Enable Javscript for better performance
பகுதி 3: அதிவேகமான கற்றல் இப்போதே!- Dinamani

சுடச்சுட

  
  beautifu_baby

  குழந்தைகள் உடல்-மனம்-சமூக நலன் என்று முழு நலன்களுடன் இருக்க வேண்டும் என்பதை அவர்களின் பெற்றோர்கள் போலவே எல்லோரும் விரும்புவதே. இதற்காக நாம் குழந்தைகளின் ஆரம்ப நிலையிலான சிசுவின் நலனின் முக்கியத்துவத்தையும் கர்ப்பவதியின் மனநிலையைப் பற்றியும் போன வாரம்  https://www.dinamani.com/health/mental-health/2019/aug/02/grooming-a-child-3205645.html பார்த்தோம். 

  குழந்தை பிறந்ததிலிருந்தே அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தப் பலவிதமான தூண்டுதல் செய்வதுண்டு, செய்வது மிக அவசியம். அவர்களைச் சுற்றியுள்ள நாம் யாவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். எவ்விதமான தூண்டுதல், இதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்? இவற்றையும், இதனால் நிகழும் நலத்தையும், மனவலிமையை மையமாக வைத்து, இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

  ஐம்புலன் உணர்வுகளால்

  குழந்தைகள் ஆரம்பக் காலத்தில் தங்களைச் சுற்றி இருக்கும் அனைத்திலிருந்தும் கற்றுக் கொள்வார்கள், பல்வேறு விதமாகக் கற்றுக் கொள்வார்கள். பார்த்து, ஒலிகளைக் கேட்டு, வாசனைகளை முகர்ந்து, நக்கிக் கடித்துப் பார்த்து, தொட்டு-ஸ்பரிசித்து என ஒவ்வொரு அங்கங்கள் மூலமாகவும் ஒவ்வொன்றையும் பரிசோதித்து பரிச்சயம் பெறுவார்கள், அதன் மூலம் பொருட்களைப் பற்றி அறிவது மட்டும் இல்லாமல், புலன்களைப் பற்றியும் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் வளர வளர, கூடவே தன் புலன் திறமைகளும் செழிப்பு பெற, தங்களைச் சுற்றி உள்ள உலகத்தை வியந்து பார்ப்பார்கள். அவர்களின் ஆர்வத்தைத் தூண்டச் செய்யும். இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகும். இவ்விதமான கற்றலில் மூளையின் பல பாகங்கள் ஈடுபடும், அவர்களின் உற்சாகமும், அதிவேகத் திறமை வளர்ச்சியும் இதற்கு அத்தாட்சி. 

  ஆர்வமும் ஈடுபாடும் மேலோங்கும். அதனால்தான் குழந்தைகள் ஒன்றைச் செய்யும் பொழுது, அவர்களின் முழு கவனம் அதில் ஆழ்ந்து இருந்தால், அந்த நிலையில் அவர்களின் கவனத்தைச் சிதறவிடச் செய்வது சாமானியமானதே அல்ல. 

  பலபுலன்கள் ஒட்டியே நம் பாரம்பரிய குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. நம் கலாச்சார பழக்க வழக்கங்களும் இத்துடன் இணைந்து இருப்பதே. எளிதாகப் புரிந்து கொள்ள, நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பிறந்த குழந்தையைப் படுக்க விடும் தொட்டிலின் மேல் பாகத்தில் கிலுகிலுப்பை கட்டிவிடுவதுண்டு. இது, தொட்டிலுக்கு ஏற்றபடி அளவிலும் வடிவத்திலும் இருக்கும். அது, இப்படி-அப்படிச் சுற்றுவதைக் குழந்தையின் கண்களுக்கு எதிரே தென்படும்படியாக கட்டி வைக்கப் படும். தொட்டிலின் அலுங்கக் குலுங்கல் சிலதினில் அந்த சிறிய மணியின் மெல்லிய ஓசையும் சேர்ந்திருக்கும். கிலுகிலுப்பின் ஒவ்வொரு பக்கத்தில் பல வர்ணங்களுடன் இருக்கும். வளரும் முதல் கட்டத்தில் இதைப் பார்க்க ஆரம்பித்து, வளர வளர, சில வாரங்களுக்குப் பிறகு, அதை எட்டித் தொடப் பார்ப்பார்கள், அதன் அசைவுகளைக் கூர்ந்து கவனிப்பார்கள். அதற்கும் பிறகு, இன்னும் வளர, அதைக் கையில் வைத்து, தொட்டு விளையாடி, நாக்கை வைத்து நக்கிப் பார்ப்பதும் இருக்கும். ஆக, பல புலன்களால் (கண், கை, ஸ்பரிசித்து, சுவைத்து, கேட்டு) அறிந்து கொள்வது ஒரே பொருளினால்!

  வேடிக்கையான ஒன்று. கிலுகிலுப்பை பழங்கால பொருளாயிற்றே என்று அதற்குப் பதிலாகப் புதுமையான, விலை உயர்ந்த பாட்டரி பொருத்திய பல்வகை சப்தங்கள் செய்யும் பொம்மை ஒன்றைத் தொட்டிலில் வைத்தால், அதன் விளைவு என்ன? அது சப்தங்கள் செய்யுமே தவிர, ஆடுமா? அதைச் சுவைத்தால் பாட்டரியின் விஷப் பொருட்கள் தீங்கு விளைக்கலாம் அல்லவா? பக்கத்தில் இருக்கும் அதை மேலே எட்டித் தொட வேண்டிய தூண்டல் ஏற்படுமா? ஒரே பொருள் பல்வேறு சப்தங்கள் செய்தால் அதனால் புரிதல் ஏற்படுமா, அல்லது குழப்பம் ஏற்படுமா? இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, நாம் எளிமையானது என்று எண்ணுவது அவ்வளவு சாதாரணம் அல்ல, உயர்ந்தது என்று நினைப்பது சரி வருமா என்று நினைத்துப் பார்ப்பது அவசியம்.

  இப்படிப் பல புலன்களால் தன்னைச் சுற்றி இருப்பதைப் பற்றிய  புரிதலை-அறிதலை "மல்டிஸென்ஸரீ லர்னிங்" (multisensory learning) என்பார்கள். அதாவது ஒவ்வொரு புலனாலும் ஆராய்ந்து, எல்லாவற்றையும் ஒன்று கூடிச் சேர்த்து, பொருட்களின் பலவகைத் தன்மைகளைக் கற்க வாய்ப்பு ஏற்படுகிறது. பலவற்றைக் கற்றுக்கொள்வார்கள்.

  நாம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளும் விதங்களில் வேறுபாடுகள் இருக்கும். இதை அறிந்து தான் இந்த ஐம்புலன்கள் கற்றலும் கலாச்சார மரபுகளும். இதன் மற்ற பரிமாணங்கள் லர்னிங் ஸ்டைல் (learning style), மல்டிப்பிள் இன்டெலிஜென்ஸ் (multiple intelligence) என்றும் உண்டு.

  பிஞ்சுக் கைகளின் பக்கவாட்டில் வைக்கும் விளையாட்டுப் பொருட்கள் மழ மழவென, பல்வேறு வகைகளில், நிறங்களில் இருக்க வேண்டும். குழந்தையின் வளரும் காலகட்டத்தில் இந்த ஐம்புலன்களையும் உபயோகிப்பதற்கு ஊக்கமளிப்பது தேவை. அதற்கு ஏற்றவாறு பொருட்களைத் தேர்ந்தெடுக்க சில வாரங்களுக்குப் பிறகு மாற்ற வைக்க, ஊக்க வைக்கும். 

  பழக்க வழக்கம்

  குழந்தை பிறந்ததிலிருந்தே குறிப்பாக அவர்களின் ஐந்து ஆறு வயது வரையில் ஒன்றைச் செய்தால் அதைப் பல முறை செய்து பார்ப்பார்கள். கற்றலே மையமாகக் கொண்ட இந்த முதல் ஐந்து வருடங்களில், ஆர்வமும் பரிசோதனையும் உச்சத்தில் இருக்கும். நாமும் கற்றுக் கொள்வதை மேம்படுத்த வேண்டும். 

  குழந்தைகள் வார்த்தைகளால் பேசுவதற்கு முன் பல வகையான மொழிகளில் பேசுவதுண்டு. இது அழுகையாக, கத்தி, அலறி, களகளவெனும் ஓசை செய்து, தங்களது சந்தோஷத்தை, வேதனையை வெளிப்படுத்துவார்கள். மழலை சொற்களில் அடுத்ததாக.

  அதேபோல் தங்களின் பக்கத்தில் உள்ள பொருட்களைக்  கை கால் விரல்களால் விளையாடுவார்கள். கால் விரல் தற்செயலாக வாயில் படும், அதைச் சப்பிப் பார்த்ததும் திரும்பவும் தற்செயலாகச் செய்ய நேரிடும். அது ஒரு புது அனுபவம். புது செய்கை. மறுபடியும் செய்ய முயல்வது குழந்தைகளின் இயல்பு. எவ்வாறு செய்வது, செய்தால் என்ன ஆகும் என்பதை மீண்டும் மீண்டும் செய்யத் தானாகக் கற்றுக் கொள்ள முடிகிறது. இப்படிச் செய்து பழகிக் கொள்வார்கள், இதில் தன் உடலைப் பற்றியும், வெளி உலகத்தைப் பற்றியும் பல கற்றல்கள் ஏற்படும், பல திறன்கள் வளரும். 

  பழக்க வழக்கங்களைப் பற்றி மிகப் பிரபலமான ஒரு ஆராய்ச்சியைப் பற்றிச் சொல்ல வேண்டும். இதில் பிறந்த வாத்து ஒன்றுக்கு அந்த ஆராய்ச்சியாளர் அவர்கள் முன்னே நடக்க, வாத்தும் அவரைப் போலவே நடக்கக் கற்றுக் கொண்டதாம். அதிலிருந்து புரிகிறது, குழந்தைகள் தன்னை கவனிப்போர் தங்கள் முன் என்ன செய்கிறார்களோ, அதைச் செய்ய முயலுவார்கள். நாம் என்ன செய்கிறோம், சொல்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 

  பிறந்ததிலிருந்து ஆறு வயது வரை குறிப்பாக  இன்னொரு மிக மிகத் தேவை, முக்கியமாகச் செய்ய வேண்டியவை - குழந்தைகளுடன் பேசுவது. குழந்தை வளர்ந்து இரண்டு மூன்று வயதில் தான் பேச்சைப் புரிந்து கொள்ள முடியும் என்று நாம் நினைக்கக் கூடும். அல்லவே அல்ல. நாம் பேசும் எல்லாவற்றையும் குழந்தைகள் கேட்டு அவர்களின் நினைவலைகளில் பத்திரப் படுத்தி வைப்பார்கள். அவர்கள் இவ்வாரே வார்த்தைகளைச் சேகரிப்பது. அது பேசும் போது உபயோகிப்பார்கள். வார்த்தைகள் புரியும் முன்னரே, நாம் பேசும் தொனியும், அதில் உள்ள உணர்வுகளும் அவர்களுக்குள் ஆழ்ந்து பதியும், அவர்கள் மனப்பான்மைக்கு வடிவு கொடுக்கும்..

  உச்சரிப்பு சரிவர, அவர்கள் நாம் பேசும் போது அவர்கள் நம் வாய் அசைவுகளை உற்றுக் கவனித்து, நாம் செய்வதைக் குழந்தைகளும் பார்த்துச் செய்வார்கள், கற்றுக் கொள்வார்கள். கைக்குழந்தைகளிடம் பேசும் பொழுது நாம், அவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதை வர்ணித்து அவர்களையும் அந்த செயலுடன் இணைத்துக் கொள்வது போல் பேசலாம். நம் வாழ்க்கையைப் பற்றியோ அல்ல தெரிந்த கதையோ சொல்லலாம், சின்ன சின்னப் பாட்டுப் பாடலாம். 

  அவர்களின் ஒன்றரை வயதில் அக்கம்பக்கத்தில் இருக்கும் பெரிய படங்கள், அல்லது புத்தகங்களில் இருக்கும் படங்களைக் காட்டி அவற்றைப் பற்றிப் பேசலாம். இவ்வாறு பேசுவதில் நாம் கற்றுக் கொடுப்பதைத் தவிர, அவர்களுடன் ஆழமான பந்தத்தை உருவாக்குகிறோம். 

  ஒன்றை மனதில் வைத்து கொள்ள வேண்டும், குழந்தைகள் மழலைப் பேச்சில் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் நாம் அவர்களுக்கு எப்போதும் மழலைப் பேச்சில் பதில் சொன்னால் தானும் அப்படித் தான் பேச வேண்டும் என்று குழந்தை பழகிக்கொள்ள, அதுவே வளர வளர பிரச்சினை ஆகலாம். 

  உணவு 

  உபயோகிக்கும் பொருட்களைப் போலத் தான் உணவின் அறிமுகம், அவற்றைப் பழக்கமாக்குவதும். பிறந்த பின் தாய்ப்பால் மட்டுமே அவர்களின் உணவாகும். அத்துடன் ஊட்டச் சத்தை சேர்க்க ஆரம்பிக்கும் மாதங்களில் ஒவ்வொரு சுவையைக் கூட்டுவதால் மெதுவாக பல ஆகாரங்களைச் சேர்க்கிறோம், கூடவே பல சுவைகளையும், தன்மைகளையும் அறிமுகப் படுத்துகிறோம். 

  ஊட்டச் சத்துக்களைத் தரும் போது, அதைப் பற்றிச் சொல்லி அதன் சுவையை ஊட்டுபவரும் சப்புக்கொட்டி ஊட்டி விட்டால் குழந்தைகளுக்கு ஆர்வம் உண்டாகும். இது என்ன என்ற ஆர்வத்தில் சாப்பிட வைக்கலாம். நாமும் குஷியாக இருந்தால் சாப்பிடுகையில் உறவு மேம்படும், அதை ஒரு சந்தோஷமான நேரம் எனக் குழந்தைகள் கருதுவார்கள். 

  நம் கலாச்சாரத்தில் குழந்தையை மடியில் வைத்துச் சாப்பிட ஊக்குவிப்பதுண்டு. குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டிவிட, அவர்கள் நாக்கு நுனியில் கொஞ்சமாகத் தடவி அந்த ருசியை அறிமுகப்படுத்திடலாம். பல தன்மைகள், சுவைகள் உள்ள உணவு வகைகள் வாயின் பல பாகத்தை வளர்க்கச் செய்யும். 

  ஊட்டி விடுவதிலிருந்து குழந்தைகள் தானாக விரல்களில் அள்ளி எடுத்துச் சாப்பிடுவது என்பதை ஊக்க விக்க வேண்டும்.

  ஒழுங்கு முறைகள் அமைத்தல்

  பல புலன்களை உபயோகிப்பது பல வளர்ச்சிகளின் அஸ்திவாரம். அதே போல், எதை எப்படிச் செய்வது, எது செய்யக் கூடாதது  என்பதற்கு வழிமுறைகளை அமைத்து, அவற்றை அனுசரிக்க வேண்டும், செய்யாவிட்டால் அதற்கு விளைவுகள் உண்டு என்ற அறிதல்தான் ஒழுக்கத்தின் அடிக்கல். இதை முதலிலிருந்தே ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு நாம் தெளிவாக எடுத்துச் சொன்னால் ஒழுக்கத்தை உண்டாக்க முடியும். உதாரணத்திற்கு நான்கு ஐந்து மாதக் குழந்தை பசியில் அழ ஆரம்பிக்க, நாம் தயார்ப் படுத்திக் கொண்டு உணவு கொடுக்க சில நிமிடங்கள் ஆகும் பொழுது, அவர்களுக்கு நாம் தயார் செய்வதைப் பற்றி அன்பாக எடுத்துச் சொல்லாம். குழந்தையும் நம்முடன் ஒத்துழைக்கும். 

  ஒரு எட்டு மாத குழந்தையின் செயல்பாட்டை எடுத்துக் கொள்ளலாம். அவர்களை நாம் தூக்கி வைத்துக் கொண்டதும் அவர்கள் சில சமயம் நம்மைத் தாடையில் அடிப்பார்கள், நம்  மூக்குக் கண்ணாடி, கைப்பேசி, கழுத்துச் சங்கிலி இவற்றை எடுக்க முயல்வார்கள். பல முறை முயன்ற பின் எடுக்க முடியும் எனத் தெரிந்ததும் திரும்பத் திரும்பச் செய்ய முயல்வார்கள். மேல் பகுதியில் சொன்னது போல் இது இயல்பு, நல்லது, அவர்களின் விரல் நுனிகளை வளர்க்க உதவும். அத்துடன் கைகளின் பிடிப்பும் மேம்படும். இதுவெல்லாம் வளரும் குழந்தைகள் தாங்களாக உடைகளை அணிய, எழுத எனப் பல நன்மைகளுக்கு அடிக்கல். 

  இதனால் இந்த நடத்தைகள் வரவேற்கப்பட வேண்டியவை, அதே சமயத்தில் செய்வது சரியல்ல என்பதையும் நாம் தெரிவிக்க வேண்டும். சில முறை செய்த பிறகு குழந்தை தான் கற்றுக் கொண்டோம் எனத் தெரிந்ததும் வெகு வேகமாகச் செய்ய ஆரம்பிக்கலாம். சில சமயம் கூடவே குலுங்கக் குலுங்கச் சிரித்துக் கொண்டே விளையாட்டாகச் செய்யலாம். இதுவும் நல்லதுதான், உறவை வளர்க்கும். இந்த தருணத்தில் நாமும் விளையாட்டாகச் சிணுங்கலாம், அல்லது குழந்தைக்கு "ம்ம்" என்று சொல்லி நிறுத்தச் சொல்ல ஆரம்பிக்கலாம், அடுத்தாக "ம்ம் வலிக்கிறது" என்றபடி முகபாவத்தில் அதைக் காட்டலாம். சில முறைகளுக்குப் பின்பு குழந்தையை நேருக்கு நேர் பார்த்து, "ப்ளீஸ் வலிக்கிறது, நோ" எனச் சொல்லலாம். சொல்லும் போது சிரித்துச் சொன்னால் அதை விளையாட்டு என்றே குழந்தை எண்ணும், கம்பீரமாகச் சொல்ல வேண்டும். நம் சொல்லும் உடல் மொழியும் ஒன்றிணைந்தால் நிறுத்தி விடுவார்கள். இப்படிச் செய்து வேண்டாத நடத்தைகள் நீடிக்காமல் நிறுத்தினால் அது பிற்கால ஒழுங்குமுறைகளுக்கு அஸ்திவாரமாக அமையும்  

   குழந்தை முதலில் பொருட்களை வீசி எறிவது அந்த வயதின் கற்றுக்கொள்ளும் விதமாகும். பதினெட்டு மாதத்திலிருந்து மூன்று வயதுவரை குழந்தைகள் தங்கள் ஃபைன் மோட்டார் (fine motor skills) செயல்திறன்களை வளர்த்து, அதை நன்றாக்குவார்கள்.  இந்த காலகட்டத்தில் பொருளை விரல்களால் எடுத்து-பிடித்து-எறிவது என்ற ஒவ்வொன்றையும் செய்ய, சரியாகச் செய்ய வரும். மேலே பழக்க வழக்கம் பற்றிச் சொன்னது போல் பலமுறை செய்து பார்ப்பார்கள். 

  இந்த எடுத்து-பிடித்து-எறிவதில் குழந்தைகளின் சதைகள் மற்றும் மிக முக்கியமான கை-கண் இணைந்து வேலை செய்வதாகும். இப்போது பயில வாழ்நாள் முழுவதற்கும் உபயோகமாகிறது. அதற்காக இந்தச் செயல் மிக அவசியமாகும். ஒரு விதத்தில் இதில் உடல் வளர்ப்பை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு முன்னேற்றத்தையும் நாம் கைதட்டிச் சிறப்பிக்கும் பொழுது, அங்கு நடப்பதில் நமக்கு உடன்பாடு உண்டு என்பதைத் தெரிவிக்கிறோம். 

  குழந்தைகள் தூக்கி எறியும் பொருட்களை மறுபடி எடுத்து அதன் இடத்தில் வைக்கும் பழக்கத்தையும் அவர்களுக்கு முதலிலிருந்தே சொல்லித் தரலாம். முதலில் கூட இருப்பவர்கள் அதை எடுத்து வைக்க வேண்டும். குழந்தை இதைப் பார்க்கும், தானும் செய்ய முயலும். நாம் குழந்தைகளை இப்படிச் செய்ய வாய்ப்புத் தரவில்லை என்றால் அதைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். 

  எறிவதை, தூக்கிப் போடுவதைச் செய்த பின், கூட இருப்பவர்கள் ஒன்றும் சொல்லாமல் இருந்தால் செய்வது தவறு என்று கற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படிச் செய்ததை இதுவரை எல்லோரும் கைதட்டி ஊக்க விக்க, அதையே செய்வது சரி என்றே எண்ணுவார்கள். பெரியவர்கள் தான் அந்த ஒழுக்கத்தின் கோட்டைக் கிழிக்க வேண்டும். 

  சில சமயம் விட்டெறியும் பொழுது பொருட்கள் உடையவும் செய்யும். உடைப்பதை "குழந்தை தானே, போகட்டும்" என்று தட்டிக் கழித்து விடுவோம். முதலில் குழந்தை சிறு வயதாக இருப்பதாகப் பெற்றோர் தட்டிக் கழித்து விடுவார்கள். பிற்காலத்தில் திடீரென அவர்கள் டிவி முன் உட்கார்ந்து சாப்பிட்டாலோ, தங்கள் பொருட்களை அதன் இடத்தில் வைக்காமல் விட்டாலோ, 'இவ்வளவு வயசு ஆகியும் இதுக் கூடவா தெரியலை" என்பதும் உண்டு. நம்மில் பலருக்குக் குழந்தைகள் நன்றாக வளர்ந்த பின்னரே அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம், ஆனால் அதன் அஸ்திவாரம் அந்த சிறு வயதில் தான். இரண்டு வயதிலேயே எறிந்தால், உதைத்தால் அது சரியல்ல என்பதை ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டும், சில மாதங்களுக்குப் பின் கண்டிக்க வேண்டும், பின்னர் ஏதேனும் விளைவுகள் ஏற்படுத்த வேண்டும்.  இதைப் பற்றி அடுத்த வாரம் மேலும் பேசலாம்.

  ஆக வீடும், குழந்தைகளைப் பராமரிக்கும் மற்ற இடங்களும் அமைக்க வேண்டிய சூழல்: 

  • உடல்-மனம்-மூளை வளர்வதற்கு வெவ்வேறு ஊக்குவிக்கும் அனுபவங்கள் ஏற்படும்படி இருக்க வேண்டும்.

  • குழந்தைகளுக்குத் தானாகச் செயல்பட இடம், நேரம், தர வேண்டும்.

  • பெற்றோரோ, காப்போரோ தானே எல்லாம் செய்து தரக் கூடாது, சிறு சிறு வேலைகளில் குழந்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • ஐம்புலன்களுக்கு ஏற்ற பொருட்கள் ஸ்பரிசித்து, உணர்ந்து, அனுபவிக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

  • செயல்கள் வழிமுறைகளை மீறினால் அது சரியல்ல என்பதைப் படிப்படியாகப் புரிய வைக்க வேண்டும்.

  மிகச்சிறந்ததைப் பெற,

  மிகச்சிறந்ததைக் கொடு!

  மேலும் பார்ப்போம்…..

  மனநலம் மற்றும் கல்வி நிபுணர்  மாலதி சுவாமிநாதன்

  malathiswami@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai