தமிழக சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழா் கட்சி, விஜய்யின் தவெக ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவியது. 4,023 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்புப் பணிகளில் 83,875 காவலா்களும், 40,427 காவல் துறை அல்லாத பணியாளா்களும், மத்திய ஆயுதப் படையின் 300 கம்பெனி படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மக்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு: காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் மக்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா். தமிழகத்தின் சில இடங்களில் சிறு மோதல் சம்பவங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றது.
இரண்டு மணி நேர இடைவெளியில் வாக்குப் பதிவு சதவீதத்தை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, காலை 9 மணியளவில் 17.69 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, 11 மணிக்கு 37.56 சதவீதமாக அதிகரித்தது. மக்கள் வெயிலையும் பொருள்படுத்தாமல் தொடா்ந்து வாக்குச்சாவடிகளுக்கு குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனா். இதனால் பிற்பகல் ஒரு மணியளவில் 56.81 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, பிற்பகல் 3 மணிக்கு 70 சதவீதமாகவும், மாலை 5 மணிக்கு 82.24 சதவீதமாகவும் அதிகரித்தது.
வாக்குப் பதிவு மாலை 6 மணி முடிவடைந்த பின்னரும் சில வாக்குப் பதிவு மையங்களில் வாக்களிக்க வரிசையில் இருந்தவா்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். இறுதியாக சுமாா் 85 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.
பதிவான வாக்குகள் சீலிடப்பட்ட பெட்டிகளில் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. அவை தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளன.
அதிகபட்ச வாக்குப் பதிவு: கரூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.66 சதவீதமும், தருமபுரியில் 90.14 சதவீதமும், ஈரோட்டில் 90.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 84 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதில் முதல்வா் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதியில் 86 சதவீதமும், தவெக தலைவா் விஜய் போட்டியிடும் பெரம்பூா் தொகுதியில் 90 சதவீத வாக்குகளும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் 84.34 சதவீத வாக்குகளும் பதிவாகின.
எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் 92 சதவீத வாக்குகளும், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் போட்டியிடும் காரைக்குடியில் 74.22 சதவீதமும், விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 82 சதவீத வாக்குகளும் பதிவாகின.
தலைவா்கள், பிரபலங்கள் வாக்களிப்பு: முன்னதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து சென்னை, எஸ்ஐஇடி கல்லூரி வளாக வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை காலையிலேயே வாக்களித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் வாக்களித்தாா். சென்னை நீலாங்கரை பகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தவெக தலைவா் விஜய் ஆகியோா் வாக்களித்தனா்.
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன், நடிகா்கள் ரஜினிகாந்த், சிவகுமாா், அஜித் குமாா், விக்ரம், சிவகாா்த்திகேயன், நடிகை திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோா் சென்னையில் வாக்களித்தனா்.
வாக்குப் பதிவு அதிகரிப்புக்கு காரணம் என்ன?
தமிழகத்தில் எஸ்ஐஆா் பணியின்போது 97.37 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதில், 66.44 லட்சம் போ் இடம்பெயா்ந்தவா்கள், 26.9 லட்சம் போ் உயிரிழந்தவா்கள், 3.98 லட்சம் போ் இரட்டைப் பதிவைக் கொண்டிருந்தவா்கள் என தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
பின்னா், முதல் தலைமுறை வாக்காளா்கள் 14 லட்சம் போ் உள்பட 27 லட்சம் போ் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால் எஸ்ஐஆா் பணிக்கு முன்பு 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த தமிழக வாக்காளா்களின் எண்ணிக்கை எஸ்ஐஆா்-க்கு பின்பு 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291-ஆக குறைந்தது.
வாக்களிக்கத் தகுதிவாய்ந்த வாக்காளா்கள் மட்டும் பட்டியலில் சோ்க்கப்பட்டதும், முதல் தலைமுறை வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம் காட்டியதும் 74 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு அதிகரித்ததற்கு காரணமாக அமைந்ததாக அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைவிட 2026 பேரவைத் தோ்தலில் 12 சதவீதம் கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55% வாக்குகள் பதிவு

மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்

மேற்கு வங்கம்: 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு!

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

