினால் கூட சிறுநீர் கசிதல் போன்ற உபாதைகள் சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படக்கூடும்.

பேருந்து நிலையத்தில் பழங்கள் விற்பனை செய்யும் பெண்ணுக்கு கொளுத்தும் வெயிலடித்து கொண்டிருந்த நாளொன்றில் நீர்க்கடுப்புக்கு மருந்து கேட்டு வந்தார். மரத்தடியில் குளிர்ந்த காற்றடித்தால் உடம்புக்கு இதமாக இருப்பதாகவும், நீர்க்கழிக்கும் போது கடுகடுவென்று வலியும், எரிச்சலும் இருப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு முறையும் குறைந்தளவே சிறுநீர்க் கழிப்பதாகவும் கடைசி சொட்டுகள் வெளிவரும் போது தாங்க முடியாத வலி ஏற்படுவதாகவும் கூறினார். அபிஸ்மெல் சில வேளைகள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்த பின், அவரது பிரச்சனை முழுமையாக தீர்ந்தது.

வங்கியில் பணியாற்றுக்கும் பெண்ணுக்கு ஓராண்டுக்கு முன்பு சிறுநீர்ப்பை கற்களை வெளியேற்ற ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு குறிகளுக்கேற்ப லைகோபோடியம்,பெர்பெரிஸ் வல்காரிஸ் ஆகிய மருந்துகள் உரிய முறையில் கொடுக்கப்பட்டன.

ஓராண்டு கழிந்த நிலையில் மீண்டும் அந்தப் பெண் சிகிச்சைக்கு வந்தார். பதினைந்து நாட்களாக சிறுநீர்கடுப்பு என்று மட்டும் தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்த பின்,இதரக் குறிகளை விவரித்தார். எப்போதும் சிறுநீர்ப்பை நிறைந்த உணர்வு இருப்பதாகவும், ஆனால் மிகவும் சிரமபட்டு முயற்சி செய்து தான் சிறுநீரைச் சொட்டு சொட்டாக வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும்,சிறுநீர் உஸ்ணமாக வெளியேறுவதாகவும், சிறுநீர் கழிக்கும் போது அடிமுதுகு, இடுப்பு பகுதியில் வலி பரவுவதாகவும் கூறினார். அவருக்கு லைகோபோடியம் மற்றும் பெர்பெரிஸ் வல்காரிஸ் சில வேளைகள் கொடுக்கப்பட்ட பின் ,மூன்று நாளில் முழு  நிவாரணம் பெற்றார்.

சிறுநீர்ப்பை அழற்சி தோன்றிய ஆரம்ப நிலையிலேயே ஹோமியோபதியில் எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இருப்பினும், இக்குறைபாடு உள்ளவர்களுக்கு எந்தக் கட்டத்திலும் ஹோமியோபதி மருந்துகள் முழு நிவாரணமளித்து குணப்படித்துகின்றன. சிறுநீர்ப்பை அழற்சி சம்பந்தப்பட்ட குறிகளுக்கான சிறப்பாக வேளை செய்யும் சில மருந்துகள்

சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். தாகமிருக்கும், நீர் அருந்தினால் நீர்ப்பையில் கடுகடுப்பு வலி அதிகமிருக்கும் (Tenesmus bladder) அமைதியற்ற தன்மை ஏற்படும், நின்றால் , நடந்தால் தொந்தரவு அதிகரிக்கும், உட்கார்ந்தால் சமனப்படும். சிறுநீர் கழிக்கும் போதும், முன்னும், பின்னும் வலியும், எரிச்சலும் இருக்கும்.

அபிஸ்மெல் (Apismel):  நாள்பட்ட சிறுநீர்ப்பை அழற்சிக்கு சிறந்த மருந்து. பெண்களுக்கு அதிகம் பயன்படும். பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் குறைந்தளவு சிறுநீர் வெளிவருதல். வீக்கம், எரிச்சல், கொட்டும் வலி , தாகமின்மை இம்மருந்தின் முதன்மை குறி. சிறுநீர்ப்பையில் சிறிதளவு நீர் சேர்ந்தாலும் உடனே கழிக்க தூண்டுதல் ஏற்படும். சூடான உறுக்கிய ஊசியை உள்ளே திணிப்பது போல கடைசி சொட்டுகள் மிகுந்த வேதனை ஏற்படுத்தும். சில சமயம் ரத்தம் கலந்த சிறுநீர் வரும், தாகமிருக்காது. குளிர்ச்சியும், குளிர்ந்த காற்றும் இதமளிக்கும்.

பெர்பெரிஸ் வல் (Berberis vul) : சிறுநீரகங்களில் ஏற்படும் வலி சிறுநீர்க்குழல் , முதுகு போன்ற இடங்களுக்கும் பரவும். மேல் முதுகு,  இடுப்பு பாகங்களுக்கு அல்லது சிறுநீர்ப்பை, பிருஸ்டம் கால்களுக்கு வலி செல்லக்கூடும். சிறுநீரகங்களில் கற்கள் உற்பத்தியாகுதல், சிறுநீர்ப்பையில் நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வலி ஏற்படும், பெண்களுக்கு சிறுநீரகக் கோளாறும், கர்ப்பப்பை கோளாறும், உடலுறவின் போது கடுமையான வெட்டும் வலியும் (Dyspaerunia) ஏற்படும்.

டெரிபிந்த் (Terebinth) : சிறுநீர்ப்பையில் கடும் எரிச்சலும் வெட்டும் வலியும் காணப்படும். நீர்ப்பையிலிருந்து நீர்த்தாரை நெடுக கடுமையான வலியுடன் (Urethritis) நீர்த்தேக்கம் ஏற்படலாம். மூத்திரக்கற்கள் மற்றும் அழற்சி வலியுடன் சிறுநீர்கரித்தல். சர்க்கரை, புரதம் (அல்புமின்), கெட்டியான குழகுழப்பான ரத்தம் போன்றவை நீரில் கலந்து (Haematuria) வெளிவரக்கூடும். சிறுநீர் கழிக்கையில் கர்ப்பப்பையில் எரிச்சல் ஏற்படும்.

எந்தவொரு கடுமையான நோய்க்குப் பின்னரும் ஏற்படக்கூடிய சிறுநீரக அழற்சி (Nephritis), சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis) போன்ற உபாதைகளுக்கு சிறந்த மருந்து.மேலும் சிறுநீரக கற்களைக் கரைத்துக் குணப்படுத்துவதோடு மீண்டும் கற்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் ஆற்றலும் இம்மருந்துக்கு உண்டு.

லைகோபோடியம் (Lycopodium) : நாள்பட்ட சிறுநீர்ப்பை அழற்சிக்கு உதவும் மருந்து. சிறுநீர் கழிக்கும் முன்பு முதுகுப்பகுதியில் கடும் வலி நீர் கழித்தபின் குறையும், சிறுநீர் கழிக்கும் போதும், கழித்த பின்பும் நீர்த்தாரை நெடுக எரிச்சலும், வெட்டும் வலியும் இருக்கும். சிறுநீரில் சிவந்த மஞ்சள் நிற மணற்படிகங்கள் காணப்படும். அவசரமாக நீர் வந்தாலும் நெடுநேரம் காத்திருக்க நேரும். இரவில் படுக்கும் போதும், சிறுநீர்ப்பையில் வலி தெரியும். சிறுநீர்ப்பையில் நீர்த்தேக்கத்தால் சிறுநீர்கழிப்பதற்கு முன்பு குழந்தை கதறியழும். பகலில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க உறுத்தும். நீர் உக்ஷ்ணமாக இருக்கும். இரவில் கார் பயணத்தின் போது அதிகளவு சிறுநீர் கழித்தல் (Polyuria).

பரைரா பிரேவா (Parira Preva) : சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் கற்கள் காரணமாக ஏற்படும் வலி ,தொடைகளுக்கும், பாதங்களுக்கும் பரவும். முழங்காலிட்டு கைகள் மற்றும் தலையைத் தரையில் அழுத்திக் கொண்டு வேதனையுடன் சிறுநீர் கழித்தல். சிறுநீர்ப்பை உப்பிய உணர்வுடன் வலி  இருக்கும். சிறுநீர்ப்பாதை முழுவதும் கினவு வலியுடன் சிறுநீர் கழிக்கத் தொடர்ந்து உறுத்தல்.

மெர்க் கரசிவ் (Merc.cor) : சிறுநீர்ப்பையில் கடுகடுவலி. சிறுநீர் சூடாக ,எரிச்சல் வலியுடன்  சொட்டுசொட்டாக ரத்தம் கலந்து வரும். சில சமயம் சிறுநீர் கழித்த பின் ரத்தம் மட்டும் வரக்கூடும். சிறுநீர் கழிக்கும் போது வியர்க்கும். ஆசன வாயிலும்,சிறுநீர்ப்பையிலும், ஒரே நேரத்தில் கடுகடுப்பும், எரிச்சலும் காணப்படும். கர்ப்பகால ஆரம்பத்தில் புரதச் சிறுநீர்(Albuminuria) ஏற்படும்.

அஸ்பாரகஸ்  (Asparagus) : அடிக்கடி எரிச்சல் வலியுடன் சிறுநீர் கழிக்கும் போதும், கழித்த பிறகும் சிறுநீர்ப் புறவழியில் குத்தல் வலி, சிறுநீரில் சீழ் , கோழை கலந்திருத்தல். பலவீன நாடி, நெஞ்சு இறுக்கம், இருதய வலி, இடது தோள்பட்டை வலி போன்ற குறிகளுடன் சிறுநீர்ப்பை தொந்தரவுகள் சேர்ந்து இருத்தல்.

ஸ்டாபி சாக்ரியா (Staphy sagria) : சிறுநீர் கழிக்காமல் இருக்கும் போது நீர்த்தாரையில் எர்ச்சல், வயதானவர்களின் ப்ராஸ்டேட் சுரப்பி பாதிப்புடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுதல் ஏற்படுதல் , அல்லது சிறுநீர் கழித்த பிறகும் சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியாதல்.

ப்ரூனஸ் ஸ்பைனோசா (Prunus spinosa) : சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற தூண்டுதல்  திடீரென ஏற்பட்டு சிறுநீரை கழிக்க அவசரமாக ஓடுதல்,   அதற்குள் சிறுநீர் வெளியே வந்து விடுதல், அதை அடக்க முயலும் போது தாங்க முடியாத வலி ஏற்படும்.

பென்சோயிக் ஆசிட் (Benzoic acid) : சிறுநீர் மஞ்சளாகவும், நாற்றமாகவும் இருக்கும். சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்யாது.சிறுநீரில் குதிரையின் சிறுநீர் போன்று நாற்றமடித்தல்.

Dr.S.வெங்கடாசலம்,
மாற்றுமருத்துவ நிபுணர்,
சாத்தூர்.
செல்;94431 45700   
Mail: alltmed@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com