நாடாளுமன்ற அதிகாரத்தில் நீதித்துறையின் தலையீடு அதிகரித்து வருவதாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20 நாள்கள் நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில் 4 நாள்கள் தனி நபர் மசோதா மீதான விவாதத்துக்கும், 16 நாள்கள் மற்ற மசோதாக்கள் தொடர்பான அலுவலை மேற்கொள்ளவும் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இக்கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் வியாழக்கிழமை கூட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மக்களவை அதிமுக தலைவர் எம். தம்பிதுரை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, "நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் காலத்தில் போலீஸ் காவலில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், இட ஒதுக்கீடு குறித்தும் அண்மையில் உச்ச நீதிமன்றம் கூறியது பற்றி விவாதிக்க வேண்டும்' என்று கூறினார்.
அதை ஆமோதித்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், "உறுப்பினர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் செயல்படுமானால் நாட்டை ஆளும் அதிகாரத்தையும் அதனிடமே வழங்கிவிடலாம். இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது' என்றார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு நாடாளுமன்றம் மூலம் உரிய பதில் அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒருமனதாக கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக, அமைச்சர் கமல்நாத் பேசுகையில், "கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
"உணவுப் பாதுகாப்பு மசோதா, ஓய்வூதியம், காப்பீட்டுத் துறைகள் சார்ந்த பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்' என்று மக்களவை முன்னவரும், மத்திய அமைச்சருமான சுஷீல் குமார் ஷிண்டே வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவற்றில் சில திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே அவற்றை ஆதரிப்போம்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல், அது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வதாக கூறப்படும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாஜக, இடதுசாரி கட்சிகள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
தெலங்கானா குறித்து விவாதம்: கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தெலங்கானா விவகாரம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதித்தனர்.
"மழைக்கால கூட்டத்தொடரிலேயே தெலங்கானா தனி மாநில மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என்று சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தினார்.
ஆனால், "ஆந்திர பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க அனுமதித்தால் தனி மாநில கோரிக்கைக்காக மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டுவரும் போராட்டங்கள் வலுப்பெறும். அதனால், நாட்டில் ஒற்றுமை பாதிக்கப்படும்' என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டி.கே. சிங்கும், அசோம் கண பரிஷத் தலைவர் வீரேந்திர பிரசாத் வைஸ்யாவும் கூறினர்.
14 மசோதாக்கள் அறிமுகம்: கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் கமல்நாத் கூறியது:
நீதித்துறை ஆணைய மசோதா உள்பட 44 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர, 14 மசோதாக்களை புதிதாக அறிமுகப்படுத்தவும் 6 மசோதாக்களை திரும்பப் பெறவும் திட்டமிட்டுள்ளோம். எவை முதலில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு விவாதித்து முன்னுரிமை வழங்கும் என்று கமல்நாத் கூறினார்.
வெளிப்படைத் தன்மை வேண்டும்: பாஜக விவாதம் வேண்டும்: திமுக, இந்திய கம்யூ.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், "அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும் வரை அவையை சுமுகமாக நடத்த குறுக்கீடாக இருக்க மாட்டோம். ஆனால், 16 நாள் அலுவலில் 44 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு காட்டும் ஆர்வம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' என்றார்.
"தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், இலங்கைத் தமிழர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். முக்கிய மசோதாக்களை, முழுமையாக விவாதம் நடத்திய பிறகே நிறைவேற்ற வேண்டும்', என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறினார்.
மக்களவை அதிமுக தலைவர் எம். தம்பிதுரை கூறுகையில், "நாட்டின் பொருளாதார நிலைமை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, இலங்கைத் தமிழர் விவகாரம், இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன்' என்றார்.
"தெலங்கானா, உணவுப் பாதுகாப்பு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை விவாதம் நடத்தி நிறைவேற்ற வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த 44 மசோதாக்களை அவசரமாக நிறைவேற்றக்கூடாது.
நாட்டின் பொருளாதார நிலைமை, தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கைத் தமிழர் விவகாரம், ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம், கச்சத்தீவு ஒப்பந்தம், காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்தியாவின் நிலை ஆகியவை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
ஏகே - 64 இணை தயாரிப்பாளராக அஜித்?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


