சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

ஹிமாசலப் பிரதேச முதல்வர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு:11 இடங்களில் சிபிஐ சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஹிமாசலப் பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் (81) மீது சிபிஐ சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

Updated On :

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஹிமாசலப் பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் (81) மீது சிபிஐ சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிம்லா, தில்லியில் உள்ள அவரது வீடுகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக, சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்வர் வீரபத்ர சிங், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2009-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை மத்திய எஃகுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

அப்போது, அவர் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 6.1 கோடி ஈட்டியதாகத் தெரிகிறது. அந்தப் பணத்தை, அவர் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) முதலீடு செய்துள்ளார்.

எல்ஐசி முகவர் ஆனந்த் செளஹான் மூலமாக, வீரபத்ர சிங்கின் பெயரிலும், அவருடைய மனைவி பிரதீபா சிங்கின் பெயரிலும், மகன் விக்கிரமாதித்ய சிங்கின் பெயரிலும், மகள் அபராஜிதா சிங்கின் பெயரிலும் ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வீரபத்ர சிங் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், வீரபத்ர சிங்கின் மனைவி, மகன், மகள், எல்ஐசி முகவர் ஆனந்த் செளஹான் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பதவி விலக வேண்டும்:

சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஹிமாசலப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து வீரபத்ர சிங் உடனடியாக விலக வேண்டும் என்று பாஜகவின் மாநிலப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

வீட்டில் இல்லை: சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் அவரது வீட்டில் காணப்படவில்லை.

தனது இரண்டாவது மகளின் திருமண நிகழ்ச்சிக்காக, வீரபத்ர சிங்கும், அவரது குடும்பத்தினரும் வீட்டிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள அவரது வீட்டிலும், ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள 9 வெவ்வேறு இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கூட்டறிக்கை: முன்னதாக, வீரபத்ர சிங் அரசில் அங்கம் வகிக்கும் 11 அமைச்சர்களும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை சிம்லாவில் வெள்ளிக்கிழமை வெளியானது.

அந்த அறிக்கையில், "ஹிமாசலப் பிரதேச மாநிலத்திலுள்ள காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைப்பதற்காக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனிதத் தன்மையற்ற செயல்:காங்கிரஸ் கண்டனம்

ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து, "இது மனிதத் தன்மையற்ற செயல்' என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, காங்கிரஸ் கட்சியின் மீதும், அக்கட்சியின் தலைவர்கள் மீதும் மத்திய அரசு எந்த அளவுக்கு வெறுப்பை உமிழ்கிறது என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒர் உதாரணம் ஆகும்.

ஒருபுறம், வீரபத்ர சிங்கும், அவரது குடும்பத்தினரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோயிலுக்குச் செல்கின்றனர். மற்றொருபுறம், அவரது வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொள்கிறது.

இது மனிதத் தன்மையற்ற செயலாகும்; வெறுப்புணர்ச்சியின் உச்சகட்டமாகும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

வீரபத்ர சிங் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டதற்கு, அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோயும், உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கிஷோர் உபாத்யாயவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.