நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூய்மையில் முன்மாதிரி நகரமாகும் ஹரித்வார்!

ஆன்மிக அருளைப் பெற நாடிச் செல்லும் புண்ணிய நகரங்களில் சுகாதார, குடிநீர், மருத்துவ வசதிகளை பக்தர்களுக்கு திருப்தியான வகையில் அளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகவே இன்றும் இருந்து வருவதை பல இடங்களில் காண முடிகிறது.

News image
Updated On :13 மார்ச் 2016, 6:46 pm

வே.சுந்தரேஸ்வரன்

ஆன்மிக அருளைப் பெற நாடிச் செல்லும் புண்ணிய நகரங்களில் சுகாதார, குடிநீர், மருத்துவ வசதிகளை பக்தர்களுக்கு திருப்தியான வகையில் அளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகவே இன்றும் இருந்து வருவதை பல இடங்களில் காண முடிகிறது. ஆனால், அர்த்த கும்ப மேளா நடைபெற்று வரும் உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் குப்பைகள் இல்லாத நகரம் என்று பெருமைப்படும் அளவுக்கு சுகாதார, குடிநீர் வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கிய அர்த்த கும்ப மேளா வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையொட்டி, ஹரித்வார் நகரின் ஊடாக பாய்ந்தோடும் கங்கையில் புனித நீராடுவதற்கு

வசதியாக நதியின் இரு மருங்கிலும் உள்ள படித்துறைகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் குளிப்பதற்கு வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

யாத்ரீகர்கள் நடந்து செல்லும் சாலை, நடைபாதைகள் ஆகியவற்றில் நடமாடும் கழிப்பிடங்கள், பைபர் பிளாஸ்டிக் கழிப்பறைகள், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்கு மரத் தடுப்புகள், பாதுகாப்புப் படையினர், ஊர்க்காவல் படையினர், மருத்துவர்கள், தீயணைப்புப் படையினர், யாத்ரீகர்கள், அதிகாரிகள் என சுமார் 15 ஆயிரம் பேர் தங்குவதற்கு தங்குமிடக் கூடாரங்கள், தாற்காலிக மருத்துவக் கூடாரங்கள் என அனைத்தும் திட்டமிடப்பட்டு கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளன.

ஹரித்வார் கங்கையின் ஹர்கி பேடி, பிரம்ம குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கும்ப நிகழ்வுகளின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை சமாளிக்கும் வகையில் சில மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்ட நான்கு இரும்புப் பாலங்கள் உள்பட பல ஏற்பாடுகள் யாத்ரீகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக அமைந்துள்ளன. குறிப்பாக தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நதிக்கரை, தங்குமிடங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1.70 கோடி பேர் வருகை: ஹரித்வார் நகரில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பராமரிப்புப் பணிகள் குறித்து விளக்குகிறார் தமிழகத்தைச் சேர்ந்தவரும் அர்த்த கும்ப மேளா அதிகாரியுமான எஸ்.ஏ. முருகேசன் ஐ.ஏ.எஸ்.:

ஹரித்வார் அர்த்த கும்ப மேளா ஏற்பாடுகள் ஓராண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரகண்ட் அரசு ரூ.420 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. ஹரித்வார் நகருக்கு நான்கு திசைகளில் இருந்து வரும் சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பே வாகன நிறுத்துமிடங்கள், மருத்துவப் பிரிவு, கழிப்பிடம், தங்குமிட வசதிகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்கள் புனித நீராடும் பகுதிக்கு வருவதற்கு வசதியாக மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிப் பாதையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

200 நடமாடும் கழிப்பிட வாகனங்கள், பைபர் கழிப்பறைகள் என நகரின் நாலாபுறமும் சுமார் 3,500 கழிப்பறைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குப்பைத் தொட்டிகள் தேவையான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயல்பணி ஒப்படைப்பு மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புனித நீராடும் பகுதிகளில் நெரிசல் ஏற்படாத வகையில் நதியின் குறுக்கே நான்கு இரும்புப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார், பாதுகாப்புப் படையினர் 10 ஆயிரம் பேர், பணியாளர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்குவதற்குத் தேவையான தங்கும் கூடார வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 1.70 கோடி பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். வரும் மாதத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

கும்ப மேளா அதிகாரி முருகேசன் தலைமையில் கோட்டாட்சியர் வந்தனா ஐ.ஏ.எஸ். உதவி ஆட்சியர் யுக்தா மிஸ்ரா மற்றும் மயூர் தீட்சித் உள்ளிட்ட அதிகாரிகள் விழா நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சி அளிக்கிறது!

கங்கா சேவக் தளம் அமைப்பின் செயலர் நிதின் சாஸ்திரி கூறுகையில், "கடந்த முறையைக் காட்டிலும், இந்தமுறை அர்த்த கும்ப மேளாவுக்கான ஏற்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. குப்பை அகற்றல், தூய்மைப் பராமரிப்பு, பக்தர்களை ஒழுங்குபடுத்துவது என பல்வேறு விஷயங்களிலும் கும்ப மேளா நிர்வாகத்தினர் மிகுந்த அக்கறையை எடுத்துள்ளனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.