பெண்களிடம் (இந்த) ரகசியத்தை சொல்லாதீர்கள்!

சராசரி பெண்களால் எந்தவொரு ரகசியத்தையும் 47 மணி நேரத்துக்கு மேல் காப்பாற்ற முடியாது என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி. 
பெண்களிடம் (இந்த) ரகசியத்தை சொல்லாதீர்கள்!
Published on
Updated on
3 min read

சராசரி பெண்களால் எந்தவொரு ரகசியத்தையும் 47 மணி நேரத்துக்கு மேல் காப்பாற்ற முடியாது என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி. 

பெண்களிடம் நீங்கள் ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டு யாரிடமும் சொல்லிவிடாதே என்ற வார்த்தையையும் கூடுதலாக சொல்லிவிட்டால் போதும் அது உடனடியாக அவர்களுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறதாம். ஒரு விஷயம் தனக்கு மட்டும் தெரியும் என்ற நிலையில் அவர்களால் நீடித்திருக்க முடியாது. உடனே அவ்விஷயத்தை தனக்கு முக்கியமானவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு கொழுந்துவிட்டு எரியும். 15 நிமிடத்திலிருந்து 47 மணி நேரத்துக்குள் அவர்களுக்குத் தெரிந்த எந்தவொரு பரம ரகசியத்தையும் யாரேனும் ஒருவரிடமாவது நிச்சயம் சொல்லிவிடுவார்கள் என்று அடித்துச் சொல்கிறது இந்த ஆய்வு.

அந்த ரகசிய செய்தி யாரைப் பற்றியது என்பதைப் பொருத்துதான் முதலில் யாரிடம் சொல்வது என்பதும் அமையும். உதாரணமாக ரகசியத்தை சொல்லத் துடிப்பது தங்களின் ஆண் நண்பர், காதலர் / கணவர், நெருங்கிய தோழி அல்லது அம்மா இவர்களுள் யாராவது ஒருவரிடம் சொல்லியே தீர்வார்களாம்.

18 வயதிலிருந்து 65 வயது வரையிலான 3000 பெண்களை வைத்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர். இதில் பத்தில் நான்கு பெண்கள் தங்களால் ரகசியத்தைப் பாதுகாக்க முடியாது என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். அது எவ்வளவு அந்தரங்கமானதும் ரகசியமானதாகவும் இருந்தாலும் கூட தங்களால் சில மணி நேரத்துக்கு மேல் அதை மனத்துக்குள் பூட்டி வைத்திருக்க முடியாது என்றனர். 

பத்தில் ஐந்து பெண்கள் ஒன்று அல்லது இரண்டு க்ளாஸ் வைன் குடித்தபின் தங்கள் மனத்தில் ஒளித்து வைத்திருந்த அத்தனை விஷயங்களும் வெளியில் கொட்டிவிடுவோம், அது எத்தகைய ரகசியமாக இருந்தாலும் கவலையில்லை என்றனர். 

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட 'வைன்ஸ் ஆஃப் சைல்' என்ற நிறுவனத்தைச் சார்ந்த மைக்கேல் காக்ஸ் என்ற ஆய்வாளர் இதைப் பற்றி கூறுகையில், ‘பெண்கால் ரகசியத்தை காப்பாற்ற முடியாது என்பது உலகறிந்த உண்மைதான். இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்ய விரும்பினோம். எங்களால் ஒரு ரகசியத்தைப் பெண்களிடம் சொல்லி அதை வெளியில் சொல்கிறார்களா என்பதைக் கூட கண்டறிய முடிந்தது. ஆனால் அது எவ்வளவு விரைவாக வெளியே சொல்லப்படுகிறது அந்த காலகட்டம் என்னவாக இருக்கிறது என்பதை தான் பகுத்தாய முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் மிக உறுதியாக எங்கள் ஆய்வில் தெளிவானது. அது எவ்வளவு ரகசியமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான செய்தியாக இருந்தாலும் சரி பெண்களிடம் சொல்லப்பட்ட 48 மணி நேரத்தில் வெளி உலகத்துக்கும் தெரிந்து வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது’ என்றார்.

ஒரு ரகசிய செய்தியை ரகசியம் என்றே ஒரு பெண் தன் தோழியிடம் சொல்ல, அதை அவர் அப்படியே இன்னொருவரிடம் சொல்ல, இப்படி வெளியில் விரைவில் காட்டுத்தீ போலப் பரவி விடுகிறது. தனக்கு சம்மந்தம் இருக்கும் விஷயமாக இருந்தாலும் சரி, துளி கூட சம்பந்தம் இல்லையென்றாலும் சரி, அதை ரகசியம் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் பத்தில் ஒன்பது பெண்கள் அதை மற்றவர்களிடம் சொல்லியே தீர்கிறார்கள்.

சுவாரஸ்யமான செய்தியாக இருந்தால், பெண்கள் மது அருந்தும் போது அதைப்பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விவாதிக்கிறார்கள் என்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

மற்ற பெண்களிடமிருந்து ஒரு பெண் மூன்று ரகசியங்களையாவது வாரத்தில் ஒரு நாள் பெறுகிறார் அதில் ஒன்றையாவது அவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து விடுகிறார்கள் என்று மேலும் கூறுகிறது இந்த ஆய்வு.

பத்தில் ஆறு பெண்கள் ஒரு ரகசியத்தை அதில் துளியும் சம்பந்தப்படாதவர்களிடம் சொல்கிறார்கள். காரணம் அவர்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருப்பதுடன் அதை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். அவர்களிடம் அந்த ரகசியம் தேங்கிவிடும் என்று நம்புகிறார்கள்.

பத்தில் மூன்று பேர் மற்றவர்களின் ரகசியத்தை வெளியில் சொல்ல விரும்புவர்களாக இருப்பதை ஒப்புக் கொண்டார்கள். கிட்டத்தட்ட பாதி பெண்கள் (45 சதவிகிதம்) ரகசியத்தை வெளியில் சொல்வதற்கான காரணம் அது தங்களை உறுத்திக் கொண்டே இருப்பதால் அதை வெளியே சொல்லிவிடுவதன் மூலம் நிம்மதியாக உணர்வதாக ஒப்புக் கொண்டனர்.

இதில் சில பெண்கள் மற்றவர்களிடம் சொல்லக் கூடாத ரகசியத்தைக் கூட வெளியில் சொல்லிவிடுவதால் குற்றவுணர்வுக்கு உள்ளாகித்  தவிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சியில் பங்குபெற்ற கால்வாசி பெண்கள் ரகசியத்தை பாதுகாப்பதில் தங்களுக்கு ஒரு பிரச்னையும் இருந்ததில்லை என்றனர். இதில் 83 சதவிகிதத்தினர் தங்களின் நெருங்கிய தோழியிடம் சொல்வதன் மூலம் அந்த ரகசியம் காப்பாற்றப் படுகிறது என்றே நம்புகிறார்கள். தங்களையும் அவர்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத நெருக்கமான நட்பில் அல்லது உறவில் இருக்கும் போது ரகசியங்கள் அவசியமற்றது என்று கூறுகிறார்கள். 

பத்தில் நான்கு பெண்கள் நெருங்கிய தோழியிடம் மற்ற தோழிகள் பற்றிய வம்புச் செய்திகளையும் ரகசியங்களையும் சொல்லிவிடுகிறார்கள். 

பத்தில் நான்கு பெண்கள் தங்கள் தோழியிடம் அவளுக்குத் தெரியாத நபரைப் பற்றிய ரகசியத்தை சொல்வதில் பிரச்னையில்லை என்றே நினைக்கிறார்கள். தன்னிடமிருந்து வெளியே சென்றுவிடும் அதே சமயம் அது தோழிக்கு தெரியாத நபர் என்பதால் அவர் அதை அவள் வெளியிலும் சொல்லப் போவதில்லை என்று நம்புகிறார்கள். இதே போல் சம்மந்தம் இல்லாத நபரைப் பற்றிய ரகசியத்தை 40 சதவிகிதத்தினர் தங்கள் கணவரிடம் சொல்வதில் ஆறுதல் அடைகின்றனர்.  

அந்தரங்கமான விஷயங்கள், அடுத்தவர்கள் வாங்கிய பொருள்களின் உண்மை விலை, கள்ளக் காதல்கள், போன்றவையே ரகசியங்களின் பட்டியலில் எப்போதும் முதலில் இருப்பவை. இதைச் சார்ந்த விஷயங்களைப் பற்றி தோழிகளிடம் நேரில் அல்லது ஃபோனில் ரகசியமாக அரட்டை அடிப்பது அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பி பகிர்வதை பெண்கள் அடிக்கடி செய்து வருகிறார்கள்.

27 சதவிகிதப் பெண்கள் மட்டுமே தங்களிடம் சொல்லப்பட்ட ரகசியத்தை அடுத்த நாளே மறந்துவிடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com