பெற்றோர்கூட அடம் பிடிப்பார்களா? ஆர்ப்பாட்டம் செய்வதுண்டோ?

தம் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அதைப் பெற்றோர்கள் தம் பேச்சில், உரையாடலில் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் தான் குழந்தைகளால் அதைப் பின் பற்ற முடியும்.
பெற்றோர்கூட அடம் பிடிப்பார்களா? ஆர்ப்பாட்டம் செய்வதுண்டோ?

தம் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அதைப் பெற்றோர்கள் தம் பேச்சில், உரையாடலில் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் தான் குழந்தைகளால் அதைப் பின் பற்ற முடியும்.

அதே நேரத்தில், பெற்றோர்களே தம் பேச்சிலும், நடந்து கொள்வதின் முறைகளிலும் தத்தளித்தால் எந்த விதமான பெற்றோராக இருக்க விரும்புகிறார்களோ அப்படி இருக்க முடியாமலேயே போய்விடும். இப்படி நடப்பதற்கான காரணங்களோ, பெற்றோர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள், செய்கைகளில் அடங்கி உள்ளது.

ஆனால், பெரும்பாலான புத்தகங்கள், மற்றும் ஊடகங்களில் பிள்ளைகளை “கண்ட்ரோல்” (control) “கட்டுப்படுத்துவது”, “கட்டுக்குள் வைப்பது” எப்படி என்பதைப் பற்றியே உள்ளது. பெற்றோரைப் பற்றி விவரித்திருந்தாலும், Parenting Styles (பேரென்டிங் ஸ்டைல்) என விவரிப்பிலும், பிள்ளைகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதைச் சார்ந்ததாகவே இருக்கின்றது.

பெற்றோரின் தாக்கங்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பது தெரிந்ததே. அவற்றைச் சரி செய்யும் முறை புரிய வர, பெற்றோர்கள் தன்னை தானே கண்காணிக்கும் அவசியத்தைப் புரிந்து கொள்வார்கள். இதைப் புரிந்து கொண்டு செயல் பட, அவர்களுக்கும் நன்றாக இருக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துவிடும். 

இதை மையமாகக் கொண்டு, இங்குப் பரிந்துரைக்க போவது மூன்று அம்சங்கள். பெற்றோர்கள்

  • தங்களை பார்த்துக் கொள்வதின் அவசியம்,
  • உணர்ச்சிகளுக்கு வசப்படுவதால் நடத்தும் அடமும், ஆர்ப்பாட்டம்,
  • தன்னை மாற்றிக் கொள்ள சில வழிமுறைகள்.

பெற்றோர் தம்மை கண்காணித்துக் கொள்வது அவசியமே!

பெற்றோர்களின் பேசும் விதம், எண்ணத்தைத் தெளிவு படுத்தும் திறன்கள், உணர்ச்சியைக் கையாளும் விதங்கள் சரியாக இல்லையென்றால், அவர்களிடம் பிடிவாத ஆர்ப்பாட்டங்கள் தலை தூக்கி ஆட ஆரம்பிக்கும். இது வெளிப்படையாகும் விதங்களோ: பெற்றோர் தான் சொல்வதை மட்டும் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்பார்கள். மறுத்தால், கண்களை விரித்து, குரலை எழுப்பி, தான் சொன்னதை செய்யும் வரை கோபமாகவோ, மௌனமாகவோ, கண்ணீர் நிரம்பிய கண்களுடன் இருப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்காது. கருத்து வேறுபாடுகளும் நிலவி இருக்கும்.

பெற்றோர் சூழ்நிலைகளை எப்படி அணுகுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்கள் கையாளும் முறைகளையே பிள்ளைகள் தாங்களும் உபயோகிப்பது உண்டு. இதனுடைய பிரதிபலிப்பை பிள்ளைகள் பயன் படுத்தும் வார்த்தைகள், உடை அலங்காரம், அணுகுமுறைகளில் பார்க்கலாம். இப்படி இயங்குவதை “அப்ஸர்வேஷ்னல் லர்நிங்” (Observational Learning) என்போம். 

ஒரு மிக முக்கியமான அம்சம், பெற்றோர் நிபந்தனையற்ற அன்பு (unconditional love) செலுத்துவது. இது, மிக அற்புதமானது! இதில், நீ இப்படிச் செய்தால் தான், இருந்தால் தான், அன்பாக இருப்பேன் என்றே இருக்காது. இந்த நிலையில், பெற்றோர் பிள்ளைகளிடம் பேசுகையில், புறக்கணிப்பதோ, திட்டுவதோ, கசப்பான வார்த்தைகளோ உபயோகிக்காமல், அன்பு பூசிய சாந்தத்துடன் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
 
இப்படிச் செய்வதால், பெற்றோர் தன் சொல்லினாலும், செயலினாலும் வழி காட்டுவார்கள். ஆகவே, எந்த விதமான சிக்கலோ, விரக்தியோ இல்லாமல் இதமான உறவை அமைத்துக் கொள்ள முடிகிறது. பிள்ளைகளும் தங்கள் பங்கிற்கு நன்றாக ஒத்துழைப்பார்கள்; உறவுகள் மேலும் வலுப்பெற்று, பிள்ளையுடன் பற்றும் பிடிமானமும் பலப்படும். இதற்காகத் தான் பெற்றோர் தம்மைப் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

இந்த அணுகுமுறையை எளிதாகப் பழக்கமாக்கி கொள்ளலாம். அதற்கு, பெற்றோர் தன்னையும் நிபந்தனையற்ற தன்மையுடன் ஏற்றிக் கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால், தம்மைப் பாசத்துடன் அரவணைப்பதால், தேர்வுரிமை அளித்துக் கொள்வார்கள். இதனாலேயே தம்மை மதிக்கவும் செய்வார்கள். மன தைரியம் உறுதியாகும். விளைவாக, தம்முள் உள்ள அறிவையும் நம்பிக்கையையும் பூரணமாக உபயோகிக்க ஆரம்பிப்பார்கள். 

இப்படிச் செய்வதில், அழுத்தம் அகன்று விடும். என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் சுமூகமாக முடிக்க முடிகிறது. இதே பாதையில் இருந்து வர, மனக் கண்ணாடியில் பார்த்துப் பழகிக் கொள்ளலாம். 

பெற்றோர், நிபந்தனையற்ற அன்பு செலுத்தாமல் இருந்தால், தன்னிலும் சரி, பிள்ளைகளிடத்திலும் குறைகளே தென்படும். சந்தேகம் அதிகரிக்க இதிலிருந்து பிடிவாதமும், ஆர்ப்பாட்டங்களும் ஆரம்பமாகும்.

உணர்ச்சிகள் நம்மைக் கடத்தாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை.

சில நேரங்களில் நாம் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் நாமே விரும்பாத வகையில் சில நொடிகளுக்குப் பேசுவோம், நடந்து கொள்வோம்.

உணர்ச்சிகளும் சிந்தனையும் நம்மைக் கடத்தி விடுகின்றதனாலேயே சமநிலையில் இல்லாமல் இருப்போம். இப்படிக் கடத்தாமல் இருக்க உணர்ச்சிகளான கோபம், ஆத்திரம், புண்படுதல் எனப் பலவற்றை புரிந்து கொள்வது அவசியமாகிறது. இவை நம்மைக் கடத்தி விடுவதின் தோற்றம் தான் பிடிவாதமும் ஆர்ப்பாட்டமும் ஆக காணப் படுகிறது.

பிடிவாதத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் தூண்டி விடுவதோ நாம் நம்மேல் சுமத்திக் கொள்ளும் நிபந்தனைகளும், வற்புறுத்தல்களும் ஆகும். அவற்றில் சில:
 
“நான், இதைச் செய்தே ஆக வேண்டும்”,
“இப்படித் தான் செய்ய வேண்டும்”, 
“இதை முடித்தே தீர வேண்டும்”. 
“இப்போதே”, எனப் பல.

இவற்றுக்கு இடம் கொடுத்து விட்டால், தன்னை ஒரு சிறையில் அடைத்துக் கொள்வது போல் ஆகும். இதனால், சமாளிக்க முடியாமல் தத்தளிப்பதில், செய்ய வந்தது கைக்குள் அடங்காமல் போய் விடுமோ என அஞ்சி, பதட்டம் வர ஆரம்பிக்கும் பொழுதே, ஆர்ப்பாடங்கள் தலையை காட்டும். நம்மையே நாம் கேட்டு கொள்ளலாம் (இதுவும் மனக்கண்ணாடியிலே பார்த்துக் கொள்வதே) “நான் எந்தக் காரணத்திற்கு இப்படி ஒரு நிபந்தனை போட்டுக் கொள்கிறேன்”? “செய்து கொள்வதின் அவசியம் என்ன”? இவை இரண்டுக்குமே விடைகள் கிடைக்க, அடம், ஆர்ப்பாட்டம் இடமில்லாமல் போய்விடும். பல முறை நாமே யோசித்திருப்போம், “இப்படி, முகம் சுளித்து, படபடப்புடன் பேசுவதும், சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வதை நான் ஆசைப்படவில்லையே.” என்று. 

பெற்றோர் உணர்வுகளைக் கையாளுகிற விதத்தைப் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு அதிகமே! பல சமயங்களில் பெற்றோர்கள் செய்வதை போலவே பிள்ளைகளும் செய்வார்கள், இதை, “இமிடேஷன் லர்நிங்” (Imitation learning) என்போம். பெற்றோரிடம் இல்லா விட்டால், பிள்ளைகளிடம் இருக்காது.

இதன் ஒரு உருவத்தை நாம் பார்த்திருப்போம். உணர்வுகளைக் கடத்துவது பிள்ளைகளின் முன் நடப்பதால், நகல் அடித்தது போல், பிள்ளைகளும் தங்களுக்கு ஏதேனும் வேண்டுமென்றால் பெற்றோர் செய்வது போலவே செய்வார்கள். சாதித்தும் கொள்ளக் கற்றுக் கொள்வது இந்தத் தவறான யுக்திகளிடமிருந்து.

வித்தியாசம் என்னவென்றால், இதைப் பிள்ளைகளிடம் பார்த்தவுடன் “என்ன இது?” என்று பெற்றோர் பிள்ளையைக் கடுமையாக கண்டிப்பதும், தண்டிப்பதும் தான்!
இவை இல்லாமல் ஆர்ப்பாட்டங்களையும், அடம் பிடிப்பதையும் சம நிலையில் கொண்டு வர முடியும். அதற்கு:

  • செய்து கொண்டிருப்பதை ஒரு நிமிடத்திற்கு நிறுத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.
  • நிதானமாக யோசிக்க ஒரு குவளை தண்ணீர் குடித்தால் கூட மனதைத் திசை திருப்பி விட முடியும்
  • கை, கால்களை ஓடும் தண்ணீரில் காட்டியும் மனதை அமைதிப் படுத்த முடியும்.
  • ஆர்ப்பாட்டம் வரும் காரணத்தை வாய் விட்டுச் சொன்னாலும் மனதை சாந்தப் படுத்தி, தெளிவுடன் செயல் பட முடியும். 
  • மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு, மெதுவாக வெளியில் விடுவதினாலேயே நம் சிந்தனையை தெளிவு செய்ய முடியும்.
  • செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றனவே என்ற பதட்டத்தை விலக்க, ஒரு மணிக்கு ஒரு தடவை எச்சரிக்கை மணி வைத்துக் கொள்ளலாம். 

மணி அடித்தவுடன், செய்ய வேண்டிய பட்டியலில் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் ஒவ்வொரு வேலையாகச் செய்து முடிக்க, பளுவும் குறையும், ஆர்ப்பாட்டமும்!

இப்படிச் செய்து வந்தால், உணர்வுகள் நம்மைக் கடத்தி விட முடியாது. 

செய்வதை பாரமாக கருதுவது:

ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு முகம், பிள்ளை வளர்ப்பதை பாரமாக கருதி விடுவது. இக் கருத்து, பெற்றோரே பிள்ளைகளுக்கு எல்லாம் செய்து கொடுப்பதாலையும் வருவதுண்டு. எல்லாவற்றையும் செய்வதை உணர்த்தவே “பார் உனக்கு எவ்வளவு செய்கிறேன்” என்று கணக்கிடுவார்கள். தங்களைத் தியாகி போல் பாவிப்பதால், நாளடைவில் விரக்தி வளர்ந்து விடும். சொல்லிக் காண்பிப்பது பழக்கமாகும். இவற்றால், உறவை ஒரு கணக்காக பார்க்க நேர்கிறது. இதையே பிள்ளைகளும் கற்றுக் கொள்வதால் தான், பிற் காலத்தில் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வாழ நேர்கிறது (?)

மாற்றத்திற்காகச் செய்ய வேண்டியவை:

அன்றாடம் என்ன செய்து வருகிறோம் என்பதைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மன கனத்துடன், பரபரக்க வேலைகள் செய்து வந்தால், இயந்திரம் போல் தோன்றி விட, நம்மை ஒரு எந்திரன் போலவே உணர்வோம். இதனால், பிடிப்பு இல்லாமல், வேலையை முடித்தால் போதும் என்றே இருப்போம்.
 
இதில், பிள்ளைகளுடன் உறவு இணைந்து இருக்காது. உணர்வுகள் பின் தங்க, பிள்ளைகளும், எப்படி இயங்குவது என்று தெரியாமலேயே, மந்தமாகி மெதுவாகச் செயல் படுவார்கள். பெற்றோரின் நடத்தையில் அடமும், ஆர்ப்பாட்டமும் தொடங்கும். விளைவாக, பெற்றோர்கள் பிள்ளையை தண்டிக்க, உறவில் விரிசல் ஏற்பட நேரிடலாம்.
இதைச் சுதாரிக்க, நேரம் கூடுதலாக வேண்டும் என்றால், சற்று முன் எழுந்து கொள்ளலாம். சிலவற்றை முன் தினமே கொஞ்சம் தயார் செய்து கொள்ளலாம். 

பிள்ளைகளுடன் போராடுவதற்கு பதிலாக நிறையச் சிரித்து, ரசித்துச் செய்யலாம். இணைந்து சிரிப்பதில் ஆக்சிடோசின் (Oxytocin) ரசாயன பொருள் சுரக்கும். இதுதான், சந்தோஷத்தையும், புத்துணர்ச்சியையும் உண்டாக்கும் ரசாயனம். அத்தோடு, உறவும் பலமாகும்!

இந்த நிலை நீடிக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் சில தேவைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை அளிக்க வேண்டும். அவர்களால் செய்ய முடியும் என்று நம்பிக் கொடுப்பதால், “நம்மால் முடியும்” என எண்ணி செயல் படுவார்கள். இது உறவை மேலும் மேம் படுத்தும்.

அதனால் தான் பெற்றோரிடமிருந்து மாற்றம் தொடங்க வேண்டும்!

இன்னொரு விஷயத்தையினாலையும் இதைச் செய்ய தேவைப் படுகிறது. பல முறை பெற்றோரின் மைன்ட் வாயஸ் இதையே சொல்லும் “நான் ஒரு பெற்றோராக தோல்வி அடைந்ததால் தான் பிள்ளையை சரிப் படுத்த முடியவில்லை. அதனால் தான் இப்படிச் செய்கிறார்கள்” என்று. பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவுக்கும், பெற்றோர் தாமே பொறுப்பு ஏற்றுக்கொள்வதனாலேயே இப்படித் தோன்றிவிடுகிறது.

இதுவும், பெற்றோர்களின் ஆர்ப்பாட்டம், அடம் பிடிப்பதின் தொடக்க நிலையாகலாம். இதை மாற்றி, “நான் எதற்கு இப்படிச் செய்கிறேன்? ஏன் செய்கிறேன்?” என்று தைரியத்துடன் கேட்டுக் கொண்டால், இப்படித் தோன்றுவதையும் மாற்றிக் கொள்ள இயலும்.

பெற்றோருக்கு தங்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. பிள்ளைகளின் செயல்களை எல்லாம் தம்முடைய பிம்பம் என்று எண்ணுவதும் பெற்றோரின் அடத்திற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் ஒரு காரணமாகும். பிள்ளைகள் பெறும் சபாஷும் தனக்கு என்று, முன்-பின் இருந்தாலும் “என்னாலேயே” என்று நினைப்பது. இதை “பர்ஸ்னலைஸேஷன்” (personalization) என்றும் சொல்லலாம். அதாவது பிள்ளைகளுக்கு நேர்வதற்கான காரணமே நாம் என்று எடுத்துக் கொள்வது. பெற்றோர், தம்மை வளர்ப்பு வடிவத்தில் மட்டும் பார்த்துக் கொள்வதால் இது நேர்வதுண்டு. இதன் விளைவாக, பெற்றோரின் சுய அடையாளம் மறைந்து விடுகிறது. இதனால் மன இறுக்கம் தோன்றலாம். இப்படிச் செய்வது நியாயம் இல்லையே!

மாற்றத்தைக் கொண்டு வருதல்:

பிள்ளைகள் எப்பொழுதும் சரியான பாதையில் போக வேண்டும் என்று பெற்றோர் விரும்புவதுண்டு. ஒரு சிறிய மாறுதல் ஏற்பட்டாலும் அது தங்களின் வளர்ப்பினால் தான் என்று அஞ்சி, பிள்ளை செய்வதை ஓடிப் போய் நிறுத்துவதும் இல்லாமல், தன்னையே குற்றம்சாட்டிக் கொள்வார்கள். இது அவசர பட்டனை அழுத்துவது போல் ஆகும்.
இந்த அவசர நிலை திரும்ப நிகழும் பொழுது நாம் எப்படி அதை அணுகுகிறோம் என்று பெற்றோர்கள் கவனித்துக் கொண்டால், ப்ரேக் போட்டுச் சுதாரித்து அதற்குத் தீர்வு காணலாம் என்ற சிந்தனையை மேம்படுத்தும்.

இப்படிச் செய்யா விட்டால், பிள்ளைகளின் எல்லா அசைவுக்கும் தடுப்பு போட்டு விடுவதால் வளர்ச்சி குன்றி விடும். பெற்றோரும் எல்லாவற்றையும் ஆபத்து என்று கருதினால், “டென்ஷன் பார்டீ” என்ற பெயர் கொள்வார்கள். பிள்ளைகளும் தானாக மாற்றிக் கொள்ள முயல்வதற்கு அஞ்சுவார்கள்.

இதற்காகத் தான் பெற்றோர் நிபந்தனையற்ற அன்புடனும் தன்மையை நடந்து கொண்டால், தம்மையோ, பிள்ளைகளையோ குற்றவாளி கூண்டில் வைத்துப் பார்க்கும் அவசியம் இருக்காது. பெற்றோர் செய்வதை பிள்ளைகளும் பார்த்து, புரிந்து, மாற்றிக் கொள்வார்கள்.

சுய பராமரிப்பு:

இவற்றையெல்லாம் செயல்படுத்த, முதலில் பெற்றோர் தம்மை அக்கறையுடன் பார்த்துக் கொள்வது அவசியமாகும்! 

வேளாவேளைக்கு சாப்பிடுவது, ஓய்வு எடுத்துக் கொள்ளுதல், பிடித்ததைச் செய்வது, என்பதெல்லாம் தம்மை சுயமாகப் பராமரிப்பதாகும். நம்மை பார்த்துக் கொள்வது சுய நலம் அல்ல. நம்மை பார்த்துக் கொள்வதும் நமக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும். பெற்றோரின் இந்த அணுகுமுறையைப் பார்க்க பார்க்க, பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள். 

நாம் நமக்கே தயை (self-compassion) காட்டிக் கொள்வதால் தன்னம்பிக்கை அதிகமாகும். தன் மேலேயே தயை காட்டி கொள்பவர்கள், உறுதியாயிருப்பதினால் எந்த விதமான கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கங்களில் (அடம், ஆர்ப்பாட்டம் சேர்த்துக் கொள்ளலாம்) மாற்றங்களை மிகச் சுலபமாக செய்து கொள்ள முடிகிறது. 

இதை எல்லாம் செய்து வந்தால், பெற்றோருக்கு அடம் பிடிக்கவோ ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையோ வராது. அதற்குப் பதிலாக புத்துணர்ச்சி நிலவி இருக்கப் பிள்ளை வளர்ப்பு பாசத்துடன் சுகமாக இருக்கும்!

ஆக, பெற்றோர்களின் பலம், நிபந்தனையற்ற தன்மையிலா? அடம் ஆர்ப்பாட்டத்திலா?


மாலதி சுவாமிநாதன்,
மன நலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com