
காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த விமர்சனம் சரியானதுதான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும், மோடி குறித்து முந்தைய காலங்களில் சோனியா காந்தி பேசியதை நினைவுகூருங்கள் என்றும் ராகுல் காந்திக்கு அவர் பதிலளித்தார்.
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றினார். அப்போது அவர், "மன்மோகன் சிங், பிரதமராக இருந்தபோது, அவரது கண்ணெதிரே பல ஊழல்கள் நடைபெற்றன. எனினும், அவர் மட்டும் கறைபடியாதவராக இருந்தார்; அவருக்கு மட்டுமே மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிப்பது எப்படி? என்ற கலை தெரியும்' என்றார்.
பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இவ்வாறு பேசியதற்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டு நாள்களாக அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
விமர்சனம் சரியானதே...: இந்நிலையில், மன்மோகன் சிங் மீது மோடி வைத்த விமர்சனம் சரியானதுதான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அங்குள்ள நியூ தெஹ்ரி நகரில் பாஜக சார்பில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமித் ஷா பேசியதாவது:
மன்மோகன் சிங் குறித்து மோடி தெரிவித்த கருத்தில் எந்தத் தவறும் இல்லை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்கள் நடைபெற்றன. அதற்கு காங்கிரஸும், மன்மோகன் சிங்கும்தான் பொறுப்பேற்க வேண்டும். மன்மோகன் குறித்த விமர்சனத்துக்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ராகுல் கூறுகிறார். அவருக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். உங்கள் தாயார் (சோனியா காந்தி) மோடியை ஒரு "மரண வியாபாரி' என்று தெரிவித்தாரே? அப்போது அது உங்களுக்கு (ராகுல்) தரம் தாழ்ந்த விமர்சனமாக தெரியவில்லையா? என அமித் ஷா கேள்வியெழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.