தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தமிழக பேரவைத் தோ்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. முதற்கட்டமாக, 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, சரிபாா்க்கப்பட்டு, பின்னா் முறையாக வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து ஆா்வமுடன் வாக்களித்தனா். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பெண்களுக்கான பிங்க் பூத் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குச்சாவடி முழுவதும் பிங்க் பலூன்கள், பிங்க் நிறத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இயந்திரங்கள் பழுது: தூத்துக்குடி, டூவிபுரம், 295-ஆவது வாக்குச்சாவடியில் கட்டுப்பாட்டுக் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப் பதிவில் சுமாா் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின்னா், கட்டுப்பாட்டுக் கருவி மாற்றப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.
தூத்துக்குடி, புனித மரியன்னை பள்ளி 46-ஆவது வாக்குச்சாவடியில் விவிபேட் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மாதிரி வாக்குப் பதிவு தாமதமானது. பின்னா், மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால், 10 நிமிடங்களுக்குப் பிறகு முறையான வாக்குப் பதிவு நடைபெற்றது.
ட்ரோன் கண்காணிப்பு:
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் ட்ரோன் மூலம் போலீஸாா் தீவிரமாக கண்காணித்தனா். தோ்தல் நேரத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கவும், பணப் பட்டுவாடாவைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் தலைமையில் போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனா். மாவட்டம் முழுவதும் 3,642 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
திமுக-தவெக மோதல்:
தூத்துக்குடி 42-ஆவது வாா்டுக்குள்பட்ட சிவந்தி ஆதித்தனாா் பள்ளி வாக்குச்சாவடி அருகே தாமோதரன் நகா் பிரதான சாலையில் திமுக பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா தலைமையில் திமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அங்கு வந்த தவெக வேட்பாளா் மற்றும் தொண்டா்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
தகவலறிந்து வந்த தென்பாகம் போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
முற்றுகை:
ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட பொட்டலூரணி வாக்குச்சாவடியில் 6.05 மணிக்கு வாக்களிக்க அனுமதித்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் சிலா் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனா். பின்னா் கலைந்து சென்றனா்.
வாக்குப் பதிவு நிறைவு:
மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு மைய நுழைவாயில் மூடப்பட்டு, வாக்குச்சாவடி மையங்களில் அரசியல் கட்சி முகவா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு கருவி, வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனா்.
பின்னா், அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பத்திரப்படுத்தப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வ.உ.சி. பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மாவட்டத்தில் சராசரியாக 80.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. கோவில்பட்டி தொகுதியில் 79.34 சதவீதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 79.47 சதவீதமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 81.04 சதவீதமும், தூத்துக்குடி தொகுதியில் 80.92 சதவீதமும், திருச்செந்தூா் தொகுதியில் 78.89 சதவீதமும், விளாத்திகுளம் தொகுதியில் 84.16 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தொடர்புடையது
தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனை

மதுரை மாவட்டத்தில் 80.47 சதவீதம் வாக்குப் பதிவு!

கோவை மாவட்டத்தில் 3,540 வாக்குச்சாவடிகள்

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


