ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தேர்தலை மனதில் கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்த பாஜக முயற்சி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே, காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைப் பெரிதாக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 6:54 pm

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே, காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைப் பெரிதாக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விரைவாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். இது தொடர்பாக, ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியது:

மாநிலத்தில் வன்முறை பாதித்த இடங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களோ அல்லது பிரிவினைவாதக் குழுக்களின் தலைவர்களோ செல்ல அனுமதி அளிப்பதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு அனுமதி அளித்தால் அது நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.

வன்முறை பாதித்த இடங்களைப் பார்வையிடச் சென்ற பா.ஜ.க. தலைவர் அருண் ஜேட்லி, ஜம்மு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அனுமதி மறுக்கப்பட்ட தலைவர்களில் அவரும் அடங்குவார் என்றார் ஒமர் அப்துல்லா.

அரசியல் கட்சிகளின் பெயர் எதையும் குறிப்பிடாமல், பா.ஜ.க.வை மறைமுகமாகத் தாக்கும் வகையில் அவர் தொடர்ந்து கூறியதாவது:

கடந்த 2008இல் நிகழ்ந்த (அமர்நாத் கோயில் நிலப் பிரச்னை) சம்பவத்தைப் போன்ற சூழ்நிலையை மீண்டும் உருவாக்கும் நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. அதன் மூலம் தேர்தலுக்கு இந்தச் சம்பவங்களை அவர்கள் (பா.ஜ.க.) பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜுடன் நான் தொலைபேசி மூலம் பேசினேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்னையைப் பெரிதாக்காமல் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தினேன்.

கிஷ்த்வார் சம்பவத்தின் மூலம் மக்களின் உணர்வுகளை தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்தும் வகையில் அவர்களை (ஹிந்துக்கள்) ஒருங்கிணைக்கும் முயற்சியே இது. ஒரு சில சம்பவங்களைத் தவிர வேறு எங்கும் அக்கட்சியினரால் வெற்றி பெற இயலவில்லை.

ஆனாலும் அவர்கள் முயற்சிப்பதை நிறுத்தவில்லை, இல்லாவிட்டால் அவர்கள் ஜம்முவுக்கு விரைந்து வருவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அவர்கள் வேறு எங்காவது இப்படிச் செல்வார்களா?

இந்த ஆண்டிலேயே வேறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களை என்னால் கூற முடியும். அவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார்களா? ஆனால் ஜம்மு பகுதியை மட்டும் அவர்கள் தனிமைப்படுத்தி தனிக் கவனம் செலுத்துவது ஏன்?

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மனிதாபிமானம் இல்லாமல் மக்களின் உணர்வுகளை சுயநலத்துக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் அரசியல் ஆர்வத்துடன் வரும் கட்சியினரை அனுமதிக்க வேண்டாம்.

விரைவான நடவடிக்கை: கிஷ்த்வார் சம்பவம் குறித்த அரசின் விசாரணை அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது, அதற்கான காரணம் என்ன? நிர்வாகக் குறைபாடு ஏதேனும் உண்டா? குறைபாட்டுக்கு யார் காரணம்? எனக் கண்டறிந்து அவற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்துக்கு காரணமானவர்கள் மீதும் வழக்குப் பதிந்து அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமையை மேம்படுத்த உதவும் நோக்கத்தில் வரும் அரசியல்வாதிகளை வரவேற்கிறேன் என்றார் ஒமர் அப்துல்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.