கர்நாடக சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல்?

பெங்களூர், ஜூலை 17: கர்நாடக சட்டப்பேரவைக்கு 2013-ம் ஆண்டில் நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. 2004-ம் ஆண்டு நடந்த கர்நாடக ச
Updated on
2 min read

பெங்களூர், ஜூலை 17: கர்நாடக சட்டப்பேரவைக்கு 2013-ம் ஆண்டில் நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

2004-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவையில் முதல்முறையாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து தலா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும் ஒப்பந்தத்துக்கு இணங்க காங்கிரஸ் -மஜத கூட்டணி அரசு அமைத்தது. இது அந்த மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்க வழிவகுத்தது. அன்றைய முதல்வர் தரம்சிங்குக்கும், மஜத தேசிய தலைவர் தேவகெüடாவுக்கும் இடையே அரசு நிர்வாகம் தொடர்பாக அடிக்கடி சச்சரவு இருந்துவந்தது.

இந்நிலையில், எடியூரப்பா, தேவகெüடா மகன் குமாரசாமியைச் சந்தித்ததன் விளைவாக மஜத-பாஜக கூட்டணி ஆட்சி மலர்ந்தது. தலா 20 மாதங்கள் ஆட்சி நடத்த ஒப்பந்தம் செய்துகொண்டு குமாரசாமி முதல்வராகவும், எடியூரப்பா துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். ஆனால், 20-வது மாதத்தின் முடிவில் ஆட்சியை பாஜகவுக்கு கைமாற்றிக் கொடுக்க தந்தை தேவகெüடாவின் நிர்பந்தம் காரணமாக குமாரசாமி மறுத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயணித்த எடியூரப்பா, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக மஜதவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். அதுவரை 20-30 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுவந்த பா.ஜ.க.வுக்கு எதிர்பாராத அனுதாப அலை வீசியது. இதனால் 2008-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 224 இடங்களில் 110 தொகுதிகளைக் கைப்பற்றி தென்னிந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது.

புதிய ஆட்சி நடத்தத் தொடங்கிய எடியூரப்பாவுக்கு, பதவியேற்ற நாள் முதல் அடுத்தடுத்து பிரச்னைகள் ஏற்பட்டன. விவசாயிகள் மீது போலீஸôர் துப்பாக்கிச்சூடு, மதக்கலவரம், உள்கட்சி கிளர்ச்சி, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளுடன் ஆட்சியை நடத்திவந்தார் எடியூரப்பா.

இந்நிலையில், எடியூரப்பா மீது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மகன்கள், மகள்களுக்கு முறைகேடாக வீட்டுமனை ஒதுக்கியது, அரசு கையகப்படுத்திய நிலத்தை அதிலிருந்து விடுவித்து அதற்காக லஞ்சம் பெற்றது போன்ற பல்வேறு மோசடிகளை குமாரசாமி ஆதாரங்களுடன் வெளியிட்டார். இதனால் அரசியல்ரீதியாக எடியூரப்பா நிலைகுலைந்து போனார். எடியூரப்பாவுக்கு எதிராக தேசிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கை உயர்த்திய எடியூரப்பாவாலேயே அது சரியத் தொடங்கியதும், கட்சியின் தேசியத் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவற்றிலிருந்து மீள அதிரடியாக விவசாயிகளுக்கு ஒரு சதவீத வட்டியில் கடனுதவி, விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை, சட்டவிரோத சுரங்கத்துக்கு எதிராக இரும்புத்தாது ஏற்றுமதிக்குத் தடை என்று பலப்பல திட்டங்களை அறிவித்தாலும், பாஜகவின் செல்வாக்கை உயர்த்த முடியாமல் எடியூரப்பா திணறிவருகிறார்.

சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பான லோக் அயுக்தா இறுதி அறிக்கை, நிலமோசடி தொடர்பான நீதிமன்ற விசாரணை, எதிர்க்கட்சிகளின் பிரசாரம் ஆகியவற்றால் பாஜக திகைத்துப் போயுள்ளது. இவற்றைச் சமாளிப்பது குறித்து விவாதிக்க ஹூப்ளியில் பாஜகவின் செயற்குழு கூட்டம் இரு தினங்கள் நடந்தது. இதில் 2013-க்கு முன்பாகவே சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாஜகவில் நிலவும் உள்கட்சிப் பூசலைச் சமாளிக்க சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவது அவசியம் என்று பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்குப் போதுமான செல்வாக்கு மக்களிடையே காணப்படாத இந்நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது பாஜக கட்சிக்கு சாதகமாக அமையும் என்று சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சி மேலிடத் தலைவர்களுடன் எடியூரப்பா தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆட்சிக்கலைப்பு கோரிக்கையை வலியுறுத்திவரும் காங்கிரஸ் மற்றும் மஜதவும், ஒருவேளை திடீரென சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் அவற்றைச் சமாளிப்பதற்கான வியூகங்களை அமைக்க கடந்த இரு தினங்களாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே அரசின் சாதனைகளை விளக்கி ஜூலை 31-ம் தேதி முதல் பிரசாரம் செய்ய பாஜகவும் திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த பிரசார வியூகங்களையும் வகுத்து வருகிறது.

கலங்கிய குட்டை போல கர்நாடக அரசியல் காட்சியளித்தாலும், மழை வரும் பின்னே கருமேகம் வரும் முன்னே என்பதுபோல, ஆளும்கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவற்றின் செயல்பாடுகள் சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்டியம் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com