தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டெல்டா பகுதிகளில் கர்நாடகம் ரகசிய ஆய்வு!

தமிழக டெல்டா பாசனப் பகுதிகளில் கர்நாடக அரசு தன்னிச்சையாக நியமித்த நிபுணர் குழுவினர் கடந்த 2-ம் தேதி ரகசிய ஆய்வு நடத்தியுள்ளனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2013, 10:39 pm

அ. சர்ஃப்ராஸ்

தமிழக டெல்டா பாசனப் பகுதிகளில் கர்நாடக அரசு தன்னிச்சையாக நியமித்த நிபுணர் குழுவினர் கடந்த 2-ம் தேதி ரகசிய ஆய்வு நடத்தியுள்ளனர். இந்தக் குழு நடத்திய ஆய்வின் முடிவு, டெல்டா பகுதிகளில் எடுத்த புகைப்படங்கள் உள்ளிட்டவை குறித்த ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு கடந்த 4-ம் தேதி தாக்கல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை தமிழக அரசுக்குத் தெரியாமல் நடந்ததா? இது குறித்து ஏன் உச்ச நீதிமன்ற விசாரணையின்போது தமிழக அரசு வியாழக்கிழமை முறையிடவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

இக் குழு, தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட 10 இடங்களில் சுமார் 200 கி.மீ. பார்வையிட்டு தமிழகத்தின் பயிர்களின் நிலையை ஆய்வு செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது. மேலும், செயற்கைக்கோள் உதவியுடன் தமிழகத்தின் டெல்டா பாசனப் பகுதிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் கூறியுள்ளது.

கடந்த 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுவரை குறிப்பிடாத சில விவரங்களை அந்த மாநிலத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் எடுத்துரைத்தார். அவர் வாதம் செய்வதற்கு இந்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கைதான் அடிப்படையாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் வழக்குரைஞர் வாதிடுகையில், ""தமிழகத்தில் 50 சதவீத சாகுபடி பரப்பில் அறுவடை முடிந்து விட்டது; 40 சதவீத பரப்பளவு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. 10 சதவீத சாகுபடி பரப்புக்கு மட்டும் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகையால் தமிழகம் கோரும் 12 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டியதில்லை'' என்று குறிப்பிட்டார். முன்னதாக, "தமிழக சம்பா சாகுபடிக்கு உடனடியாக 12 டிஎம்சி நீர் தேவை' என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 17-ம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், "ஒரு சொட்டு நீர் கூட தர இயலாது' என்று அப்போது கர்நாடகம் கூறியது.

இந்நிலையில்தான், மத்திய நிபுணர் குழுவை நியமித்து தமிழக டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு குழுவைக் கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தன்னிச்சையாக அனுப்பியுள்ளது.

காவிரி நீரைக் கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் தமிழகம் பாசனத்துக்காகப் பயன்படுத்தவில்லை என்பதால், தமிழக நிலையை ஆராய ஒரு குழுவை அனுப்பலாம் என கர்நாடக மாநில நீர்வளத் துறைச் செயலர் டி. சத்யமூர்த்தியை அந்த மாநில நீர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் எம். பங்காரஸ்வாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை ஏற்று பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாகராஜு, திம்மே கௌடா, காவிரி நீரவாரி நிகம் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் எம். சிவசாமி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழகத்தில் ஆய்வு செய்ய கர்நாடக அரசு நியமித்துள்ளது.

இந்தக் குழுவினர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள ஒசூரில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட காரை வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த கார் மூலம் பெங்களூரில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்குத் தஞ்சாவூர் சென்றது.

அதைத் தொடர்ந்து, தஞ்சாவூர்-நீடாமங்கலம்-திருவாரூர்-வேளாங்கண்ணி-பேரளம்-கொல்லுமாங்குடி-திருநாகேஸ்வரம்-சூரியனார்கோயில்-கும்பகோணம்-தஞ்சாவூர் என மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவு சென்று ஆய்வு செய்தது. செல்லும் வழியில் சில இடங்களில் வேளாண் நிலங்களில் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டிவைக்கப்பட்டிருப்பது, சில இடங்களில் அறுவடை முடிந்து நிலம் பண்படுத்தப்பட்டு வருவது, சில இடங்களில் புதிதாக நாற்று நடப்பட்டு வருவது ஆகியவற்றையும் இந்தக் குழு புகைப்படங்கள் எடுத்துள்ளது.

பின்னர், பிப்ரவரி 3-ம் தேதி மாலை 4 மணிக்கு இந்தக் குழு பெங்களூர் திரும்பியது. அங்கிருந்து 4-ம் தேதி அதிகாலையில் இந்தக் குழு தில்லி வந்து அறிக்கையை அளித்துள்ளது.

அதில், ""தமிழக டெல்டா பகுதிகளில் 40 சதவீத சாகுபடி பரப்பில் அறுவடை முடிந்துவிட்டது; 50 சதவீத பரப்பு அறுவடைக்குத் தயாராக உள்ளது; 10 சதவீத பரப்பு சாகுபடிக்குத் தயாராக உள்ளது; அதனால், அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்களுக்குத் தண்ணீர் தேவைப்படாது'' என்று இந்தக் குழு மதிப்பிட்டுள்ளது.

மேற்கண்ட விவரங்கள் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி தாக்கல் செய்த மனுவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.