குளச்சல் துறைமுகத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்:மத்திய அமைச்சர் கட்கரி உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலை துறைமுகமாக மேம்படுத்தும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபடத் தெரிவித்தார்.
குளச்சல் துறைமுகத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்:மத்திய அமைச்சர் கட்கரி உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலை துறைமுகமாக மேம்படுத்தும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபடத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பத்திரிகை தகவல் மையத்தின் (பிஐபி) பிராந்திய பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

குளச்சலை துறைமுகமாக மேம்படுத்துவதற்காக, கேரளத்தின் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்துக்கு பல்வேறு விதமான முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருவதாகக் கூறப்படுவது தவறானது. மத்திய அரசைப் பொருத்தவரையில், குளச்சல், விழிஞ்ஞம் ஆகிய இரு துறைமுகத் திட்டங்களையும் நிறைவேற்றும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

நாட்டில் உள்ள அனைத்துத் துறைமுகங்களையும் நவீனமயமாக்கவும், கணினிமயமாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் 3 முக்கியத் துறைமுகங்கள் மூலமாக ரூ. 6,000 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இதேபோல, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும்.

சாலைப் போக்குவரத்தைப் பொருத்தவரையில், தற்போது 96,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. நாளொன்றுக்கு 100 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்காகும்.

தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் சுங்க வரி வசூலிப்பதை முற்றிலுமாக ரத்து செய்ய இயலாது. தரமான சாலைகளுக்காக, தங்களது பங்களிப்பாக சுங்க வரியைச் செலுத்துவதாக பொதுமக்கள் கருத வேண்டும் என்றார் அவர்.

கூடங்குளம் 2-ஆவது உலையில் மார்ச்சில் உற்பத்தி: இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலகம் மற்றும் அணுசக்தித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் பேசியதாவது:

கூடங்குளம் முதலாவது அணு உலையில் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காகவே மின் உற்பத்தி சில மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த அணு உலையில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது அந்த அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மார்ச் அல்லது ஏப்ரலில் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில், விமானப் போக்குவரத்துத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இத்தகைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்களிப்பு 90 சதவீதமாகும். எஞ்சிய 10 சதவீத நிதியை வடகிழக்கு மாநிலங்கள் அளிக்க வேண்டும். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் நிறைவு பெற்றதற்கான சான்றிதழ்களை தாக்கல் செய்யாமல், புதிய திட்டங்களுக்கு வடகிழக்கு மாநிலங்கள் நிதியுதவி கோருவதால் பிரச்னை எழுகிறது.

மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால், இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதத்தில் கேரளத்துக்கு அடுத்தபடியாக மிஸாரம் 98 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதேபோல, பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் சிக்கிம் மாநிலம் 22 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com