உத்தரப் பிரதேசத்தில் ரூ.36,359 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் 2.22 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
உத்தரப் பிரேதச சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின்போது 'ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என்ற வாக்குறுதியை பாஜக அளித்தது. இத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. மனோஜ் சின்ஹா, கேசவ பிரசாத் மௌர்யா ஆகிய இரு துணை முதல்வர்களும் அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில், ஆதித்யநாத் தலைமையில் மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த முடிவு எடுக்கப்படும் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப, ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை ரத்து செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. அரசு மதிப்பீட்டின்படி இந்தக் கடன் தள்ளுபடியால் 2.22 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் இம்முடிவால் அரசுக் கருவூலத்துக்கு ரூ.36,359 கோடி செலவாகும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தத் தள்ளுபடியில், 2.15 கோடி சிறு குறு விவசாயிகள் பெற்றிருந்த ரூ.30,729 கோடி கடன்,
7 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.5,630 கோடி கடன் ஆகியவை அடங்கும். தள்ளுபடி செய்யப்படும் ரூ.36,359 கோடிக்கு ஈடாக அதே மதிப்பிலான நிதியைத் திரட்டுவதற்கு 'கிசான் ராஹத்' பத்திரங்களை வெளியிட அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அரசிடம் உள்ள தகவல்களின்படி உத்தரப் பிரதேசத்தில் உள்ள 2.30 கோடி விவசாயிகளில் 2.15 கோடி பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் இயற்கைச் சீற்றங்களால் தங்கள் பயிர்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து ரூ.62,000 கோடி மதிப்பிலான கடன்களைப் பெற்றனர். இந்தச் சூழ்நிலையில், ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற உத்தரப்பிரதேச அரசின் முடிவானது அவர்களுக்கு பெரிய ஆறுதலை அளிக்கும் என்று கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேச விவசாயக் கடன் தள்ளுபடிக்கு நிதி உதவி செய்தால் மற்ற மாநில அரசுகளும் அதேபோன்ற கோரிக்கையை எழுப்பும் என்பதால், இத்திட்டத்துக்கு நிதியுதவி செய்ய முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரத்தில் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், இதுவரை விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவிக்கவில்லை. போதிய நிதி இல்லை என்று அம்மாநில அரசு தெரிவிக்கிறது.
மறுபுறம், நிதி நிலைமை மோசமாக இருந்தபோதிலும் பஞ்சாப் மாநில அரசு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
தேசிய அளவில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான கடன் தள்ளுபடி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கடந்த 2008-இல் அறிவிக்கப்பட்டதாகும். 5 கோடி விவசாயிகளுக்குப் பயனளிக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டத்தால் மத்திய அரசுக் கருவூலத்துக்கு ரூ.65,000 கோடி செலவானது.