சசிகலா அறிக்கை விவகாரம்:  என் மீதான நடவடிக்கையை எதிர்கொள்ள தயார்; கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா உறுதி!

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் தொடர்பான அறிக்கை விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்ள தயார் என்று கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சசிகலா அறிக்கை விவகாரம்:  என் மீதான நடவடிக்கையை எதிர்கொள்ள தயார்; கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா உறுதி!
Published on
Updated on
2 min read

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் தொடர்பான அறிக்கை விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்ள தயார் என்று கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் சசிகலா தற்பொழுது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சமீபத்தில் பரபப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா மௌட்கில், ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில், குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து உள்ளூர் சேனல்களில் செய்தி கசிந்தது.

அதாவது இதற்காக கர்நாடக மாநில சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரூபா எழுதியுள்ள புகார் கடிதத்தில், சிறையில் சசிகலாவுக்கு அனைத்து வசதிகளையும் செய்துத்தர, கர்நாடக சிறைத் துறை இயக்குநர்  சத்யநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், மத்திய சிறைச்சாலை வார்டன் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மொத்தமாக ரூ.1 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்களை அல்லது விளக்கம் அளிக்குமாறு ரூபாவுக்கு மெமோ அளித்துள்ளேன். உண்மையில் இதுபோன்ற புகார் குறித்து எனக்கோ, அரசுக்கு இதவரை எந்த கடிதமும் வரவில்லை என்று ராவ் ஐஏஎன்எஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதே சமயம், 59 வயதாகும் சசிகலாவுக்கு, மத்திய பெண்கள் சிறையில் முக்கியப் பிரமுகர்களுக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும், சிறைச்சாலையில் சசிகலாவுக்கு உணவு தயாரிக்க என்று பித்யேக சமையலறை உருவாக்கப்பட்டு, அங்கு அவர் விரும்பும் உணவுகள் சமைத்துத் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடகா முதல்வர்  சித்தராமையா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது;

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது தொடர்பாக நான் அளித்துள்ள அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன். இந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் தொடர்பாக நான் ஊடகங்களிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் கர்நாடக சிறைத் துறை இயக்குநர்  சத்யநாராயண ராவ் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் லாபம் எதுவுமில்லை. அவ்வாறு இருந்திருந்தால் இதனைப் பற்றி வெளிப்படையாக வெளியில் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இந்த விவகாரத்தில் என்னை மட்டும் சிலர் குறிவைத்து தாக்குவது சிறிது கூட நியாயமற்றது. அறிக்கையின் உண்மைத் தன்மை தொடர்பான விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

இந்த விவகாரம் தொடர்பாக இனி எதுவும் பேசுவதாக இல்லை.

இவ்வாறு ரூபா தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com