Enable Javscript for better performance
grooming a child- Dinamani

சுடச்சுட

  

  பகுதி 2 - வளர்ப்பைச் சிறப்பிக்க, ஆரம்பத்திலேயே ஆரம்பிப்போம்..

  Published on : 03rd August 2019 11:06 AM  |   அ+அ அ-   |    |  

  baby

  மிகச் சிறந்ததைப் பெற, மிகச் சிறந்ததைக் கொடு!

  இந்த தொடரின் முதல் பாகத்தில் குழந்தைகளின் நலனுக்குத் தேவை ஊட்டமளிக்கக்கூடிய சூழல், தோற்றம், என்றவற்றைச் சிறியக் கண்ணோட்டத்தில் பார்த்தோம். இத்துடன், அரவணைப்பதின் விதங்கள், நலன் எவ்வாறு உடல்-மனம்-சமூக உறவு- நம்பிக்கை ஒன்று திறண்டியவை என்பதையும் பார்வையிட்டோம்.

  எப்பொழுதிலிருந்து குழந்தைகளின் நலன் ஆரம்பமாகிறது? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

  ஆரம்பத்தில் ஆரம்பிப்போம்

  ஆரம்பம், குழந்தை உருவாகும் பிரசவ நேரத்திலிருந்து! அங்கிருந்தே இந்த உரையாடலையும் ஆரம்பிக்கலாம்.

  வாழ்வின் ஆரம்ப காலம் இனிமையாக, சுகமாக அமைந்தால், வாழ்நாள் முழுவதும், அது திடத்திற்கு அஸ்திவாரம்!

  அஸ்திவாரத்தை மேம்படுத்தக் கர்ப்பிணிப் பெண்களின் உடல் நலன், சமூக-உணர்வு நலன், நம்பிக்கை, கலாச்சாரத் தேவைகளை அறிந்து, அவற்றை அனைவரும் சமபங்குடன் செயல்படுத்துவதில் உள்ளது.

  பிரசவ நிலை காலமும் குழந்தையின் பிற்காலத்து நலனைத் தீர்மானிக்கும். இந்தக் காலகட்டத்தில் கருவை சுமந்துக் கொண்டு இருப்பவளும் அவளைச் சுற்றி உள்ளவர்களும் முக்கியமாக எப்பொழுதும் ஒரு விஷயத்தை தங்களது கவனத்தில் வைத்துக் கொள்ளத் தேவை:  தாயார் என்னவெல்லாம் உடலில், மனதில், உணர்வில், உறவில், சுற்றம்சூழலில் அனுபவிக்கிறாளோ, அதன் நன்மைகள், குறைவுகள் ஒவ்வொன்றும் அவளின் பாகமான, அதிவேகமாக வளர்ந்து மாற்றங்கள் காணும் சிசுவின் உடலுக்கும், மனப்பான்மைக்கும், விருப்ப வெறுப்புகளுக்கும் வடிவு கொடுக்கும்!

  பிரசவம், சிசுவின் நலனுக்கு அடிக்கல்!

  இந்த மையக் கருத்தை வைத்துத்தான் பல ஆராய்ச்சிகள், சம்பிரதாயங்கள் கர்ப்பிணிப் பெண்கள் எந்த அளவிற்குத் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறி இருக்கிறார்கள். அந்தக் கர்ப்பிணி பெண் நன்றாக இருப்பது பல்வேறு, பல பேரின் கைகளில் உள்ளதால், வளரும் கருவின் முழுநலனைக் காப்பது இவர்கள் எல்லோரின் ஒத்துழைப்பில் அடங்கும். எவ்வாறு நலன்கள் உருவாக்கப் படுகிறதோ அதேபோல், கூட இருப்பவர்களால் பாதிப்பும் ஏற்படலாம் என்பதையும் அறிய வேண்டும்.

  நம் கலாச்சாரத்திலும் அதற்காகத்தான் கர்ப்பவதி பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றதைச் சொல்வதுண்டு. அதன் வலியுறுத்தல் பல விதங்களில் கூறி இருக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக, அவர்கள் இருக்கும் இடத்தில் சிரிப்பு, சந்தோஷம் இருக்க வேண்டும் என்றும், கர்ப்பிணிப் பெண்கள் ஆசையாகக் கேட்பதைச் செய்து தர வேண்டும் என்ற சம்பிரதாயங்களும் இதனால்தான்.

  இதற்கு ஏற்றாற்போல் கர்ப்பிணிப் பெண்ணைச் சந்திக்க வருவோருக்கு சில செய்ய வேண்டியவை, நடந்து கொள்ள வேண்டியவை உண்டு. நிறைமாதமானவள் என்றால் பார்க்க வருவோர் இனிமையோடு பேசி, அவளுக்குப் பிடித்த இனிப்பு, கார வகைகளைச் செய்து (இன்றைய நாட்களில், வாங்கின) தரும் வழக்கம் ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது!

  அனைவரின் பங்களிப்பு இருக்கிறதை இந்த மாதிரியான பழக்க வழக்கங்கள் காட்டுகின்றன. இதில் இன்னொரு சிறப்பும் உள்ளன, ஏதோ காரணத்திற்காகக் கர்ப்பிணி பெண்ணிற்கு அவளை அரவணைக்க யாரும் இல்லை என்ற போது, உறவினர், தோழர்கள் மூலம் இந்த மாதிரியான சம்பிரதாயம் அதைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன.

  அதுவும் நம் நாட்டை போன்ற சமூகம் ‘கலக்டிவிஸ்ட் ஸோஸைட்டி’ (Collectivist society) எனப்படும். அதாவது ‘நாம்’ என்பதுதான் நல்லதாகக் கருதப்படும். ‘நான்’/ எனக்கு’ என்பதற்குப் பிரதானம் கிடையாது. இதனால் மற்றவர்களின் நலனுக்காக நம்மால் முடிந்ததைச் செய்வது கலக்டிவிஸ்ட் ஸோஸைட்டியின் செய்முறை ஆகும்.

  இந்த தாய்மை நிலையை ஏன் இந்த அளவிற்குக் கொண்டாடுகிறார்கள்? பல பேர் இருந்தாலும் பெரும்பாலும் பெண்கள் கூடிக் கொண்டாட வளைகாப்பு,  சீமந்தம், பேபீ ஷவர் என்ற சடங்குகள் உள்ளன. இவை ஏன்? சமுதாயத்திலும் இவர்களுக்கு என்று தனிச் சலுகையாகப் பிரசவத்திற்குச் செல்ல ஆட்டோவில் இலவசச் சவாரி, பிரசவத்திற்கும்-பிறகும் நீண்ட விடுமுறை, பல தொழிலில் தந்தையும் விடுமுறை எடுக்க அனுமதிக்கப் படுவதுண்டு. வெளிநாடுகளிலும் பலவிதமான சலுகைகள் உள்ளது. இவை எல்லாமே பிறப்பின் முன்னும் பின்னும் சில மாதங்கள் எந்த அளவிற்கு வாழ்நாள் முழுவதையும் தீர்மானிக்கிறது என்பதை எல்லோருமே அறிந்ததனால்தான்.

  இவ்வாறு கூட்டாகக் கொண்டாடி, அந்த பிரசவ மாதங்களில் பார்த்துப் பார்த்துச் செய்வதால் தாய்மையைக் கொண்டாடுகிறோம் என்றே சொல்லலாம். அந்த சிசுவின் நல்வளர்ச்சிக்கு அடிக்கல் வைக்கிறோம். உண்டான தாய் இதமான சூழலில் இருக்கையில் தன் வயிற்றில் வளரும் சிசுவை அன்புடன் நினைப்பாள். அவள் தன் நலனை நன்றாகப் பாதுகாத்துக் கொண்டால், கருவிலிருந்து தனக்கு அமோகமான வரவேற்பை உணர்ந்து சிசுவும் நன்றாக வளரும்.

  வெளி உலகில் நடப்பதைக் கருவில் இருக்கும் உயிர் ஜீவன் எவ்வாறு உணர முடியும்? இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதாரணத்திற்குக் கருவில் பாடல்கள் கேட்பதைப் பற்றி எடுத்துக் கொள்வோம்.

  கருவில் பாட்டு கேட்பதால்!

  சிசுவின் முப்பதாவது வாரத்தில் மூளைப் பகுதியில் கேட்கும் திறன் வளர்ந்துள்ளதால் அப்பொழுதிலிருந்தே அம்மாவின் குரல், வெளி ஒலி சத்தத்தைக் கேட்க முடிகிறது. நாம் பிரகலாதன், அபிமன்யு, இவர்களைப் பற்றிக் கேட்டு, படித்து இருக்கிறோம். ஆராய்ச்சியும் இது சாத்தியம் எனக் காட்டியிருக்கிறது.

  இது முடியுமா என ஆராய்ந்தார்கள். செவி கேட்கும் பகுதி வளரும் போது ஆராய்ச்சியாளர்கள் பல கர்ப்பவதிகளுக்குப் பாட்டுத் தட்டு போட்டு இசையைக் கேட்க வைத்தார்கள். பிறந்த பின், சிசுவிடம் பல்வேறு பாட்டுத் தட்டுகளைப் போட்டுக் காட்டினார்கள். தங்கள் அம்மாவிற்குப் பிடித்த இசையை சிசுக்கள் தேர்வு செய்து, அந்த இசையைச் அதிகம் விரும்பினார்கள்.

  மேலும் இதையும் ஆராய்ச்சியில் கண்டு அறிந்தார்கள் - கருவில் இருக்கும் போதே தினமும் அல்லது நீண்ட வேளை பாடல்களைக் கேட்பதினால், அதாவது கர்ப்பிணிப் பெண் இசையைக் அல்லது இசைப்பதால் வளரும் சிசுவின் மூளை பாகத்தில் அந்த இசை பதிந்து விடுகின்றது. அந்தப் பதிவுகள் பல மாற்றங்களுக்கிடையில் அப்படியே காக்கப் படுகின்றன! பிறந்த பிறகு அதே பாடலைக் கேட்க, குழந்தைகள் அதை அடையாளம் காணக் கூடியதாகவும், தங்களது பிஞ்சு கை கால்களை, தலையை அசைத்து ரசிப்பதையும் கண்டறிந்தார்கள். தாய்க்கும்-சிசுவிற்கும் இணைப்பு பல விதம், அவற்றில் இசை ஒன்று.

  இசையினால் வேறோரு பயனும் உண்டு. பிரசவ காலத்தின் போது சில கர்ப்பவதிகள் பதட்டம் படலாம், சிலருக்கு மனச்சோர்வு ஏற்படலாம் என்பதற்கெல்லாம் பாட்டு ஆறுதல் மட்டும் அல்லாமல் மருந்தாகவும் அமைகின்றன. அவர்களைச் சாந்தப் படுத்தி மனநலனைப் பாதுகாக்கச் செய்யும்.

  சிசுக்களின் வாழ்வின் ஆராய்ச்சியில் மிகப் பெயர் போனவர் விவெட் க்ளோவர் (Vivette Glover) அவர்கள். இவர் சமீபத்தில் தன்னுடைய புரிதலைப் பகிர்ந்து கொண்டார்: ஏதோ காரணியால் கர்ப்பவதிக்கு மனச்சோர்வோ, பதட்டமோ, மன அழுத்தம் ஸ்ட்ரெஸோ நேர்ந்து விட்டால் அவர்களின் பிரசவ நேரத்திலிருந்தால் அப்போது சிசுவிற்குப் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பாகலாம் என்றார். பிறந்த பிறகு சிசுவிற்கு, இதன் தோற்றம் மன உளைச்சலாகவோ, கவனம் தட்டு, சிந்தனைத் திறன் பாதிப்பாக ஏற்படலாம் என்கிறார்.

  இதே கருத்தைப் பல ஆராய்ச்சிகள் திரும்பத் திரும்பக் காட்டியுள்ளது. இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்: கர்பவதி சுபாவமே பதட்டத்துடன் இருப்பது என்றாலோ, அல்லது வாழ்க்கைச் சம்பங்களால் மன உளைச்சல் நேர்ந்தாலோ, அல்ல மனச்சோர்வு ஏற்பட்டாலோ இவை எல்லாம் அவர்களின் குழந்தைகளின் மனோநிலையைப் பாதிக்கக்கூடும் என்று புரிந்து, கூடிய வரையில் அதை கையாளும் திறன்களை மேம்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், பாதிப்பு நிகழாமல் பாதுகாக்க முடியும். குடும்ப நபர்கள், வேலையிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அனாவசியமாக ஸ்ட்ரெஸ் அதிகம் தரும்படிப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

  இருக்கும் சூழலில் அழுத்தம் இருந்தாலும் பெண்கள் தைரியமாக, ஆற்றலுடன் இருந்தால், இதைக் கடந்து வர முடியும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இது தேவையும். ஏனென்றால், கற்பதில், திறமையாகச் சமாளிப்பதில், பொறுமையுடன் தாங்கிக் கொள்வதில் கவனம் செலுத்தினால், இந்த நன்னடத்தையின் சாயலும் சிசுவின் மேல் அவசியம் இருக்கும் என்பதற்காக.

  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து கற்றுக் கொள்வது குழந்தைகளின் இயல்பானது. இதை எப்படி சாத்தியம் என்பதை அடுத்த வரும் பகுதிகளில் விவரிக்கப்படும். அதற்காகத்தான் குழந்தைகள் நலனை மனதில் வைத்தே கர்ப்பமானவளை நலனுடன் இருப்பதை வலியுறுத்துவ உண்டு. கர்ப்பவதி நன்றாக இருக்கையில் குழந்தை நலன் சாத்தியம். இல்லையேல், சிசுவின் நலன் மிக இக்கட்டான நிலையில் இருக்கும். அதனால்தான் ஆரம்பத்திலிருந்து காப்பது மிக அவசியம், தேவையும்.

  கர்ப்ப நிலை சந்தோஷம் அளிக்கவில்லை என்றால்?

  கர்ப்பவதி தன் நிலையைச் சுகமாகக் கருதினால் நல்ல மனநிலையில் இருப்பாள். தனக்கு வரும் புதுத் தகுதியை, தன்னுடைய வரப்போரக் குழந்தையை ஆர்வத்துடன் காத்திருப்பாள். அவளுடன் இருப்பவரும் இதே போல் இருந்தால் தன் பிரசவ நிலை, குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு மூன்றையும் நேர்மறையாக உணருவாள்.

  ஆனால் சிலருக்குப் பிரசவம் பல காரணிகளால் மேற்சொன்ன போல் இல்லாமல் போகலாம். அப்படி ஒரு வேளை பிரசவம் சந்தோஷம் தரவில்லை என்றால்? இந்த மாதிரியாக ஆவதற்குக் காரணிகள் உண்டு.

  சில காரணிகள்

  சில தம்பதியர், அவர்களின் குடும்பப் பொருளாதார நிலை, வேலைப் பிரயாசங்கள், அல்லது வயது காரணமாகவும் பிரசவத்தைத் தள்ளிப் போட நினைத்தவர்களாக இருக்கலாம். தான் தாய்மை அடைய இன்னும் தயாராக இல்லை என்று பெண்ணுக்குத் தோன்றலாம். இந்த மாதிரியான தருணத்தில் பிரசவம் ஏற்பட்டு விட்டால் அதை வரவேற்பார்களா என்பது சந்தேகமே. அப்போ தன்னையோ வளரும் கருவையோ நன்றாகப் பார்த்துக் கொள்வார்களா என்பதும் கேள்விக்குறியே.

  சில கணவன்-மனைவி இடையே மன அளவில் புரிதல் இன்னும் ஏற்படாததால் தாய்மையைக் கணவன் அல்லது மனைவி தள்ளிப் போட எண்ணுவார்கள். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பிரசவத்தை இடைஞ்சல் என்று எண்ணக்கூடும். ஏற்பட்டுவிட்டால் விட்டேற்றியாக இருந்து விடுவார்கள். இந்த நிராகரிப்பை அந்த பிஞ்சு சிசு உணரும்.

  பிரசவம் வேண்டாம் என்று நினைப்போருக்கும் ஒரு வேளை, தகுந்த தடுப்பு வழிமுறைகளை எடுத்துக் கொள்ளாததாலோ, அல்லது அவற்றை மீறியோ கர்ப்பம் ஏற்பட்டு விடலாம். பிரசவத்தை வரவேற்கும் மனம் இல்லாமல் அதை உதறித் தள்ள முயற்சிகள் கூட சிலர் எடுப்பார்கள். அப்படி நிகழ்ந்தால், வளரும் சிசுவிற்கு தனக்கு வரவேற்பு இல்லை என்பதை உணரும். கண்டிப்பாக அந்தக் குழந்தைக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்படும். சில சமயங்களில், பிறந்தபின் கூடப் பெற்றோருக்குக் குழந்தை மேல் ஆசை பாசம் சரியாக இருக்காது.

  சிலர் தன் இளம் வயதில் கர்ப்பத்தை ஏற்க விரும்பாதவர்களாக இருக்கலாம். இந்த மாதிரியான நிலைகளில் தங்களது பிரசவத்தை பற்றித் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள். அதைப் பற்றிய உணர்வு குறையும், சலித்துக் கொண்டு பிரசவ மாதங்களைக் கடப்பார்கள். தாய்-சேய் இருவருக்கும் இது கடினம், எந்த விதமான பற்றும் இல்லாமல் இருக்கக் கூடும்.

  வேறு சில பெண்மணிகளுக்கு தாங்கள் கர்ப்பமானால் உடல் அழகு குறைந்து விடும் என்றும் வயதான தோற்றம் போல் தெரியும் என்ற (தவறான) எண்ணத்தினால் கர்ப்பம் எனத் தெரிந்ததுமே அந்த நிலைக்கு வெறுப்பு ஏற்படக்கூடும். வெளி உலகம் அறியக்கூடாது என்பதற்காகவே எடையை அதிகரிக்க விடாமல் இருக்கப் பல முயற்சிகளை எடுப்பார்கள். இது வளரும் கருவைப் பாதிக்கும் என்றதை அலட்சியப் படுத்தி விடுவார்கள். கண்டிப்பாக இதன் விளைவை வளரும் சிசுவின் பாதிக்கப்பட்ட வளர்ச்சியில் பார்க்கலாம். மொத்தத்தில், கர்ப்பிணியும்-சிசுவும் வேதனை அனுபவிப்பார்கள்.

  இப்படி எல்லாம் நேர்ந்தால், பெற்றோர், உறவினர், தோழர் இதைக் கண்டு கொண்டு அவர்களுக்கு தன் நடத்தையின் பிற்கால விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். புரியாமையினால் செய்யும் தவரின் விளைவுகள் நெடு நாளைக்குப் பெற்றோர், குழந்தை இருவரையும் வாட்டும் என்று புரிந்தால், அவர் தன் குழப்பங்களிருந்து வெளி வர வாய்ப்புண்டு.

  இவர்களைப் போல், ஆனால் வேறு காரணிகளால் தான் பிரசவம் எனத் தெரிந்ததும் சங்கடப்படுபவர்களும் உண்டு. ஒரு சிலருக்கு அவர்களின் குழந்தைப் பருவம், அதன் நினைவுகள், அனுபவங்கள் மிகக் கடுமையாக, கசப்பாக இருந்திருந்தால் இப்படித் தோன்ற வாய்ப்புள்ளது. குறிப்பாகக் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கும் இந்த நிலை சங்கடப் படுத்தக் கூடும்.

  சில சூழ்நிலைகளில் இல்லாமை உருவாக்கப்படலாம். அதாவது எல்லாம் இருந்தும் கிட்டாத நிலை ஏற்படலாம். இந்த நிலை பல கர்ப்பிணிப் பெண்களுக்குப் புகுந்த வீட்டில் நேரலாம். எவ்வாறு? சில குடும்பங்களில் பசிக்கு உணவைத் தடை செய்துவிடுவது - உணவை மறைத்து வைப்பது, அல்லது சாப்பாட்டை உண்ணும் போது வேலை தருவதால் சாப்பிடுவது தட்டிப் போவது,  மிகப் பழைய உணவைத் தருவது என்ற பல விதமான தொல்லைகளால் உணவை உண்பதே முடியாமல் போய்விடும். இந்த மாதிரியான துன்புறுத்தல் ‘டோமஸ்டிக் வையலன்ஸ்’ (domestic violence) என்பதாகும். சுற்றச் சூழலில் உள்ளோர் விழிப்புடன் இருந்தால் இவ்வாறு நேர்வதைக் கண்டு கொண்டு, ஏதேனும் விடை தேட முயற்சி செய்யலாம்.

  வீட்டிலோ, வெளியிலோ கர்ப்பிணியின் அருகில் புகைபிடித்தால் அதை அவள் சுவாசிப்பது (ஸெகண்ட்ரீ ஸ்மோக்கிங், secondary smoking) வளரும் கருவின் நலனைப் பாதிக்கும். இன்றைய காலகட்டத்தில் மிக வருத்தத்தைத் தருவது, புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது. கர்ப்பிணிப் பெண்கள் புகை பிடித்தல், மது அருந்துவதால் கண்டிப்பாக வளரும் சிசுவின் நலன்களை மிகவும் பாதிக்கும்.

  கர்ப்பத்தில் உள்ளவர்கள் மது அருந்தினால் கருவின் பல நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைப் பல பல ஆராய்ச்சிகள் காட்டி உள்ளன. பால்வினை நோய்கள் (Sexual Transmitted Disease) கர்ப்பிணிகளுக்கோ கணவருக்கோ இருந்தால் அது கருவிற்கு சில வகையான ஊனம் ஏற்படுத்தலாம். இல்லாமை. பல காரணத்தால் இல்லாமை உருவாகலாம். பணம் பற்றாக்குறை காரணியாகலாம். இவை போன்றவைக்கே நமது பாரம்பரியத்தில் பல எளிதான உணவு பண்டங்களை விவரித்துள்ளார். அதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரே குறிக்கோள், கர்ப்பிணி உணவுப் பழக்கங்களில், சத்தில் வளரும் கருவின் நலன் கலந்திருக்கிறது. கவனம் அவசியம். இல்லாவிட்டால் பிறக்கும் குழந்தையின் எடை குறைய வாய்ப்புள்ளது. அதனால் பல நலன் குறைவு ஏற்படும்.

  இதையெல்லாம், தாய்மையைக் குறை கூற அல்ல. சில பெண்களுக்கு நேர்ந்து, கடக்கும் சூழலின் தோன்றும் நிழலின் விரிப்பைப் புரிந்து கொள்வதற்காகச் சொல்கிறேன். இவற்றை அறிவது மிக முக்கியமான ஒன்று. இப்படி எல்லாம் நேர்ந்தால், மன நோய்களுக்கு வாய்ப்பு உண்டு. பல சமயங்களில் நாம் ஒன்றைப் பற்றி அறிந்து, புரிந்து கொண்டாலே அது நமக்குப் பல நல்ல மார்க்கங்களைக் காட்டும். பிற்காலத்திற்கு இப்போதே தற்காப்பு செய்வது தேவையே. இப்படிச் செய்யாவிட்டால் சிசுவின் எடை குறையும், குழந்தை பிறந்த பிறகு அதை பாரமாகக் கருதுவார்கள், அம்மா-பிள்ளைப் பாசம் குறையும்.

  இப்பொழுதைய ஆராய்ச்சிகளின் கவனம் இந்த பிரசவ காலத்தில் எது, எவற்றை தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவை என்பதை பட்டியல் செய்வதில் உள்ளது. இதை ‘கெஸ்டேஷனல் ஏஜஸ் ஆஃப் வல்னரப்பிலிட்டி’ (gestational ages of vulnerability) என்ற குறிப்பிடுவார்கள். இதை ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு திசையில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இது வரையில் ஒப்புக்கொள்வது, தினசரி சச்சரவுகள், பிரசவத்தை பற்றிய கவலைகள், சிசுவை பாதிக்கும்.

  பிரசவத்தை தன்னுடைய நலனுக்கும் கருவின் நல் வளருப்பின் ஆரம்பம் என கருத ஆரம்பித்தால் அதுவே தாய்- செய் உறவை மேம்படுத்தும் முதல் கட்டமாகும்.

  கர்ப்பிணி நிலையில் அவள் கருவில் வளரும் சிசுவுடன் பேசி, உரையாடி பாசத்தைக் காட்ட, அத்துடன் சிசு வளரப் போகும் இடங்களை, மனிதர்களின் அறிமுகம் செய்யத் தொடங்கலாம். இந்த தினசரி உரையாடல் கர்ப்பிணிப் பெண்ணின் மனநிலையை நன்றாக இருக்கச் செய்யும். அதனால் அவளுள் சுரக்கும் ரசாயனம் வளரும் கருவையும் அடைந்து நல்லதைச் செய்யும்.

  இதை மேலும் சீராக்கத் தாயுடன் தந்தையின் பங்களிப்பும் அவசியமாகும். இருவரும் சிசுவின் வரவேற்பைப் பற்றிப் பகிரலாம். முதலில் விவரித்தது போல் இருவரும் சேர்ந்து மனதிற்கு இதமாக்கக் கூடிய புத்தகங்கள் படிக்கலாம். இருவரும் ரசித்து, மன-உடல் ஆசுவாசமாக இந்த நிலையை மேலும் நன்றாக அமைக்க முயலலாம். அதே போல், பாடல்களைப் பாடுவது, பிடித்த இசை கேட்பது, படங்களைப் பார்ப்பது, மனதிற்கு இதமான இடங்களுக்குப் போவது, டாக்டர் சொன்னது போல் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஊக்குவிக்கும் விஷயங்களைக் கேட்பது, என உற்சாகம் ஊட்டும் பல வற்றைச் சேர்ந்து செய்யலாம். இதை எல்லாம் செய்வதால் தம்பதிகள் தங்களது இந்தப் பிரசவத்தையும்  வளரும் சிசுவைப் பாசத்துடனும் நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். குழந்தை பிறந்த பின் குழந்தையுடன் இதை எல்லாம் செய்ய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற தூண்டல் இருக்கும், ரிபீட்டு..!

  பிரசவ காலம் என்பதால் எல்லாம் சுமுகமாக இருக்கும் என இருப்பது நிச்சயம் அல்ல. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் கூட கருவுடன் தமக்கு நேர்வதைக் கர்ப்பிணிப் பெண் பகிர்ந்து கூடவே அந்த சூழலை எவ்வாறு அணுக முடியும் என்பதைச் சொல்லலாம். ஒரு விதத்தில் இது தாய்-செய் பகிர்ந்து கொள்வது எனச் சொல்லலாம். இதையே திறனை வளர்ச்சி செய்ய அஸ்திவாரம் என்று சொல்லலாம். இந்த வகையில் பல வழிகள் உள்ளன.

  நலனுடன் புரிந்து செயல் படுவது தேவையானது. இன்றைய காலகட்டத்தில் தேவை, "ஸ்மார்ட் சாய்ஸ்" (smart choice) அறிந்து-புரிந்து தேர்வு செய்வது!

  மிகச்சிறந்ததைப் பெற, மிகச்சிறந்ததைக் கொடு!

  மேலும் பேசுவோம்…..

  - மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்   மாலதி சுவாமிநாதன்

  malathiswami@gmail.com

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp