குஜராத்தில் ராகுல் கார் மீது தாக்குதல்
குஜராத் மாநிலத்துக்கு மழை-வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


குஜராத் மாநிலத்துக்கு மழை-வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதுபோல், பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கருப்புக் கொடியுடன் வந்து போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாதியிலேயே தனது பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறும் நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது.
குஜராத்தில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பனஸ்கந்தா மாவட்டத்தில் மழை-வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்கு, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சென்றார்.
பனஸ்கந்தா மாவட்டம், லால் சௌக் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.
அப்போது கருப்புக் கொடியுடன் அப்பகுதியை முற்றுகையிட்ட சிலர், ராகுல் காந்தியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தியும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு ராகுல் காந்தி புறப்பட்டார்.
லால் சௌக்கில் இருந்து தானேராவில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு ராகுல் காந்தி காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ராகுல் காந்தி காயம் எதுவுமின்றி தப்பினார். எனினும், அவர் பயணித்த காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. ராகுலின் காரை பின்தொடர்ந்து வந்த சில கார்களும் கல்வீச்சில் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், ராகுல் காந்தி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தாரா தாலுகாவில் உள்ள ரூனி கிராமத்துக்கு சென்ற அவர், மக்களிடையே பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில், 'நரேந்திர மோடி ஆதரவு கோஷம், எனக்கு எதிரான கருப்பு கொடி, கல் வீச்சைக் கண்டு நான் பின்வாங்க மாட்டேன். குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்' என்றார். பிறகு, சுட்டுரையில் வெளியிட்ட பதிவிலும் இதே கருத்தையே ராகுல் வெளியிட்டிருந்தார்.
ஒருவர் கைது: ராகுல் காந்தியின் கார் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பனஸ்கந்தா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் நீரஜ் பட்குஜன் கூறுகையில், 'ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்' என்றார்.

தாக்குதல் நடத்தப்பட்டதால் காரின் உள்பகுதியில் சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள்.
ராஜஸ்தானில் சுற்றுப்பயணம்: இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பார்மர், ஜலோர், சிரோஹி, பாலி உள்ளிட்ட இடங்களை ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சில இடங்களில் போதிய ஏற்பாடுகளை மாநில பாஜக அரசு செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.
திட்டமிட்ட தாக்குதல்: காங்கிரஸ்
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆஸாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' ராகுல் காந்திக்கு காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தையும், பாஜக மற்றும் அக்கட்சியின் தொண்டர்களின் வன்முறை கலாசாரத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறோம். குஜராத் சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் பீதி கலந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே தாக்குதலுக்கான முக்கியக் காரணம் ஆகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், 'சிமெண்ட் செங்கல்களைக் கொண்டு, பாஜக ரௌடிகள் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இந்த தாக்குதலில், ராகுல் காந்தியின் காருடன் வந்த ஏராளமான கார்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. சிறப்பு பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ராகுல் காந்தி சென்றதாலேயே, இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது' என்றார்.

நரேந்திரமோடி ஆதரவு கோஷம், எனக்கு எதிரான கருப்பு கொடி, கல் வீச்சைக் கண்டு நான் பின்வாங்க மாட்டேன்.
காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநிலத்தின் துணை முதல்வரும், பாஜக மூத்தத் தலைவருமான நிதின் பட்டேல் தெரிவிக்கையில், 'ராகுல் காந்திக்கு புல்லட் ஃப்ரூப் கார் வழங்க குஜராத் அரசு முன்வந்தது.
ஆனால், அதை ராகுல் காந்தி நிராகரித்து விட்டு, சாதாரண காரில் பயணித்தார். குஜராத் எம்எல்ஏக்களாகிய நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உல்லாச விடுதியில் தங்கியிருக்கின்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது' என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தபோது, வெள்ளத்தாலும், ராகுலின் அரசியலாலும் வெறுப்படைந்து இந்த தாக்குதலை பொது மக்கள் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 'வெள்ளத்தினாலும், ராகுல் மற்றும் அவரது கட்சியின் அரசியலினாலும் சோர்வடைந்து போயிருக்கும் நாட்டு மக்களை 'ரௌடிகள்' என்று அழைக்க வேண்டாம். நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...