என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது?

முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? உங்கள் சிறு வயதிலிருந்தே
என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது?
Published on
Updated on
2 min read

முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? உங்கள் சிறு வயதிலிருந்தே, குறிப்பாக ஆன்மீகவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் 'கெட்ட விஷயங்களை நினைக்கக்கூடாது. உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்த பழகவேண்டும்' என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்யும்போது மனம் அந்த விஷயங்களைத்தான் முழு நேரமும் நினைக்க ஆரம்பிக்கிறது. உங்கள் மனதின் செயலைப் பொறுத்தவரையில், வகுத்தல் கழித்தல் எல்லாம் கிடையாது. அங்கே கூட்டல், பெருக்கல் மட்டும்தான். உங்கள் மனதிலிருந்து அதிரடியாக ஒரு எண்ணத்தையாவது உங்களால் நீக்க முடியுமா? முடியவே முடியாது. இல்லையா?

ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக்கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதுதான் நடக்கிறது. நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். இன்று சிகப்பு நிறத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்று முடிவு செய்யுங்கள். திடீரென்று உங்கள் அக்கம்பக்கம் எல்லாம் சிகப்பு நிறமாக இருப்பதைப் பார்க்கலாம். மனதின் அடிப்படைத் தன்மைகளை புரிந்து கொள்ளாமல் நாம் இப்படியே பலவாறு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

தியானத்தில் உட்காரும் போது, என் இதயம் துடிப்பதை நிறுத்த வேண்டும் என எண்ணுகிறீர்களா? என் சிறுநீரகம் தனது செயலை நிறுத்த வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கிடையாது. அவையெல்லாம் தமது செயலை தொடர்ந்து நடத்த அனுமதித்தீர்கள்தானே? பிறகு மனதையும் அது தனது வேலையைச் செய்ய ஏன் நீங்கள் அனுமதிக்கக்கூடாது? தியானம் செய்ய உட்காரும்போது மட்டும் மனம் நின்று விட வேண்டும் என நினைக்கிறீர்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் எப்போதும் உங்களுக்கு சொல்லி வந்திருக்கிறார்கள். உங்களால் எப்போதும் அப்படி மனதைக் கட்டுப்படுத்த முடியாது. மற்றவர்கள் யாராவது தன் மனதைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரும் அப்படி செய்ததில்லை, தெரியுமா? இயல்பாகவே அப்படிச் செய்யவும் முடியாது.

இந்த மனம் ஒரு புழுவிலிருந்து, ஒரு பூச்சியிலிருந்து, ஒரு குரங்கிலிருந்து, தற்போது மனிதன் வரை இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைய இலட்சக்கணக்கான வருடங்கள் எடுத்திருக்கிறது. இவ்வளவு மகத்தான முயற்சிக்குப்பின் இத்தகைய மனம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்போது, அதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? அது முழுத் தீவிரத்துடன் இருக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் அற்புதமாக இருக்க வேண்டிய மனம் தற்போது உங்களுக்கு துன்பத்தை உற்பத்தி செய்கிற இயந்திரமாக மாறிவிட்டது.

உங்களுடைய அனைத்து துன்பங்களும் உங்கள் மனதில்தானே உற்பத்தியாகின்றன? அப்படியென்றால் அதை எப்படி இயக்குவது என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்த மனதை வைத்து ஆனந்தம் எப்படி உற்பத்தி செய்வது என்று தெரிந்துவிட்டால் பிறகு அதை கட்டுப்படுத்த எண்ணுவீர்களா? ஒருபோதும் மாட்டீர்கள். எனவே உங்கள் மனதை எப்படி சரியாக இயக்கவேண்டும் என்பதைத்தான் நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோகாவில் உங்கள் மனதை கட்டுப்படுத்தத் தேவையில்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றை கடைப்பிடித்தால் போதும். அப்போது ‘நான்’ என்னும் தன்மை, உங்கள் உடல், மனம் ஆகியவற்றிலிருந்து சிறிது விலகியிருப்பதை பார்க்கமுடியும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கிவிட்டால், பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்துவிடும்.

நன்றி : ஈஷா மையம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com