பெங்களூரு: விடுதலைக்கு முன்பு சென்னை மாகாணத்தில் அங்கம் வகித்த பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மண்டியா, மைசூரு தவிர, தாவணகெரே, சிவமொக்கா, தும்கூரு, சிக்கமகளூரு, மங்களூரு உள்பட பல பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்துள்ளனர்.
தமிழர்கள் குடியிருந்து வந்த பகுதிகளில் தாய்மொழியைக் கற்பதற்காக தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் தமிழ்க் குழந்தைகள் ஆர்வமாகப் படித்து வந்தனர். விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகள் அன்றைய மைசூரு மாநிலத்தில் (கர்நாடகம்) சேர்க்கப்பட்டன.
ஆனாலும், தமிழ்ப் பள்ளிகள் வழக்கம்போல இயங்க அனுமதிக்கப்பட்டன. இந்த காலக் கட்டத்தில் கர்நாடகத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளும், அவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்று வந்தனர். விடுதலைக்குப் பிறகு 35 ஆண்டுகள் எந்தவிதத் தடையும் இல்லாமல் தமிழ்வழிக் கல்வி எனப்படும் தமிழர்களின் தாய்மொழிக் கல்வி தொடர்ந்தது.
1956-இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, அன்றைய மைசூரு மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. கன்னடம் பயின்றால் மதிப்பெண் குறைவாகக் கிடைக்கும் என்று கருதி பெரும்பாலான மாணவர்கள், முதல் மொழியாக வடமொழி, இரண்டாம் மொழியாக ஆங்கிலம், மூன்றாம் மொழியாக இந்தி படிக்கத் தொடங்கினர்.
கன்னடம் படிக்காமலேயே கர்நாடகத்தில் முதுநிலைப் பட்டம் வரை படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதை எதிர்த்து கன்னட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, 1980-களில் மொழிக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக கன்னடப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.கே.கோகாக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையில் கன்னட மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், அதற்காகப் பள்ளிகளில் முதல் மொழியாக கன்னட மொழியைக் கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு கன்னடம் பேசாத மக்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இந்த நிலையில், கோகாக் குழு அறிக்கையைச் செயல்படுத்தக் கோரி, நடிகர் ராஜ்குமார் தலைமையில் போராட்டம் வெடித்தது. கோகாக் குழு அறிக்கைக்கு எதிராக தமிழர்கள், மராத்தியர்கள் நடத்திய போராட்டத்தைப் பொருள்படுத்தாது, அன்றைய குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அந்தக் குழு அறிக்கையை ஏற்றுக் கொண்டு முதல் மொழியாகக் கன்னட மொழியை அறிவித்தது.
கோகாக் குழு அறிக்கையைச் செயல்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டம் கன்னட மொழிக்கு ஆதரவானதே தவிர, தமிழ் மொழிக்கு எதிரானது அல்ல. ஆனால், அந்தக் குழு அறிக்கை செயல்படுத்தப்பட்டால் தமிழ் மொழிக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று அஞ்சி, தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்குப் பிறகும், தமிழ்க் குழந்தைகள் முதல் மொழியாக தமிழ், இரண்டாம் மொழியாக ஆங்கிலம், மூன்றாம் மொழியாகக் கன்னடம் பயில அனுமதிக்கப்பட்டனர். கன்னடர்கள் நடத்திய போராட்டம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, கர்நாடகத்தில் கன்னடம் படித்தால்தான் வேலை என்ற மாநில அரசின் அறிவிப்பை நம்பி, தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியைக் காட்டிலும் கன்னட மொழியைக் கற்பிக்க விரும்பினர்.
இதன் விளைவாக, கர்நாடகத்தில் செயல்பட்டு வந்த தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் வருகை குறைந்தது. மாணவர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தமிழ்ப் பள்ளிகளை கர்நாடக அரசு மூடிவிட்டது.
கர்நாடகத்தில் தமிழ் மொழிக்கு மீண்டும் ஊக்கம் தர முடியும். அதற்கான மருந்து தமிழக அரசிடம் மட்டுமே உள்ளது. கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளைக் காக்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதில் இதோ:
கர்நாடகத்தில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளைப் பாதுகாக்க தனி ஆணையம் அல்லது வாரியம் அமைத்தல் வேண்டும். கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு அளிக்க வேண்டும். குறிப்பாக, 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவர்களைக் கெளரவிக்கலாம். தமிழ் மொழியில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் முழுக் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளில் தேவைப்படும் தமிழாசிரியர்களை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கலாம். தமிழ்ப் பாட நூல்களை தமிழக அரசு வழங்கலாம். பிற மாநிலங்களில் தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு அளிக்கலாம்.
பிற மாநிலங்களில் பள்ளிப் படிப்பைப் பயின்று பட்டம் படிக்க தமிழகம் வந்தால், இலவசக் கல்வி வழங்கலாம். பிற மாநிலங்களில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதியைச் செய்து தர தனி நிதியம் உருவாக்கலாம்.
பிற மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளை தனியார் நடத்த நிதியுதவி வழங்கலாம். தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்க முடியாத அல்லது படிக்க இயலாத மாணவர்களுக்கு தமிழ் மன்றங்களை நிறுவி, தமிழ் கற்பிக்க தமிழக அரசு நிதி அளிக்கலாம்.
தமிழர் வாழுமிடங்களில் தமிழ் திருவிழாக்களை நடத்தி, நமது மொழி, கலை, பண்பாடு செழிக்க நிகழ்ச்சிகளை நடத்தலாம். அரசியல், மதம், ஜாதி சாராத தமிழ் மன்றங்கள் உருவாக்க முனைப்போடு செயல்படலாம். இவற்றை யார் முன்னெடுப்பது என்று ஆள் தேடுவதற்குப் பதிலாக, நமக்கு நாமே தமிழ் மீட்புப் பணியில் முனைந்து களமிறங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.