

நன்னடத்தை காரணமாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நாளை விடுவிக்கப்படவிருக்கும் நிலையில், அதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 257 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வாங்கி வைத்திருந்ததாக சஞ்சய் தத்தை போலீஸார் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்தனர். இதையடுத்து, எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட அவர் 18 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதாவது, முன்பு சிறைவாசம் அனுபவித்த 18 மாதங்கள் போக எஞ்சிய 42 மாதங்களுக்கு அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதன்படி, எரவாடா சிறையில் 2013ஆம் ஆண்டு அடைக்கப்பட்ட அவர், 2 முறை பரோலிலும், 2 முறை விடுமுறையிலும் வெளியே வந்தார். சிறைத் தண்டனை முடிவடைய இன்னமும் 100 நாள்களுக்கு மேல் மீதமிருக்கின்றன.
இந்நிலையில், சிறையில் நடந்து கொண்ட விதத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மகராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சஞ்சய் தத் நாளை (பிப்ரவரி 25) விடுதலை செய்யப்படுவார் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சஞ்சய் சித் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்காக கைது செய்யபப்பட்டுள்ள அநேகர் தங்களை விடுவிக்க கோரி மனு செய்துள்ள நிலையில் சஞ்சய் தத் எவ்வாறு விடுவிக்கப்படுகிறார். இது சட்டவிரோதமானது. அரசியல் நிர்பந்தம் காரணமாகவே சஞ்சய் தத் விடுவிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் நிதின் சாத்புடே என்பவர் இந்த பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.