20. கடைசியாக உங்கள் செருப்பை எப்போது மாற்றினீர்கள்?

நடைபாதை எவ்வாறு இருக்க வேண்டும் என முடிவு செய்யும் தகுதி பெற்ற சமுதாயத்தில்
20. கடைசியாக உங்கள் செருப்பை எப்போது மாற்றினீர்கள்?

நடைபாதை எவ்வாறு இருக்க வேண்டும் என முடிவு செய்யும் தகுதி பெற்ற சமுதாயத்தில் நாம் வாழவில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், (இப்போது வளர்ந்து வரும் நாடுகளில் பட்டியலில் இருந்தும் நீக்கி விட்டார்கள்) நடை பாதை எவ்வாறு இருக்க வேண்டும் என ஒரு போதும் முடிவு செய்யவே முடியாத நிலையில் இருக்கும் கடைநிலை மக்கள் நாம்.

பல தெருக்களில் நடக்கும் பாதைகளில் கூட வேகத் தடுப்பான் என்று ஒரு குட்டி மலையை நடுவழியில் கட்டி வைப்பார்கள். நடக்கும் போதும் இதனை கடந்து செல்வது சிரமமாக இருக்கும், பொதுவாக இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் வேகத் தடுப்பான் இருப்பதை அறியாமல் வேகமாக வரும் போது, திடீரென அதில் ஏறி இறங்குவதால் நடு முதுகில் அதிர்வு ஏற்படும். அதனால் எலும்புகளுக்கு இடையே இருக்கும் ஜவ்வு போன்ற பகுதியான டிஸ்க் என்ற பகுதியை பதம் பார்த்து விடும். பெரும்பாலான முதுகுவலிக்கு, இந்தியா போன்ற நாடுகளில் இதுவே முதன்மை காரணமாக அமையலாம்.  

முன்பெல்லாம் பள்ளி அருகில், வளைவுகளில் இந்த வேக தடுப்பான்கள் அமைக்கப்பட்டு இருக்கும், இப்போதோ சாலை அமைப்பவர் விருப்பட்டால் எங்கு வேண்டுமென்றாலும் தடுப்பான் அமைத்து சென்று விடுகிறார்கள் போலும். இதனை தரம் பார்த்து எவ்வளவு உயரம் அமைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு சாலை பொறியாளர்கள் உணர வேண்டும். இதே ரீதியில் போனால் முதுகு வலி இந்தியாவில் உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பது நிதர்சன உண்மை. என்னிடம் வரும் கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த வேகத்தடுப்பானில் வண்டியை வேகமாக செலுத்திய பின்பே வலி அதிகமாகி விட்டதாக கூறுவார்கள்.

உடம்பில் திடீரென ஏற்படும் அதிர்வை தாங்கிக் கொள்ள முதுகை சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் குழப்பமே தசைப்பிடிப்பாகி முதுகுவலியாக நமக்கு உணர முடிகிறது. வலியின் வீரியம் உணர வேண்டும் என்றால் உங்கள் வலியை நீங்கள் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

அதே போல் நீங்கள் நடை பயற்சி செய்யும் போது நீங்கள் அணியும் காலணியும் நீங்கள் நடக்கும் பாதையும் மிக முக்கியம். பொதுவாக இதை அறியாதவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் நடப்பது, சிமெண்ட் தரையில் நடப்பது தார்ச்சாலையில் நடப்பது என்று தனது நடைபயற்சியை செய்து வருவதை பார்த்து கடந்து செல்லும் போது சற்று வருத்தமாக இருக்கும்.

நாம் சிமெண்ட் தரையில் நடக்கும் போது கால்களுக்கும் தரைக்கும் இடையே ஏற்படும் உராய்வை நேரடியாக எலும்புகள் தாங்கிக் கொள்ள ஆரம்பிக்கும். பெரும்பாலான மூட்டு வலியின் ஆரம்பமே இங்கிருந்து தான். ‘சார் இந்த வாக்கிங் போக ஆரம்பிச்சு கொஞ்ச நாள் தான் சார் ஆகுது, அதுக்கு முன்னாடி நல்லா இருந்தேன். இப்ப தான் சுகர் வந்தது டாக்டர் நடக்க சொன்னார் சரி தினமும் மாடியில ஒரு ஐம்பது சுத்து சுத்தறேன் சார், சுகர் குறைஞ்சுடுச்சு சார், ஆனா பாருங்க இப்ப கால் மூட்டு வலிக்குது சார்’ என்பார்கள்.

அவர்களிடம் முதலில் கேட்கும் கேள்வி உங்களிடம் காலணி இருக்குமே அதை மாற்றி எத்தனை மாதங்கள் ஆகிறது என்பேன், நல்ல கம்பெனி ரெண்டு வருஷம் போடலாம் என்று கடைக்கார் சொன்னார் சார், மாத்தி இப்ப ரெண்டு வருஷம் இருக்கும் என்பார்கள். உங்களுக்கே இப்போது தெரிந்திருக்கும், வலியின் காரணம், இரண்டு வருடம் மாற்றப்படாத காலணி தான் என்று. தினமும் 50 முறை வட்டமாக நடக்கும் போது ரப்பரில் அல்லது தோலில் செய்யப்பட்ட காலணியில் ஏற்படும் உராய்வு எளிதில் பாழ்பட்டு நம் கால் மூட்டுகளையும் பாதித்து வலியை உருவாக்கி விடுகிறது.

காரணம் அறிந்த பின்னும் செய்ய வேண்டியது என்ன,

  1. நடைப்பயற்சி நல்ல மண் தரையில் இருத்தல் வேண்டும்.
  2. சிறப்பான காலணிகளை அணிந்து நடந்தால் பின்னாளில் ஏற்படும் மூட்டு மற்றும் பாத வலிகளை அறவே தவிர்க்கலாம்.
  3. காலணிகளை குறைந்தது 8 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி கொள்ளுதல் வேண்டும்.
  4. நடக்கும் போது கண்டிப்பாக வெறும் கால்களில் நடத்தல் கூடாது.
  5. தார்ச்சாலைகள், மொட்டை மாடி, வீட்டின் உள்ளே நடப்பதை தவிர்த்து நல்ல காற்றோட்டம் உள்ள பள்ளி மைதானம் அல்லது பூங்கா போன்ற இடங்களில் இருத்தல் சிறப்பு.
  6. காலையில் காற்றோட்டம் உள்ள சாலைகளில் நேரத்தில் நடப்பது நல்லது.
  7. சாப்பிட்ட பின் இரவில் நடப்பது உறக்கத்தை பாதிக்கும்.
  8. பாதங்களுக்கு அணியும் சிறப்பான ஷூ போன்றவை நல்ல கம்பெனி காலணிகள் தயாரிப்பாக இருத்தல் நலம்.
  9. ஷூ அணிய சிரமம் உள்ளவர்கள் MCR என்ற ரப்பர் கொண்டு செய்யப்பட்ட தனிப்பட்ட காலணிகளை அதாவது செருப்புகளை அணிந்து கொள்ளலாம்.
  10. நடையின் வீரியம் அல்லது பாதத்தில் கொடுக்கும் அழுத்தம் மிதமாக இருக்குமாறு நடத்தல் வேண்டும்.

- தி. செந்தில்குமார்

கல்லூரி விரிவுரையாளர்

சாய் பிசியோ கேர் & க்யூர்

ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி

பெங்களூர்

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com