/

மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள்: கபில் சிபலுக்கு சட்டம், சி.பி.ஜோஷிக்கு ரயில்வே

அஸ்வனி குமார், பவன் குமார் பன்சால் இருவரும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு சட்டத் துறையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.ஜோஷிக்கு ரயில்வே துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 மே 2013, 11:23 pm

அஸ்வனி குமார், பவன் குமார் பன்சால் இருவரும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு சட்டத் துறையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.ஜோஷிக்கு ரயில்வே துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

நீக்கத்தின் பின்னணி: ரயில்வே துறை தொடர்பான லஞ்சப் புகாரில் உறவினர் விஜய் சிங்லா சிக்கியதால் அத்துறை அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சால் பதவி நீக்கப்பட்டார். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான சிபிஐ அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கை காப்பாற்றும் நோக்கில் திருத்தியதான குற்றச்சாட்டில் அஸ்வனி குமாரும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டார். இந்த இரு நடவடிக்கைகளும் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன.

பன்சால், அஸ்வனி குமார் இருவரும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வழங்கினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின் பேரில்தான் இருவரும் நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக, அஸ்வனி குமாரும், பவன் குமார் பன்சாலும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனால் நாடாளுமன்றமும் தொடர்ந்து முடங்கியது நினைவுகூரத்தக்கது.

குடியரசுத் தலைவர் ஏற்பு: பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரையை ஏற்று, பன்சால், அஸ்வனி குமார் ஆகியோரது பதவி விலகல் கடிதங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார். அதேபோல, பிரதமரின் ஆலோசனைக்கு இணங்க கபில் சிபலுக்கு சட்ட இலாகாவையும், சி.பி. ஜோஷிக்கு ரயில்வே இலாகாவையும் கூடுதலாக வழங்கி பிரணாப் முகர்ஜி ஆணையிட்டார் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூத்த வழக்கறிஞரான கபில் சிபலுக்கு சட்டத் துறையை கவனிக்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல்முறையாக கிடைத்துள்ளது. முன்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய், பதவியை ராஜிநாமா செய்தபோது சி.பி.ஜோஷி அத்துறையை கூடுதல் பொறுப்பாக சில காலம் கவனித்துள்ளார்.

விரைவில் அமைச்சரவை மாற்றம்: இப்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்புகள் நிரந்தரமானதல்ல. மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் இருக்கும். அப்போது ரயில்வே, சட்ட அமைச்சர்கள் பொறுப்பு மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் சமீபத்தில் விலகினர். அவர்கள் வகித்து வந்த பதவிகளும், ஏற்கெனவே உள்ள அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாகவே வழங்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.