
மக்களவையின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பூர்ணோ அகிடோக் சங்மா, மாரடைப்பு காரணமாக தில்லியில் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது வயது 68.
அவரது மறைவையொட்டி, மக்களவை 8ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சங்மாவின் நினைவைப் போற்றும் வகையில் மாநிலங்களவையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி, மேகாலய மாநிலம், மேற்கு காரோமலை மாவட்டத்தில் உள்ள சபாஹாட்டி என்ற கிராமத்தில் பிறந்த சங்மா, கடந்த 1977ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேகாலயத்தின் துரா தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் ஒன்பது முறை எம்.பி.யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம்பெற்றிருந்தார்.
மேலும், கடந்த 1988 முதல் 1990ஆம் ஆண்டு வரை மேகாலய மாநில முதல்வராகவும், 1991 வரை அந்த மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் சங்மா இருந்துள்ளார்.
கடந்த 1996-இல் பதினோராவது மக்களவை அமைந்தபோது, சங்மா மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால், இரண்டு ஆண்டுகளில் மக்களவை கலைக்கப்பட்டதால், பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் பிறந்த சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சரத் பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சங்மாவும் கடந்த 1999இல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். மூவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், பிரணாப் முகர்ஜியை எதிர்த்து சங்மா போட்டியிட்டார். போட்டியில் இருந்து விலக மறுத்ததால், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு, அவருக்கு பாஜக அதிகாரப்பூர்வமாக ஆதரவளித்தது. எனினும், அந்தத் தேர்தலில் சங்மா தோல்வியடைந்தார்.
பிரணாப் முகர்ஜி இரங்கல்: சங்மாவின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், திறமை வாய்ந்த நிர்வாகியுமான சங்மா, பல்வேறு துறைகளில் நாட்டுக்குத் தொண்டாற்றியுள்ளார்.
அவர் மேகாலய முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைவதற்குக் காரணமாக இருந்தார். மக்களவைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் தன்னிகரற்ற வகையில் பணியாற்றியுள்ளார். அவரது மறைவின் மூலம், பன்முகத்தன்மை கொண்ட, தலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






