

உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் 68 சதவீதம் வாக்குப்பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகளின் விகிதம் 65 சதவீதமாக இருந்ததாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு மாநிலங்களிலும் நடைபெற்ற வாக்குப் பதிவின்போது குறிப்பிடத்தக்க வகையில் எந்தவிதமான அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உத்தரகண்டில்.... மொத்தம் 70 பேரவைத் தொகுதிகள் கொண்ட உத்தரகண்டில் 69 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. சம்மோலி மாவட்டத்தில் அமைந்துள்ள கர்ணபிரயாக் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்த அந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீதமுள்ள தொகுதிகளில் 10,685 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 460 வாக்குச் சாவடிகள் பனி அடர்ந்த பகுதிகளில் அமைந்திருந்தன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வாக்குப்பதிவு காலையில் தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுவதை உணர முடிந்தது.
எவருக்கு வாக்குச் செலுத்தினோம் என்பதை உறுதி செய்வதற்கான மின்னணு வாக்கு ஒப்புகைச் சீட்டு சாதனங்கள் ராணிப்பூர், தர்மாப்பூர், ருத்ராப்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.
உத்தரகண்டைப் பொருத்தவரை, இத்தகைய சாதனங்கள் வாக்குப்பதிவின்போது வைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். வாக்குப்பதிவு நேரம் மாலை 5 மணியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகும் சில வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இறுதி நிலவரப்படி, மொத்த வாக்குப்பதிவு 68 சதவீதம் இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாக்கு விகிதம், கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும்.
உ.பி.யில் இரண்டாம் கட்டம்: உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பிஜ்னோர், சஹாரன்பூர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், பரேலி, அம்ரோஹா, பிலிபித், கேரி, ஷாஜகான்பூர், பதாபூன் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்காக மொத்தம் 14,771 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட தொகுதிகளில் 1.04 கோடி பெண் வேட்பாளர்கள் உள்பட 2.28 கோடி வேட்பாளர்கள் உள்ளனர். மொத்தம் 721 வேட்பாளர்கள் போட்டிக் களத்தில் உள்ளனர். அவர்களில் 62 பேர் பெண்களாவர். முதல் கட்டத் தேர்தலில் 64.2 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலின் வாக்குப்பதிவு விகிதம் 65 சதவீதமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.