தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

ஐபிஎல்: தடை விதிக்க முடியாது: கடும் நடவடிக்கை எடுக்க பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துவிட்டது. எனினும் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம்

News image
Updated On :21 மே 2013, 8:07 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துவிட்டது. எனினும் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ரவி சவானி தலைமையிலான ஒரு நபர் கமிஷன் தனது அறிக்கையை 15 நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம், லக்னெüவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுதர்ஷ் அவஸ்தி கடந்த 20-ஆம் தேதி பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

"ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா ஆகிய கிரிக்கெட் வீரர்களும் மற்றும் இடைத்தரகர்களும், புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

விசாரணை முடிவடையும் வரை எஞ்சிய நான்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த  தடை விதிக்க வேண்டும்' என்று சுதர்ஷ் அவஸ்தி கேட்டுக் கொண்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற கோடை விடுமுறைக்கால அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், தீபக் மிஸ்ரா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது பிசிசிஐ சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ரஞ்சித் குமார், ராதா ரங்கசாமி ஆகியோர், "ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க ஒவ்வொரு அணியையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறினர்.

அந்த பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள், "பிசிசிஐயின் அலட்சியத்தால்தான் இந்த அளவுக்கு பிரச்னை விபரீதமாகியுள்ளது' என்று குறிப்பிட்டனர்.

"நாங்கள் கூட அதிர்ச்சியடைந்தோம்': மேலும், ""நீதிபதிகளான நாங்கள்கூட ஐபிஎல் போட்டிகளில் "ஸ்பாட் ஃபிக்ஸிங்' மோசடி நடைபெற்றதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தோம்.

"ஜென்டில்மேன்' விளையாட்டு என்ற சிறப்பை கிரிக்கெட் பெற்றுள்ளது. அந்த நன்மதிப்பு குலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பிசிசிஐயின் பொறுப்பாகும்.

இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது. நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஒழுங்குமுறை இல்லாத வகையில் ஐபிஎல் நடத்தப்படுவது தெளிவாக விளங்குகிறது.

அறிவியல்பூர்வமான உத்திகளைக் கையாண்டு முறைகேடுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் தப்பித்து விடக்கூடாது.

ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்: பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதைப் பார்த்துக் கொண்டு ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதனால், பொறுப்பை உணர்ந்து பிசிசிஐ செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்தி, மனு மீதான விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர். 

பிசிசிஐ அமைப்பை அரசே ஏற்க கோரிக்கை: இதற்கிடையே, "பிசிசிஐ அமைப்பை  அரசே ஏற்க உத்தரவிட வேண்டும்' என்று கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சமூக, மனிதாபிமான விவகாரங்களுக்கான சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு பொது நல மனு தாக்கல் செய்துள்ளது.

"ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ சரிவர நடத்துவதில்லை. அரசின் கட்டுப்பாட்டில் அந்த அமைப்பு இல்லை. அதனால், கிரிக்கெட் சூதாட்டத்தை சட்ட ரீதியாக தடுக்க இயலவில்லை.

எனவே, பிசிசிஐ அமைப்பை அரசே ஏற்க உத்தரவிட வேண்டும். ஐபிஎல் போட்டிகளுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.  மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி டி. முருகேசன் அடங்கிய அமர்வு, அதன் மீது புதன்கிழமை (மே 22) விசாரணை நடத்தப்படும் என்று கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.