நம் வெற்றிக்குச் சில இடையூறுகள் என்ன?

நம் வெற்றிக்குச் சில இடையூறுகள் என்ன?

மொத்தத்தில் நமக்கு நன்றாகச் செய்ய வருவதைச் செய்தால் வெற்றி பெறுவோம்.

வெற்றி அடைவது எப்படி? அதற்கு வரும் இடையூறுகளை அடையாளம் கண்டு கொண்டு அகற்றி விட்டாலே, வெற்றியின் பாதையில் பயணம் துவங்கி விட்டோம் என்றே சொல்லலாம். இங்கே சில பொதுவாகத் தோன்றும் இடையூறுகளையும், அவற்றை மாற்றி அமைக்கும் வழிகளையும் சற்று பார்ப்போம்.

செய்தே ஆக வேண்டும் என்ற விலங்குக்குள் பூட்டிக் கொள்வது

செய்ய வேண்டும் என்ற ஆவலும், உறுதியும், வெற்றிக்கு மிக அவசியம். நிச்சயம் செய்வோம் என்று தீர்மானித்து செயல் படுவது நமக்குத் தைரியம் ஊட்டி, செய்வதில்  உறுதியை நிலை நாட்டுகிறது.

ஆனால் எடுத்ததை முடிப்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, எப்படிச் செய்யப் போகிறோம் என்ற செயல்திட்டத்திற்கு முக்கியத்துவம் தராமல் இருந்து விட்டால் செய்து முடிப்பது கடினமாகிறது. அதுவும், எடுத்துச் செய்வதை, செய்தே ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அது பாரமாக இருக்குமே தவிர முடிவு காண முடியாது.

செய்தே ஆக வேண்டும் என்று இருக்கும் போது நம் சிந்தனை, பொறுமை, இப்படியும் மாற்றிச் செய்யலாமே, என்பதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். இது நம்மை ஒரு கட்டாயத்தில் தள்ளி விடுகிறது. வேலையை முடிக்க முடியாமல் போனால், நமக்கு நிராசை ஏற்படுகிறது. அதிருப்தி, ஏமாற்றத்தினால், எடுத்துக்கொண்ட காரியத்தின் மேல் வெறுப்பு தட்டக் கூடும்.
இதை நிவர்த்தி செய்ய

செய்வதை, இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை அகற்ற வேண்டும். செய்து முடிக்கப் பல பாதைகள் தேடி, யதார்த்தமான போக்கைக் கைப் பிடிப்போம். அதாவது, ஒரு வழி சரியாக அமையவில்லை என்றால் இன்னொன்றை வகுத்துக் கொள்ளலாம்.

'செய்தே ஆக வேண்டும்' என்ற எண்ணம் முடிப்பதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்வதால், சுமையைத் தரும். அதற்குப் பதிலாக, செய்ய வேண்டியதைப் பல குறிக்கோள்களாக வரிசைப்படுத்திக் கொள்வது உத்தமமானது. இதில் எப்போது, எதை, எப்படிச் செய்வது என்பது அடங்குவதால் நாம் முன்னேறுவதைக் கண்டறிந்து கொள்ள முடியும். செய்வதால் வரும் சந்தோஷமே நம்மை ஊக்குவிக்கும்.

விமரிசனங்களைத் தன்னைப் பற்றி என்று எடுத்துக்கொள்வது

நாம் ஒரு வேலையைச் செய்யும் பொழுது, மற்றவர்கள் நமக்கு அதைப் பற்றியோ, செய்முறையைப் பற்றியோ ஏதாவது சொல்வார்கள். இப்படி எடுத்துச் சொல்வதை தங்களைப் பற்றியே என்று உறுதியாக நம்புவார்கள். அதை, தங்கள் மேல் தாக்குதல் என்றும் எண்ணுவார்கள். அதாவது என்ன சொன்னார்களோ, ஒவ்வொன்றும் தங்களது  குணாதிசயங்களைக் குறித்து ஆய்வு செய்வதாக எடுத்துக் கொள்வார்கள். இதனால், சொல்வதை நிராகரிப்பார்களே தவிர, சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும், இதைச் சொல்பவர் பொறாமை உள்ளதால் அப்படிச் சொல்கிறார் என்றும் எண்ணி, ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வேறு எப்படிச் செய்ய?

விமரிசனத்தில் சொல்வதில் எது நம் குணாதிசயத்தை விவரிக்கிறது, எவை நம் வேலையை வர்ணிக்கிறது என்று வித்தியாசப் படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்தால் நிஜமாகவே நம்மைப் பற்றி தான் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதின் விவரணை நமக்கே புரிய வரும். நம்மைப் பற்றி அல்ல, வேலையைப் பற்றி தான் என்று புரிந்ததுமே, வந்த விமரிசனத்தை நன்றாக உபயோகிப்போம்.

ஒரு வேளை விமரிசனம் நம்மைக் குறித்து இருந்தால் உடனடியாக அந்தக் கருத்தை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது இல்லை. நாம் உணர்ச்சிவசமாக இருக்கும் போது கோபம், வருத்தம், அதிகமாக இருக்கும். அப்பொழுது பேசினால், நம்மைக் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பேசுவோம். அதற்குப் பதிலாக, அந்த நாள் முடிந்த பின் இதை எடுத்து யோசித்து, உசிதமான படி நடந்து கொள்ளலாம்.

நாம், நம்மிடம் ஒன்று கேட்டுக் கொள்ளலாம்: 'மற்றவரின் அபிப்பிராயம் எற்றுக் கொள்ள முடிகிறதா? என்ன தடுக்கிறது?’ என்று.

காலம் கடத்துதல்/ தள்ளி வைத்தல் அழிவே:

நாளை, நாளை என்று காலத்தை தள்ளிப் போடுவதற்குப் பல காரணங்கள் தோன்றும். வேலை நடக்காது, முடிக்கவும் இயலாது. முடிக்க முடியும் என்பதற்கு ஒரு காரணி கூட கண்ணுக்குத் தெரியாது! தெரிந்தாலும் அதற்கும் ஏதாவது சொல்லி தள்ளி விடுவோம்.

இப்படிக் காலம் தாழ்த்து செய்வதைத் தான் 'ஃப்ரோக்ராஸ்டினேஷன்’ (procrastination), தள்ளி போட்டுக் கொண்டே இருப்பது என்று சொல்லப் படுகிறது. இப்படி, நாளை என்று அடுக்கிக் கொண்டே போவதால், போகப் போக, “செய்ய வேண்டும்" என்ற அழுத்தம் அதிகரித்து, அதுவே இமய மலை போல் தோன்றும். “இவ்வளவு செய்ய வேண்டுமா?” என்று நினைத்து, ஆரம்பிக்கப் பயம் தொற்றிக் கொள்ளும்.

தள்ளிப் போடுவதற்கு வேறு சில காரணிகள்: நம் திறன்களுக்கு சற்று சவாலானதை முயற்சிப்பது; உதவிக் கேட்காமல் இருப்பது; பயந்தோ இல்லை கர்வத்தினாலோ மேற்கொண்டு எப்படிச் செய்வது என்று தெரியாமல் இருப்பதாலும் நேரிடலாம்.

இன்னொரு முக்கிய காரணி, பர்ஃபெக்ட்டாக செய்வேன் என்று இருப்பதாலும் முடிக்காமல் இருப்பதுண்டு. க்வாலிடி செக் என்பது வேறு. இங்குச் சொல்லப்படும் பர்ஃபெக்ட்டில் ஒரு முடிவு இல்லாமல் போகும்.

விடிவு

ஆரம்பித்து, செய்து கொண்டே போனால் முடிந்து விடும் என்ற எண்ணத்தை நமக்குள்ளே சொல்லிக் கொண்டு இருந்தால் (இதை ஆட்டோ ஸஜெஷன் auto suggestion, என்போம்) செய்ய ஆரம்பிக்கத் தோன்றும், செய்ய ஆரம்பிப்போம்.

மனதுக்குப் பிடித்த ஒன்றைச் செய்த பின்னர் (பாட்டுக் கேட்ட பின்பு, கதையின் ஒரு பக்கம் படித்த பிறகு, வெளியே நடந்து வந்த பின்பு), முடிக்க வேண்டிய வேலையை சில நிமிடங்களுக்குச் செய்வது என்று ஆரம்பிக்கலாம். ஆரம்பித்தால் ஆர்வம் தட்டும், போகப் போக வேலையை முடித்து விடுவோம்.
செய்யப் போவதை, சிறு பங்குகளாக பிரித்துக் கொண்டு, செய்து முடிக்கலாம். இந்த நிலையில், எப்போதாவது, “அப்புறமாக” / ”நாளைக்கு” என்பது நுழைந்து விட்டால், வேலையும் நீண்டு கொண்டு போய் விடும். பொறுமை இழந்து விடுவோம். செய்து முடிக்க வேண்டிய வேலையின் மீது கோபம் வரும். இதனாலேயும் அந்த வேலை செய்ய கை ஒத்துழைப்பு தராது. திரும்ப அதே ஃப்ரோக்ராஸ்டினேஷனில் வந்து நிற்கும்.

பழி சுமத்துவது: பழி சுமத்தி விட்டால், எந்த விதமான பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்க மாட்டோம். தன் தவறின் பங்கைப் பார்க்க மாட்டோம். வெளி சூழ்நிலைகளை,  “அது”, “அவர்கள்” என்று மற்றவர்களை கை காட்டுவோம். அவர்களைப் பொறுப்பாக்குவோம்.

நம் பங்கை உணர, பொறுப்பை எடுத்துக்கொள்ள மனோதைரியம் இல்லாததாலும் பழி சுமத்துவோம். சௌகரியமாகத் தோல்விக்கு பழி சுமத்தி விடுவதனால் வெற்றிப் பாதையை அமைக்கக் கடினமாக முற்பட மாட்டோம்.
ஊகம் செய்தல்: வேலைகளுக்குத் தேவையான தகவல்களை கேட்டுக் கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் தானாக அனுமானிப்பதனால், நாமே அதைப் பற்றி பல ஊகம் செய்து கொள்வோம். தெரிந்த சில அம்சங்களை  வைத்து, அதனுடன் கற்பனை ( என்றே சொல்லலாம்) விவரங்களைச் சேர்த்து, இந்த ஜோடித்ததை நிஜம் என்று நம்பி விடுவோம். விவரங்களைத் தேடி அறிவதற்கு முயற்சி எடுக்காமல் இருப்பதால், போலிக் கருத்து நிலவும். இல்லாததை வைத்துக் கொள்வதில் பயன் இல்லை. நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாது.

மற்றவரின் ஆமோதிப்பு தேவை: செய்யத் தொடங்குவதற்கு, செய்து கொண்டு இருப்பவற்றிற்கு ஒருவருடைய ஆமோதிப்பை எதிர்பார்ப்பது. மற்றவர்கள் சொன்னால் மட்டுமே நன்றாகச் செய்தோம் என்று எண்ணுவது.  அவர்களின் பாராட்டுக்காக ஏங்குவது இதில் அடங்கும்.

இன்றைய கால கட்டத்தில், ஊடகங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் ஆமோதிப்பதில் சந்தோஷப் படுவது, அது இல்லாவிட்டால் துவண்டு போவது பரவலாகி விட்டது.  மற்றவரின் அபிப்பிராயம், ஆமோதிப்பிற்குக் காத்திருப்பது  பெரும்பாலும், தன்னைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாததாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வரும்.

பொறாமை: மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடுகையில் பொறாமை தோன்றலாம். ஏதோ குறைபாட்டினால், மற்றவரைப் போல் இல்லையே என்பதாலும் இந்த உணர்வு எழலாம். பொறாமைப் படுவதால், மற்றவரைக் கடினமாக விமர்சிப்பது உண்டு. அவர்களைப் பற்றி எண்ணினாலே கடுகடுப்பான நிலை ஏற்படும். அவர்கள் வளர்ச்சி பற்றி கேள்விப் பட்டாலோ, பார்த்தாலோ சீற்றம் அடைவோம். பிறரின் வீழ்ச்சி எதிர்பார்த்திருப்பதால், பொறாமையால், செய்யும் வேலைத் தடைப்படும். பொறாமை இருக்கும் இடத்தில் சந்தேகம் நிலவும், அதனால் மற்றவர்களை நம்ப மனம் ஒப்பாது. இதனால் நஷ்டம் நமக்குத் தான்.

'டைமே இல்லை’: எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இல்லை என்றால் என்றும் எதற்கும் நேரம் இருக்காது. பல மணி நேரங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், விடியோ கேம்ஸ், கைபேசியில் பேச்சு, டிவியில் செலவழித்து, வேண்டிய வேலைக்கு நேரம் இல்லை என்போம். இதனால், எதையும் நேரத்திற்குச் செய்யாததால் குற்ற உணர்ச்சி மேலோங்க, வெட்கம் அதிகமாகும். பெரிய பதவியில் உள்ளவர்கள் என்றுமே நேரம் இல்லை என்று சொல்லி கேட்டிருக்க மாட்டோம்.

மன உளைச்சலின் எல்லை (Burnout): என்னதான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும் தன் நலனைப் பார்த்து கொள்ளாவிட்டால் சளைத்துப் போய் இந்த மன உளைச்சலின் எல்லை உண்டாகும். இதைத் தான் பர்ன் அவ்ட் (burnout) என்பார்கள். இது எந்தத் துறையினருக்கும் வரலாம். பல மாதங்களுக்கு எந்த விதமான ஓய்வு எடுத்துக்கொள்ளாமல், செய்வதைச் செய்து கொண்டு இருக்கையில் உடலுக்குச் சோர்வு, மனதுக்கு அலுப்பு தட்டும். இரண்டும் சேர்ந்து, செய்வதின் மீது வெறுப்பை உண்டு பண்ணும். இதன் அறிகுறிகள்: சலிப்பு, முழுச்சோர்வு, முன் போல் உற்சாகம் இல்லாதது, எந்திரன் போல் செயல் படுவது, அலங்காரத்தில் கடுகு அளவு கூட கவனம் செலுத்த மாட்டார்கள்.

இது வராமல் தடுக்க

மனதுக்குப் பிடித்ததை ஐந்து-பத்து நிமிடத்திற்கு தினம் செய்வது நலனைத் தரும். அதனுடன், உடற்பயிற்சி செய்வதில் உடல்-மனம் இரண்டிற்கும் நன்மை சேர்க்கும். மனதுக்கு பிடித்தவர்கள், நண்பர்களுடன் தொடர்பை வைத்துக் கொள்வது ஊக்கத்தை அதிகரிக்கும். ஹாஸ்ய படம் / நாடகம் பார்ப்பது, புத்தகம் படிப்பது, வருடத்தில் ஒரு முறையாவது இயற்கை இடத்திற்கு சென்று வருவது நன்கு.

மொத்தத்தில் நமக்கு நன்றாகச் செய்ய வருவதைச் செய்தால் வெற்றி பெறுவோம். நம தனித்துவம் புரிந்து செயல் படுவது வெற்றியுடன் மனநிறைவை அளிக்கும். நம்முடைய குறைகளை அறிந்து, சரி செய்து கொண்டால் தடைகளை நீக்கும். இவை நம்மை இலக்கிலிருந்து திசை திருப்புவதை அடையாளம் காண்பது மிக முக்கியம், அவசியம். கண்டறிந்து, சரி செய்வது இனி நம் கைகளில் உள்ளது.

அறிவோம், மாற்றுவோம், வெல்வோம்!

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்.   malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com