

புது தில்லி: தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு அந்தமான் செல்லும் வழியில் மாயமான இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏன்-32 ரக விமானத்தின் விமானிகள் இருவருமே ஹரியானாவைச் சேர்ந்த இளம் வீரர்கள் என்று தெரிய வந்துள்ளது.
29 விமானப் படை வீரர்களுடன் 5 நாட்களுக்கு முன்பு மாயமான விமானத்தின் இரண்டு விமானிகளில் ஒருவர் ஹரியானாவைச் சேர்ந்த பங்கஜ் நன்டல் (25). மற்றொருவர் புஷ்பேந்தர் சிங் பதேஸ்ரா (26).
பங்கஜ் சென்னையில் பிஎஸ்ஸி ஏரோநாடிகல் என்ஜினியரிங் படித்தவர். கடந்த டிசம்பர் 2013ம் ஆண்டு இவர் இந்திய விமானப் படைக்குத் தேர்வானார். இவரது தந்தை இந்திய விமானப் படையின் முன்னாள் வீரர் ஆவார்.
தனது மகன் பங்கஜ் குறித்து தந்தை கிரிஷன் நன்டல் கூறுகையில், எனக்கு எனது மகனைப் பற்றி நன்கு தெரியும். விமானத்தையும், விமானத்தில் இருந்தவர்களையும் மீட்க, அவனால் முடிந்த அளவுக்கு அவன் போராடியிருப்பான். விமானத்தில் இருந்த அனைவரும் உயிரோடு திரும்பி வர வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று உருக்கத்தோடு கூறினார்.
மேலும், தனது மகன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஹோண்டா சிட்டி வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். கடவுள் என் மகனுக்கு இப்படி நிலையை ஏற்படுத்தியிருக்கக் கூடாது என்று கண்ணீரோடு பேசினார்.
மற்றொரு விமானி புஷ்பேந்தர் சிங் பதேஸ்ராவின் தந்தை அஞ்சல் சிங்கும் இந்திய விமானப் படை பணியாற்றி வருகிறார். புஷ்பேந்தர் சிங்கின் திருமணத்துக்காக நாங்கள் பெண் பார்த்துக் கொண்டிருந்த போது இதுபோன்ற சம்பவம் நடந்துவிட்டதே என்று அவரது உறவினர்கள் கண்ணீரோடு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.